வவுனியா நகரசபையை கைப்பற்ற சிங்களத் தேசிய கட்சிகள் முஸ்தீபு முறியடிக்க தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றுபடுமா?

(சிவசாஸ்திரி)

நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் பரீட்சிக்கப்பட்ட கலப்பு தேர்தல் முறைமை கட்சிகள் மத்தியில் மட்டுமல்ல கட்சிகளுக்கு வாக்களித்த மக்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 1970 களிலிருந்த வட்டார முறைமைக்கு பதிலாக விகிதாசாரத் தேர்தல் இதுவரையில் நடைமுறையிலிருந்தபோதும் தேசிய அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொண்டபின்னர் தேர்தல் முறைமைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் விகிதாசார மற்றும் வட்டார தேர்தல்முறைமைகளை உள்ளடக்கியதாக கலப்பு தேர்தல் முறைமையொன்றை முதன்முறையாக கடந்த மாசி மாதம் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் அரசாங்கம் பரீட்சித்து பார்த்தது. எனினும் இந்த முறைமையானது மக்கள் மத்தியில் அதிக ஆதரவைக்கொண்ட கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவகையில் அமைந்தது. அதேவேளை சிறியகட்சிகள்இ சுயேச்சைக் குழுக்களுக்கு வாய்பாக அமைந்தது. இதனால் தேசிய அரசுக்குள் நெருக்கடி ஏற்படுமளவிற்கு இந்த முறைமை தாக்கம் செலுத்தியுள்ளது.

வடகிழக்கில் அதிகப்படியான வாக்குகளைப்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றபோதும் பெரும்பாலான சபைகளில் தனித்து ஆட்சி அமைப்பதில் சவால்களை எதிர்நோக்கியது. இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பது தொடர்பில் கொள்கை பிரகடனமொன்றினை வெளியிட்டது. அதாவது சபைகளில் அதிகூடிய ஆசனங்களை தனித்துப்பெற்ற கட்சி ஆட்சி அமைக்க ஏனைய கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென்பது. எனினும் முதலாவது சபை அமர்வான யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான முதல்நாள் அமர்வில் குறைந்த ஆசனங்களைப்பெற்ற தமிழ்த் தேசிய முன்னணி தனது கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளர் ஒருவரை நிறுத்தியதன்மூலம் கூட்டமைப்பின் கொள்கைப்பிரகடனம் செயலிழந்து போனது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளின் அதரவுடன் வடக்கு கிழக்கில் தனக்கு சாதகமான இடங்களில் பெரும்பாலான சபைகளின் ஆட்சி அதிகாரத்தை தனதாக்கி கொண்டுவருகின்றது. நிலைமை இவ்வாறு இருக்க வவுனியா நகர சபையின் ஆட்சியை கைப்பற்ற ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் முயன்றுவருவதாக அறியமுடிகின்றது. மொத்த வாக்கில் 39.07 வீதமான வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசிக்கூட்டமைப்பு 08 ஆசனங்களை நேரடி வட்டார தேர்வில் தனதாக்கிகொண்டுள்ளது. அதற்கு அடுத்ததாக 14.02 வீதமான வாக்குகளைப் பெற்று விகிதாசார முறைமையின்கீழ் 03 ஆசனங்களை தமிழர் விடுதலைக் கூட்டணியும், 6.27 வீதமான வாக்ககளைப் பெற்று அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் விகிதாசார முறைமையில் ஒரு ஆசனத்தையும், 4.66 வீதமான வாக்குகளைப் பெற்று ஈழமக்கள் சனநாயக்கட்சி விகிதாசார முறைமையில் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ள நிலையில் தமிழ்த் தேசியக்கட்சிகளுக்கு மொத்தமாக 13 ஆசனங்கள் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் சிங்களத் தேசியக்கட்சிகளான சிறிலங்கா சதந்திரக்கட்சி 15.62 வீதமான வாக்குகளைப்பெற்று 04 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 13.88 வீதமான வாக்குகளைப்பெற்று 04 ஆசனங்களையும் (இரட்டை அங்கத்தவர் வட்டாரம் உட்பட) மகிந்த இராசபக்சவின் பொதுஜன பெரமுன 3.31 வீதமான வாக்குகளைப் பெற்று விகிதாசார முறைமையில் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன. ஆக 64.02 வீதமான வாக்குகளை தமிழ்த் தேசியக்கட்சிகள் பெற்றுள்ள நிலையில் 32.81 வீதமான வாக்குகளைப்பெற்றுள்ள சிங்கள தேசியக்கட்சிகள் ஆட்சி அமைக்க முயற்சிப்பதானது சனநாயகப்படுகொலையாகவே கருதவேண்டியுள்ளது.

இந்த நிலையில் தேர்தல்காலங்களில் தாங்கள்தான் தமிழ் மக்களின் உண்மையான பாதுகாவலர்கள் என்று மார்தட்டிக்கொள்ளும் தமிழ் தேசியக் கட்சிகள் தங்களின் கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழ் மக்களுக்காக ஒன்றுபடுவார்களா என்பதே தற்போதுள்ள கேள்வி. சுய அரசியல் இலாபத்திற்காக இவர்கள் சோரம்போனால் 90 வீதமான தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தில் அமைந்துள்ள நகரசபையின் ஆட்சி அதிகாரம் சிங்கள தேசியவாத கட்சிகளிடம் செல்வதை யாராலும் தடுக்கமுடியாது.

Share the Post

You May Also Like