இலங்கை மீது சர்வதேச மேற்பார்வையை தக்கவைப்பதில் வெற்றிபெற்ற தமிழர் தரப்பு

இலங்கை  அரசை சர்வதேச மேற்பார்வையுடன் கூடிய நிகழ்ச்சிநிரலுக்குள் வைத்து அழுத்தங்களைக் கொடுக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நகர்வுகள்  சரியென்பது தொடர்ந்தும் நிருபணமாகிவருகின்றது.
 
இம்முறை ஜனாதிபதியின் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37வது கூட்டத்தொடரில் பங்கேற்ற அமைச்சர் சரத் அமுனுகம கடந்த சில நாட்களுக்கு முன்பாக இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறிய கருத்து சர்வதேச மேற்பார்வை என்பது இலங்கை அரசாங்கத்திற்கு எத்தகைய மன உளைவைக் கொடுத்திருக்கின்றதென்பதைக் கோடிட்டுக்காண்பிப்பதாக அமைந்திருக்கின்றது. 
 
யுத்தம் முடிந்து அடுத்தாண்டுடன் 10வருடங்கள் நிறைவடைகின்ற போதும் ஒவ்வொரு வருடமும் ஜெனிவா மனித உரிமை பேரவைக்குச் சென்று பதில் வழங்கும் நிலைமை மாறவேண்டும். இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு உரிய கவனம் செலுத்த வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
ஜெனீவாவில் நல்லிணக்க மற்றும் மனித உரிமை செயற்பாடுகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியிருந்தார். 
 
அமைச்சரின் கூற்று எதனைக் காண்பித்து நிற்கின்றது? இலங்கை அரசைப் பொறுத்தவரையில் சர்வதேச மேற்பார்வைக்குள் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. தன்வழியில் செயற்படுவதற்கு இடமளிக்க வேண்டும் என்பதாகவே அது அமைந்திருக்கின்றது.  
 
இலங்கை அரசின் மீது சர்வதேச அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழர் தரப்பு ஒருமனதாகவே சிந்தித்துச் செயற்படுவது வரவேற்கப்படவேண்டியது. ஆனால் எந்த வகையான அழுத்தம் சாத்தியம் எது சாத்தியமில்லை என்பதை நாம் அறிந்து எமது நகர்வுகளை முன்னெடுப்பதன் மூலமே யதார்த்தத்தில் பிரதிபலனைக் காணமுடியும்.
 
இம்முறை ஜெனிவா அமர்வுகளில் பங்கேற்ற தமிழர் தரப்பு பிரதிநிதிகள் சிலரோ ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தமிழர்களுக்கான நீதி சாத்தியப்படமாட்டாது. எனவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலே இலங்கையைப் பாரப்படுத்துகின்ற சர்வதேச நியாயாதிக்கத்தை நாடுவதன் மூலமாகவே அது சாத்தியமாகும் எனக் கருத்துக்களைக் கூறியிருந்தனர். அவர்கள் கூறுவது நடைமுறையில் சாத்தியமானால் நாமும் அதனை மனதார வரவேற்போம். ஆனால் அது தற்போதைய நிலையில் சாத்தியமில்லை என்பதை புவிசார் அரசியலைப் புரிந்துகொள்பவர்களால் விளங்கிக்கொள்ளமுடியும்.
 
இலங்கை அரசாங்கம் 2015ம் ஆண்டில் தாமாக முன்வந்து இணை அநுசரணை வழங்கிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்திலுள்ள பரிந்துரைகளில் பலவற்றை நடைமுறைப்படுத்துவதில் மிகவும் தாமதமாகவும் சிலவற்றை நிறைவேற்றாமலும் இருக்கின்ற நிலையில் விரக்தியுடன் கூடியதாக இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள ஆணையாளரின் வாய்மூல அறிக்கையின் உள்ளடக்கம் அமைந்திருந்தது. இலங்கை அடுத்த ஒருவருட காலப்பகுதிக்குள் இதனை நிறைவேற்றும் என எதிர்பார்க்க முடியாது. ஆகவே உறுப்பு நாடுகள் உலகளாவிய நியாயாதிக்கத்தை பயன்படுத்த வேண்டும் என  அவர் கோரிக்கை விடுத்திருந்தார். 
 
ஐநா ஆணையாளரே உலகளாவிய நியாயாதிக்கத்தைக் கோரியுள்ள நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையைப் பாரப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை சரியானது என்பதாக அதனைக் கோரும் தமிழர் தரப்பின் வாதம் அமைந்திருக்கின்றது. 
 
நெதர்லாந்தின் ஹேய்க் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஒரு நாட்டைப் பாரப்படுத்த வேண்டுமானால் முதலில் அந்த நாடு உரோம சாசனத்தில் கைச்சாத்திட்டிருக்க வேண்டும். அதுமாத்திரமன்றி அந்த நாட்டு விவகாரம் தொடர்பில் ஐக்கியநாடுகள் பாதுகாப்புச் சபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தமுடியும்.
 
தற்போது பாதுகாப்புச் சபையிலுள்ள நாடுகளில் இலங்கைக்கு சார்பானதும் மேற்குலகிற்கு எதிரானதுமான ரஷ்யாவும் சீனாவும் இருக்கும் போது எப்படி அவர்களின் வீட்டோவைத் தாண்டி இதனை நிறைவேற்ற முடியும் என்பதற்கு அப்பால் பாதுகாப்புச் சபைக்கு இலங்கை விவகாரத்தைக் கொண்டுவந்தால் அதனை அமெரிக்காவே முதலில் எதிர்க்கும் என்பதை நாம் கூறினால் உண்மை தெரிந்தும் தெரியாதவர்கள் போன்று உணர்ச்சிப் பிரசாரங்களை முன்னெடுப்பவர்கள் எமக்கு எதிரான பரப்புரைக்காகப் பயன்படுத்திக்கொள்வார்கள். 
 
ஏன் இப்படிக் கூறுகின்றேன் என்பதற்கு ஒரு காரணம் உண்டு. அமெரிக்கா உரோம சாசனத்தில் இதுவரை கைச்சாத்திடவுமில்லை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அங்கீகரிக்கவுமில்லை. அப்படியிருக்கையில் எப்படி இலங்கை விவகாரத்தை அமெரிக்கா பாதுகாப்புச் சபையில் முன்னெடுக்கும் என்பதை யதார்த்தத்தில் சிந்தித்துப்பார்க்க வேண்டும். இதுதவிர  இலங்கைப் போரின் இறுதிநாட்களில்  உயிரிழப்புக்கள் அதிகமாக நடந்துகெர்ண்டிருந்த போது அதுபற்றி பாதுகாப்புச் சபையில் விவாதிக்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்ட போதே அதனை நிராகரித்த தரப்பினர் தற்போது அதனை முன்னெடுப்பார்களா என்பதை மீண்டுமாக எண்ணிப்பார்க்க வேண்டும்.
 
மறுமுனையில் ஐநா ஆணையாளர் தனது அறிக்கையில் கோரிய உலகளாவிய நியாயாதிக்கம் என்பது போர்க்குற்றம் போன்ற பாரதூரமான சர்வதேச குற்றங்களில் ஈடுபட்ட தரப்பினருக்கு எதிராக உறுப்புநாடுகள் தத்தமது பிராந்திய எல்லைக்குள் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பதையே கோடிட்டுக்காண்பித்துநிற்கின்றது. ஏற்கனவே பிரேசிலில் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜயத் ஜயசூரியவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை அரச சார்பற்ற தரப்பினரே எடுத்திருந்தனர். தற்போது ஐநா ஆணையாளர் கோரும் உலக நியாயாதிக்கத்தின் படி அந்தந்த நாடுகளின் அரசாங்கங்கள் கூட வேறொரு நாட்டில் இடம்பெற்ற போர்க்குற்றம் போன்ற பாரதூரமான சர்வதேசக் குற்றங்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பதையே இது எடுத்தியம்புகின்றது.
 
அமெரிக்காவில் நடத்திய பேச்சுக்களின் போது நாம் உலகளாவிய நியாயாதிக்கத்திற்கு அமைய அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிய போது அங்கிருந்த அதிகாரியொருவர் எமது கருத்தை விளங்கிக்கொள்ளாதவராக அது எப்படிச் சாத்தியம் என கேள்வி எழுப்பியிருந்தார். அமெரிக்கா சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தை அங்கீகரிக்காத நிலையில் இது சாத்தியமற்றதென்பதே அவரது நியாயப்பாடாக இருந்தது. எனினும் நாம் அது சர்வதேச நியாயாதிக்கம் அல்ல உலக நியாயாதிக்கம் என விளக்கிக் கூறியதையடுத்து அமெரிக்காவிலும் அது சாத்தியம் என்பதை அவர் ஏற்றுக்கொண்டார். 
 
இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்துவதற்காக ஜெனிவா மனித உரிமைப் பேரவைச் செயற்பாடுகளில் தலைமைத்துவத்துடன் கூடிய வழிகாட்டலை அமெரிக்கா வழங்கியதைப் போன்று உலகளாவிய நியாதிக்கத்தை இலங்கை விடயத்தில் நிலைநாட்டுவதற்கும் அமெரிக்கா தலைமைதாங்கிச் செயற்படவேண்டும் என வலியுறுத்திய போது அதற்கு எமக்கு சாதகமான பதிலே வழங்க்பபட்டது  நீதியின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. 
 
இலங்கை விடயத்தில் இதுவரைகாலத்தில் ஏதேனும் முன்னகர்த்திருக்கின்றதென்றால் அது அமெரிக்காவின் வகிபாகத்தினாலேயே சாத்தியமானது. ஏனெனில் 2009ம் ஆண்டில் யுத்தம் முடிவிற்குகொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட கையோடு இலங்கை தொடர்பாக ஒரு தீர்மானம் ஐரோப்பிய ஒன்றியத்தால் கொண்டுவரப்பட்டபோது பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை வெற்றிபெற்றதாக வாழ்த்தியே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 2011ல் கனடா இலங்கை தொடர்பாக ஒரு தீர்மானம் கொண்டுவரமுயன்ற போது போதிய ஆதரவின்றி  அது கைவிடப்பட்டது. 
 
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணர்ச்சிவசப்பட்ட காட்டுச்கூச்சலுக்குள் நிதானத்தை இழக்காமல் முன்னெடுத்த சாணக்கியமான நடவடிக்கைகள் காரணமாக 2012ல் அமெரிக்காவின் தலைமையில் இலங்கைக்கு எதிரான முதலாவது தீர்மானம் கொண்டுவரப்பட்டதை இங்கு நினைவுறுத்த விரும்புகின்றேன். தொடர்ந்தும் 2013, 2014 பின்னர் 2015லும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதன் எதிரொலியாகவே இன்றும் இலங்கை சர்வதேச மேற்பார்வை நிகழ்ச்சிநிரலுக்குள் சிக்குண்டு கடும் அழுத்தங்களை எதிர்கொண்டுவருகின்றது. 
 
அந்தவகையில் 2019ம் ஆண்டுடன் நடப்பு தீர்மானம் முடிவிற்கு வருகின்றபோதும் இலங்கை மீதான சர்வதேச மேற்பார்வையை அதனைத் தாண்டியும் தொடரவேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழர் பிரதிநிதிகளும் அமெரிக்க விஜயத்தின் போது முன்வைத்த கோரிக்கையும் ஏற்கப்பட்டுள்ளது நம்பிக்கைக்குரிய விடயமாகும். 
 
எடுத்தோம் கவிழ்த்தோம் என சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்ளாமல் பக்குவமாக காய்களை நகர்த்தியதன் விளைவாகவே தமிழர் தரப்பின் சார்பாக சர்வதேச பார்வையைத் திருப்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சாத்தியமானது. எதிர்வரும் காலத்திலும் உசுப்பூட்டல்கள் உணர்ச்சிப்பிரவாகங்களுக்கு நடுவே உரிமையை வென்றெடுக்கும், நீதியை நிலைநாட்டும் பயணத்தை முன்னெடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிற்கும். 
 
 
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் 
Share the Post

You May Also Like