தமிழ் மக்களின் தீர்வுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த ஏப்ரல் 4ம் திகதி வெற்றி பெறுமென பெரும் கனவுகண்ட பொது எதிரணி தரப்பின் மூக்குடைபட்டுப் போயுள்ளது. சர்வதேச ரீதியிலும், உள்நாட்டிலும் பெரும் பரபரப்பை தோற்றுவித்திருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டு விட்டது. எதிரணியினர் பிரதமரை எப்படியேனும் வெளியேற்றியே தீருவோம் என உறுதிபூண்டு செயற்பட்ட போதிலும், இறுதியில் அவர்கள் தோல்வியடைந்து விட்டனர். 2015 இற்குப் பின்னர் மகிந்த ராஜபக்ஷ தரப்பு சந்தித்த பல தோல்விகளில் இதுவும் ஒன்றாக அமைந்து விட்டது.

உள்ளூராட்சித் தேர்தலின் போது அடைந்த சிறிய வெற்றின் காரணமாக ரணிலை அகற்ற சந்தர்ப்பம் கிட்டியதாகவே அவர்கள் நினைத்தனர். அந்தச் சூட்டோடு நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக சுமத்தியுள்ளனர். விவாதத்தில் இவை எதுவுமே எடுபடவில்லை. மொட்டுக் கட்சியினர் தமது இந்த பிரயத்தனத்துக்கு சுதந்திரக் கட்சியினரை வளைத்துப் பிடிப்பதில் பெரும் ஈடுபாடு காட்டினர். சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்தாலும் குறிப்பிடத்தக்க சிலர் தொடர்ந்தும் மகிந்த விசுவாசிகளாக இருப்பதை விவாதத்தின் போது கண்டுகொள்ள முடிந்தது. மகிந்த தரப்பின் ஒரே இலக்கு ஆட்சியைக் கவிழ்ப்பதேயாகும்.

பாதையை மாற்றி நேர்மையாக சிந்திக்க முன்வருவதன் மூலம் எல்லோருக்கும் பயன்தரக் கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். மக்கள் அரசுக்கு ஆணை வழங்கியுள்ளனர். உரிய பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் அதனை தட்டிப் பறிக்க முயல்வது ஜனநாயக மரபாக இருக்க முடியாது. 2020 வரை பொறுமையுடனும், ஜனநாயக வழிமுறையிலும் அரசியல் பயணத்தை முன்னெடுத்தால் அது ஆரோக்கியமானதாக அமையலாம்.

வெறுமனே பழிவாங்கும் மனப்பாங்குடன் கண்களை மூடிக்கொணடு செயற்பட முனைவதால் படுகுழிக்குள் வீழ்வதைத் தவிர வேறெதுவும் நடந்துவிடப் போவதில்லை. அரசுக்கு உரிய காலஅவகாசத்தை வழங்கி குறைகளைத் திருத்திக் கொள்வதற்கு யோசனை வழங்குவதுதான் முறையானதாகும். ஜனநாயகப் பண்புகளுக்கு முரணாகச் செயற்படுவதை அனுமதிக்க முடியாது. மக்களாணையை பறித்தெடுப்பது ஜனநாயக விரோதச் செயற்பாடாகும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.

இது ஒருபுறமிருக்க நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமர் வெற்றி அடைந்துள்ளார். இது ஒன்றும் இலகுவாக நடந்ததொன்றல்ல. குறைபாடுகளைத் திருத்திக் கொண்டு சரியான பாதையில் பயணிப்பதற்கான ஒருவாய்ப்பே பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தவறுகள் இனிமேலும் நடக்கக் கூடாது. அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் உரிய காலத்துக்குள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்குரிய பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் தொடர்ந்து இழுத்தடிக்கப்படக் கூடாது. தீர்வுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை, காணாமல் போனோர் குறித்த விடயங்கள். நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் விடயத்தில் தாமதமின்றி நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் மற்றொரு தடவை ஏமாற்றப்படக் கூடாது.

அதேபோன்று அம்பாறை, கண்டி, திகன போன்ற பகுதிகளில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத தாக்குதல்களுக்கு உரிய நியாயம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அத்துடன் இனவாதத்துக்கு நாட்டில் இடமளிக்கப்படக் கூடாது. இது விடயத்தில் சட்டங்கள் கடுமையாக்க்கப்பட வேண்டும். இனவாதிகள் எங்கிருந்தாலும், எந்தத் தரப்பிலிருந்தாலும் தராதரம் பாராது உரிய வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இது ஒருபுறமிருக்க, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கட்டமைப்பு மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை உடனடியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். வாக்குகளுக்கான உத்தரவாதங்கள் வழங்கப்படுவது போன்ற கைங்கரியங்களால் எதுவும் நடக்கப் போவதில்லை. அது மோசமான விளைவுகளுக்கே இட்டுச் செல்லும். கட்சிக்குள் பாரிய மாற்றங்கள் இடம்பெற வேண்டுமென்பதில் பெரும்பாலானோர் உறுதியான நிலைப்பாட்டில் காணப்படுகின்றனர். இது விடயத்தில் பிரதமர் அளித்த வாக்குறுதிகள் விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும். இன்னொரு தடவை கட்சிக்குள் முறுகல் ஏற்படுமானால் அது பாரதூரமான விளைவுகளுக்கு காரணமாக அமைந்து விடலாம். தலைமைத்துவத்தின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பாதுகாக்கப்பட வேண்டும்.

பிரதமர் வசம் இன்று இரண்டுவிதமான பொறுப்புக்கள் சுமத்தப்பட்டுள்ளன. முதலாவது அரசியல் பயணம் சீரான முறையில் முன்னெடுத்துச் செல்லப்படுவது, மற்றையது கட்சியை ஜனநாயக ரீதியில் மாற்றியமைத்து வலுப்படுத்துவது. இந்த இரண்டும் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானவையாகும். பொறுப்புள்ள தலைவரென்ற வகையில் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் பொறுப்புக்கள் உரியமுறையில் கையாளப்படாததன் காரணமாகவே மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. அத்துடன் சட்டம் ஒழுங்கு சரியாகப் பேணப்படாததன் காரணமாக அராஜகம் தலைவிரித்தாடியதை நாம மறந்துவிட முடியாது. ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். மக்கள் மத்தியில் நம்பிக்கை வலுவூட்டப்பட வேண்டும். சகல தரப்புகளும் திருப்தி கொள்ளக் கூடியதான நீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை பிரதமர் உறுதிசெய்ய வேண்டும் என்பதே நாட்டின் ஒரே எதிர்பார்ப்பாகும்.

Share the Post

You May Also Like