வீழ்ச்சியடைந்துவரும் பாரம்பரிய வேளாண்மை செய்கை

மனிதர்கள் பல்வேறு யுகங்களைக் கடந்து விவசாய யுகத்தினுள் பிரவேசித்து விட்டனர். இயற்கைச் சூழலில் காணப்படும் உணவில் தங்கி வாழ்ந்த மனிதன் பிற்காலத்தில் தானாகவே உற்பத்தி செய்த உணவினை நுகர்வதற்கு முற்பட்டனர். சனத்தொகை நெருக்கத்துடன் நிலம் மட்டுப்படுத்தப்பட்டது. அதனால் நிலப்பரப்பிற்கு ஏற்ற வகையில் பயிர்ச்செய்கைகள் இடம்பெற்றன. இலங்கையைப் பொறுத்தவரையில் விவசாயம் பிரதானமானதாகக் காணப்பட்டது.

நாம் பாரம்பரியமாக மேற்கொண்டு வந்த வேளாண்மைச் செய்கை எங்கே? அது வீழ்ச்சியுற்று நவீனமுறையிலான வேளாண்மை செய்கை நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் தாக்கங்கள் புரியாது வேளாண்மைச் செய்கையினை நாம் மேற்கொண்டு வருகின்றோம். எமது முன்னோர்களிடம் காணப்பட்ட வலுவும் சக்தியும் இன்றுள்ளவர்களிடம் இல்லை. விவசாயத்தில் புதிய தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி அதிக விளைச்சல், விதை, உரம், பூச்சி மருந்து, புதிய விவசாய உபகரணங்கள் போன்றவற்றை அறிமுகப்படுத்தி அதிக விளைச்சல், உற்பத்தி செய்வதில் நாம் பாரம்பரிய வேளாண்மைச் செய்கையையினை மறந்து விட்டோம்.

வேளாண்மைக்கு ஏதும் நோய்பிடித்து விட்டால் விவசாயிகளை கிருமி நாசினிக் கடைகளிலே காணலாம். களைகள் முளைத்துவிட்டால் அதனை அடியோடு பிடுங்கிவிட வேண்டும் என்று சிந்திப்பவர்கள் குறைவு. தற்காலிகமாக நிறுத்துவதற்கே நடவடிக்கை எடுக்கின்றனர். நாம் மேற்கொண்டுவரும் வேளாண்மைச் செய்கைக்கு எவ்வளவு கிருமிநாசினி நஞ்சு மருந்துகளை பயன்படுத்துகின்றோம் அவை எமக்கு நோய்களை ஏற்படுகின்றன என்பது தெரிந்தும் மீண்டும் மீண்டும் அதனையே செய்து வருகின்றோம்.

கிருமி நாசினிகளுக்கு அதிகம் செலவு செய்துவரும் விவசாயிகள் கிருமிநாசினிகளினால் பயிர்கள் நல்ல நிலையினை அடையவில்லை எனில் மீண்டும் மீண்டும் செலவு செய்து நஷ்டம் கிடைக்க தற்கொலை செய்துகொள்ளுகின்ற நிலை காணப்படுகின்றன. ஏன் ஆரம்பகாலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை? வயல்களில் பூச்சிகள் வந்துவிட்டால் இயற்கை முறையிலே அவற்றை விரட்டுவதற்கு பணம் தேவைப்படவில்லை. ஆனால் இன்று விரட்டிகள் கலன்களிலும் போத்தல்களிலும் அடைக்கப்பட்டு விலைகளும் அச்சிடப்பட்டுள்ளன. இதனைக் கொள்வனவு செய்ய அடகு வைக்கின்றான், வயல் நட்டமடைய தற்கொலை செய்கின்றான்.

சில விவசாயிகள் தங்கள் உணவிற்கு மாத்திரமான போதியளவு நெல்லை இயற்கை வேளாண்மை செய்கை மூலம் செய்து அறுவடைசெய்கின்றனர். ஏனைய வயல் காணிகளில் உள்ள வேளாண்மையினை இரசாயனம் கலந்த வேளாண்மை செய்கையாக மேற்கொண்டு நெல்லை அறுவடை செய்து ஏற்றுமதி செய்கின்றார்கள். அதனை உண்ணும் நாம் நடமாடும் நோய் வண்டிகளாகவே நடமாடுகின்றோம். ஆரம்பத்தில் பயிரிப்பட்ட முருங்கக்காயன், பச்சைப்பெருமாள், இளங்கலையன், முல்லைநெல், மணல்வாரி போன்ற நெல் இனங்கள் அழிவடைந்தமைக்கு காரணம் யாது?

தற்பொழுது விவசாயிகள் குறிப்பிட்ட ஓரிரு நெல் இனங்களையே விதைத்து வருகின்றார்கள். அதிக இலாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக காய்களாக உள்ள நெற்கதிர்களுக்கு அறுவடைக்குத் தகுதியான நெற்கதிர்களாக மாற்றுவதற்கு ஒருவகையான எண்ணையினைப் விசிறி பழுக்க வைக்கின்றனர். அதன்பிற்பாடு அறுவடை செய்து ஏற்றுமதி செய்கின்றார்கள். ஆரம்பகாலத்திலே விவசாயம் செய்வதென்றால் கொண்டாடி மகிழ்வதாக இருந்தது. ஆனால் இன்று தனிமனிதப் பண்பாக மாறிவிட்டது. வயலில் விதைத்ததுகூட மற்றவர்களுக்கு தெரியாது போய்விடுகின்றது. காலமும் தேவையில்லை, நேரமும் தேவையில்லை.

உலக நடைமுறைகளுக்கு ஏற்ப நாமும் நடந்து கொள்ளவேண்டும் என்பதற்காக அதிக நோய்களுக்கு அடிமையாகின்றோம்;. நோய்கள் வந்ததன் பிற்பாடு கூட சிந்திக்கின்றோம் இல்லை. எமது நாட்டில் உற்பத்தி செய்யும் நெல்லை ஏற்றுமதி செய்துவிட்டு வெளிநாட்டில் இருந்து வரும் அரிசிகளை கொள்வனவு செய்து சமைத்து சாப்பிடுகின்றவர்களாகக் காணப்படுகின்றோம்.

பாரம்பரிய வேளாண்மைச் செய்கையானது வீழ்ச்சியடைந்து கொண்டு செல்வதற்கு பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக அமைவது மழைநீராகும். காடுகளை அழிப்பதனால் பருவகாலங்களில் பெய்யும் மழை பருவகாலத்தில் பெய்யாது விடுகின்றது. இதனால் நீர்ப்பாசனக் குளங்களை நம்பியே விவசாயம் செய்யவேண்டியுள்ளது. எல்லா வயல்களுக்கும் நீர் கிடைக்காமையினால் விவசாயிகள் செய்கை பண்ணாமலே விடுகின்றனர்.

ஆரம்பகாலங்களில் ஒவ்வொரு வீட்டிலும் மாடுகள் இருந்தன. நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக அவ் மாடுகள் காடுகளுக்கு சென்றும் அழிந்தும் விட்டன. ஆயினும் சிலரிடம் மாடுகள் இருந்தாலும் உழுதுவதற்குரிய மாடுகள் இன்மையும், ஏர்கள் இன்மையும், ஏர் பூட்டி உழுதுவதற்கு தெரியாதவர்களாகவும் காணப்பட்டதோடு காலங்கள் அதிகம் தேவைப்படுவதனாலும் இவற்றைக் கைவிட்டு உழவு இயந்திரங்களை நாடவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

பாரம்பரியமாக பயிரிடப்பட்டு வந்த நெல் இனங்கள் தற்பொழுது பயன்படுத்தப்படுவதில்லை. அவ் நெல்லினங்கள் அதிக இலாபத்தை தருவதில்லை என்ற கருத்துக்கள் மக்களிடம் காணப்படுகின்றது. 1 ஏக்கருக்கு 35 – 40 மூடைகள் விளைய வேண்டும். ஆனால் அந்த இனங்கள் குறைவாக தருகின்றன என்பதனால் அதனைப் பயிரிடுவதில்லை என்கின்றார்கள்.

ஆரம்பகாலத்தில் களைநாசினிகள் வயலில் இருந்தால் களைகளைப் பிடுங்குவதற்கு பெண்கள் வேலைக்கு செல்வார்கள். தற்பொழுது பெண்கள் களைபிடுங்குவதற்கு செல்வதில்லை. இதனால் விவசாயிகள் களைநாசினி நஞ்சு எண்ணைகளை பயன்படுத்துகின்றார்கள். வேளாண்மைக்கு நோய்த்தாக்கம் ஏற்பட்டு விட்டது எனில் அதனை இயற்கையாக செலவு இல்லாது நோய்களை அழிக்கும் பொருட்களை வைத்து எண்ணைகள் தயாரித்து விசிறினார்கள். ஆனால் இன்று பொருட்களை எடுத்து எண்ணைகள் தயாரிப்பதற்கு இடையில் பயிர்கள் அழிந்துவிடும் என்பதனால் உடனடியாக நஞ்சு எண்ணைகளை கொள்வனவு செய்துகொண்டு பயிர்களுக்கு விசிறுகின்றார்கள்.

அறுவடைக்காலங்களிலே ஊர்களில் முகாமைக்காரர்களும் அவர்களுக்குக் கீழ் பலர் சேர்ந்து குழுக்களாக இருப்பர். இவர்கள் வேளாண்மை அறுவடை செய்யும் குழுக்களாகும். அதேபோல் சூடு போடுவதற்கும் குழுக்கள் இருக்கும். ஆனால் தற்பொழுது இவ்வாறான குழுக்கள் இல்லை. இவர்கள் வேறு தொழில்களுக்கும் மத்திய கிழக்காசிய நாடுகளுக்கு வேலைக்கு செல்வதனால் விவசாயிகள் வெட்டு இயந்திரங்களை நாடவேண்டிய தேவை உருவாகி விட்டது.

குறைந்தளவு வேளாண்மைச் செய்கையினை மேற்கொண்டு வந்தவர்கள் தற்பொழுது பல ஏக்கர்கள் வேளாண்மை செய்து வருகின்றனர். இதற்கு காரணம் இயந்திரங்களின் வருகையே ஆகும். மேற்குறிப்பிட்ட காரணங்கள் மூலமும் பாரம்பரிய வேளாண்மைச் செய்கைகள் வீழ்ச்சியடைந்து கொண்டு செல்கின்றது.

தற்கால சந்ததியினருக்கும் இனிவரும் சந்ததியினருக்கும் நாம் வயலில் பயன்படுத்தும் உபகரணங்கள் எவை, எவ்வாறானது என்பது தெரியாமலேயே பேய்விடும். எமது பாரம்பரியங்கள் அழிவடைந்து செல்வதற்கு இதுவும் ஓர் காரணமாகும். மேலும் விவசாயிகளும் எதிர்காலத்தில் குறைவடைந்து கொண்டே செல்வார்கள். நோய்களும் அதிகரித்துக்கொண்டே செல்லும்.

மகிழையாள்.

Share the Post

You May Also Like