நத்தை வேகத்தில் நகர்ந்தாலும் நல்லாட்சியை குலையாது பாதுகாக்கவேண்டியது சிறுபான்மை கட்சிகளுக்கு அவசியமாகும்

(சிவசாஸ்திரி)

இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னர் தமிழ் மக்கள் தங்களுக்கான சுயநிர்ணயம் கோரி போராட்டத்தை ஆரம்பித்த பின்னர் ஆளும் சிங்கள தேசியவாத கட்சிகளுக்கு தமது ஆதரவை வழங்குவதை தவிர்த்தே வந்துள்ளார்கள். இதனால் இலங்கையில் நடைபெறும் அரச தலைவருக்கான தேர்தல்களில் பெரும்பான்மை சிங்களதேசியவாத கட்சிகளுக்கு வாக்களிப்பதில் அதீத ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நாட்டில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் இலங்கையின்
அரச தலைவராக வரமுடியாதென்பது எழுதப்படாத சட்டமாகும்.

கடந்த 60 வருடங்கள் தங்களின் சுயநிர்ணய உரிமைக்காக போராடிய தமிழ் மக்கள்இறுதிப்போரின் பின்னர் 2015 சனவரி மாதம் நடைபெற்ற சனதிபதி தேர்தலில் வரலாற்று திருப்புமுனையாக சிங்களத்தேசியவாத கட்சியொன்றின் சார்பில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனாவுக்கு வாக்களித்தார்கள். முன்னாள் அரச தலைவர் மீதிருந்த பகைமை உணர்வாலும், நாட்டில் ஒரு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவேண்டுமென்ற நோக்கிலும் தமது வாக்கு பலத்தை மகிந்தவுக்கு எதிரான “அஸ்திரமாக” பாவித்தார்கள். அதில் வெற்றியும் கண்டார்கள். இலங்கையின் சுதந்திர வரலாற்றில் அரச தலைவரை தமிழ் மக்கள் தீர்மானிக்கும் தேர்தலாக அந்த தேர்தல் முடிவு அமைந்திருந்திமை விசேடஅம்சமாகும்.

சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு அதன் தொடர்ச்சியாக மகிந்தமீது தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு இவையெல்லாம் மைத்திரி தலைமையிலான அரசாங்கம் ஒன்று உருவாக வாய்ப்பாகியது. இதனை தொடர்ந்து 2015 ஆவணி மாதம் நடைபெற்ற பொது தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க ஏதுவாக இருந்தது. இதன்மூலம் இலங்கையில் முதன்முறையாக எதிரும் புதிருமாக இருந்த இரண்டு பேரினவாதக்கட்சிகளும் இணைந்து சிறுபான்மை கட்சிகளின் ஆதரவுடன் நல்லாட்சி எனும் புதிய அரசியல் பயணம் ஆரம்பமாகியது. “நல்லாட்சி” எனும் பதம் நன்மை பயக்கும் என்று அர்த்தப்பட்டுக்கொண்டாலும் ஆரம்பித்ததில் இருந்தே சவால் நிறைந்ததாகவே இருந்து வந்துள்ளது. பொதுவாக இலங்கையில் முன்னாள் அரச தலைவர்கள் தங்களது பதவிக்காலம் முடிவடைந்ததும் அரசியலில் இருந்த ஒதுங்கிவிடுவது வழமை. எனினும் வழமைக்கு மாறாக மகிந்த இராசபக்ச அவர்கள் தனது சொந்த தொகுதியை விட்டு குருணாகல் தொகுதியில் போட்டியிட்டு சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராகி எதிர்கட்சி வரிசையில் உட்கார்ந்தபோதே ஏதோ விபரீதம் எதிர்காலத்தில் நடைபெறப்போகிறதென பலராலும் ஆருடம் கூறப்பட்டது. கடந்தவாரம் அது நிஜமானது. தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கமீதான நம்பிக்கை இல்லாப்பிரேரணையை மகிந்த தலைமையிலான கூட்டு எதிரணி சபாநாயகரிடம் கையளித்தது. எனினும் தனது வழமையான அரசியல் சாணக்கியத்தின்மூலம் அதனை தோற்கடித்தவிட்டார் ரணில் விக்கிரமசிங்க.

இந்த பிரேரணைக்கு தமிழ்கட்சிகள் தமது ஆதரவை வழங்கியுள்ளமை இங்கு கவனிக்கப்படவேண்டியதாகும். பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து தமது ஆதரவை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கி தமிழ் மக்களின் ஆதரவின்றி சிங்கள தேசியவாத கட்சிகள் மத்தியில் ஆட்சி அமைக்கமுடியாதென்பதை மீண்டும் நிரூபித்துக்காட்டியுள்ளார்கள். நல்லாட்சி அரசு தொடரவேண்டுமென்ற நோக்கத்திற்காக தமது ஆதரவை வழங்கியுள்ளார்கள்; என்பதே பொருத்தம். இதில் கூர்ந்து கவனிக்கவேண்டியது என்வென்றால் பிராந்தியத்தில் கீரியும் பாம்பும் போல நடந்து கொள்ளும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முண்ணனி, ஈழமக்கள் சனநாயக்கட்சி போன்றவையும் ஒருமித்து தலைமை அமைச்சருக்கு எதிரான பிரேரணையை தோற்கடிக்க செய்தமை விசேட அம்சமாகும். நீண்டகாலமாக ஏமாற்றப்பட்டக்கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு நிரந்தரமான நியாயபூர்வமான அரசியல் தீர்வொன்று கிடைப்பதற்கான இறுதி சந்தர்ப்பமாகவே நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை பலராலும் பார்க்கப்படுகின்றது. அவ்வாறானதொரு அரசியல் தீர்வு கிடைக்கவேண்டுமெனின் நல்லாட்சி எனும் அரசியல் கூட்டு உடையாது தொடர்ந்தம் பயணிக்கவேண்டுமென்பதே ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும், சர்வதேசத்தினதும் ஒருமித்த விருப்பமாகும். நல்லாட்சி தமிழ் மக்களுக்கான விடயங்களில் ஆமைவேகத்தில் நகர்ந்தாலென்ன நத்தை வேகத்தில்
நகர்ந்தாலென்ன அதனை உடையாது பாதுகாக்க வேண்டிய அவசியம் உரிமைக்காக போராடும் சிறுபான்மை கட்சிகளுக்கும் மக்களுக்கும் அவசியமாகின்றது. ஆளும் நல்லாட்சி அரசு தமிழ் மக்களுக்கான பலவிடயங்களில் அசமந்தபோக்குடன் இருப்பதும், தனது வழமையான பேரினவாத நிகழ்ச்சி நிரலின்கீழ் செயற்படுவதும் தமிழ் மக்களை எரிச்சலூட்டினாலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சில முன்னேற்றகரமான விடயங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளமையை யாராலும் மறுக்க முடியாது. அழுதாலும் அவளேதான் பெறவேண்டுமென்பார்கள். எத்தனைகொடுமைகள் நடந்தாலும் நமக்கான தீர்வை நாமே பெற்றுக்கொள்ளவேண்டும்.

வெளியலிருந்து யாரும் தங்கத்தாம்பாளத்தில்; தீர்வுப்பொதியை கொண்டுவந்து நமக்கு தரப்போவதில்லை. ஓட்டுமொத்த தமிழர்களுக்கு அரணாக இருந்த பலமான கட்டமைப்பு சர்வதேச சதிவலையால் சிதைக்கப்பட்டுள்ள நிலையில் ஆளும் அரசாங்கத்திடம் தந்திரோபாயமாக செயற்பட்டு மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொள்வதே தற்போது தமிழ் மக்கள் முன்னால் உள்ள ஒரேதெரிவாகும். வெறும் உணர்ச்சிபொங்கும் வெட்டிப்பேச்சுக்களால் அப்பாவி மக்களை முறுக்கேத்தி சாதிக்கப்போவது எதுவுமல்லை. இதுவே யதார்த்தமும் ஆகும்.

Share the Post

You May Also Like