நல்லுறவுகள் நாட்டில் துளிர்த்தெழட்டும்!

தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு நாளை பிறக்கின்றது. இந்நாட்டின் பெரும்பான்மையினத்தவரான சிங்கள மக்களுக்கும், முதலாவது சிறுபான்மையினத்தவரான தமிழ் மக்களுக்கும் பொதுவான சிறப்பான பண்டிகையாக சித்திரைப் புத்தாண்டு அமைந்திருப்பதனால், வழமை போலவே இம்முறையும் புதுவருடக் கொண்டாட்டம் வெகுவாகக் களைகட்டியிருக்கின்றது.

இந்துக்களின் பண்டிகைகளில் தனித்துவம் கொண்டதாக சித்திரைப் புத்தாண்டு விளங்குகின்றது. தைப்பொங்கல் பண்டிகையானது உழவர்கள் சூரிய பகவானுக்கு நன்றிக்கடன் செலுத்துகின்ற திருநாள். தீபாவளிப் பண்டிகையானது நரகாசுரனை வதம் செய்ததன் நினைவாகக் கொண்டாடப்படுகின்ற திருநாள்.

ஆனால் சித்திரைப் புத்தாண்டுப் பண்டிகை அவ்வாறானதல்ல… இது சூரிய பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்பட்டுள்ள திருநாள் ஆகும்.

சமய ரீதியான நம்பிக்கைகளுக்குப் பதிலாக கிரகங்கள், நட்சத்திரங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து புதுவருடத்தைக் கணித்திருக்கின்றார்கள் எமது முன்னோர்.

இப்பண்டிகையின் மற்றொரு விசேடமானது இந்துக்களுக்கும், பௌத்தர்களான சிங்கள மக்களுக்கும் பொதுவான பண்டிகையாக சித்திரை வருடப் பிறப்பு அமைந்திருப்பதாகும்.

இரு இனங்களுக்கும் பொதுவாக எவ்வாறு சித்திரைப் புத்தாண்டு பொதுப் பண்டிகையாக அமைந்திருக்கிறது என்பதற்கு இந்து, பௌத்த சமயப் பெரியார்களாலேயோ அல்லது வரலாற்று ஆசிரியர்களாலேயோ இதுவரை ஆதாரங்களுடன் விளக்கங்களைக் கூற முடியவில்லை. ஆனாலும் இந்துக்களினதும் பௌத்தர்களினதும் மூதாதையர்களாக இந்திய தேசமெங்கும் அக்காலத்தில் பரவி வாழ்ந்த மக்கள் வானசாஸ்திரத்தில் சிறந்து விளங்கியதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.

எனவே கிரக நிலைகளை வைத்துக் கணிக்கப்பட்ட புதுவருடமானது வட இந்தியாவிலிருந்து வருகை தந்த ஆரியர்களாலும், தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த திராவிடர்களாலும் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டிருக்கலாமென்பதே பொதுவான நம்பிக்கையாகும். எனவேதான் இப்பண்டிகையானது இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்குமான பொதுப் பண்டிகையாக நிலைபெற்று விட்டது.

எமது முன்னோர்களின் வானசாஸ்திரம் வெறும் ஐதீக நம்பிக்கையல்ல. வட இந்தியாவில் பரவியிருந்த ஆரியக் குடிகளும், தென்னிந்தியாவில் எழுச்சி பெற்றிருந்த திராவிடர்களும் வானசாஸ்திரத்தில் சிறந்து விளங்கினார்கள் என்பதற்கான ஆதாரங்கள் நிறையவே உள்ளன. இன்றைய காலத்தில் தோன்றுகின்ற சந்திர, சூரிய கிரகணங்களையெல்லாம் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட காலப் பகுதியில் எவ்வாறு அவர்களால் துல்லியமாக கணித்து வைக்க முடிந்தது என்ற வினாவுக்கு விடை தேட முற்படுவோமானால் எமது முன்னோர் அன்று பெற்றிருந்த அறிவியல் வளர்ச்சியை எம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இலங்கையில் இந்துக்களாலும் பௌத்தர்களாலும் கொண்டாடப்படுகின்ற சித்திரைப் புத்தாண்டு எத்தனை காலம் தொன்மை வாய்ந்ததென்பதை இன்னுமே அறுதியிட்டுக் கணிக்க முடியாதிருக்கின்றது.

பண்டைக் காலத்தில் இதனை தமிழ் – சிங்களப் பண்டிகையென்றே அழைத்திருக்கின்றார்கள். இந்து மதமும் பௌத்தமும் தவிர வேறெந்த மதங்களும் இலங்கையில் பரவியிருக்காத காலப் பகுதியில் இந்துக்களாக தமிழர்களும், பௌத்தர்களாக சிங்களவர்களும் மாத்திரமே வாழ்ந்துள்ளனர். வேறு மதங்கள் இலங்கையில் நிலவாத பண்டைய காலத்தில் தமிழ் – சிங்களப் பண்டிகையென்றே இதனை எமது முன்னோர் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் அரைநூற்றாண்டுக்கு முற்பட்ட காலப் பகுதியில் வேறு மதங்களின் பரவல் இலங்கையில் ஆரம்பமாகியதும், தமிழ் – சிங்களப் புதுவருடம் என்பது இந்து – பௌத்த பண்டிகையாக மாற்றம் பெற்று விட்டது என்கின்றார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

அதேசமயம், இலங்கையில் ஐரோப்பியரின் வருகைக்கு முற்பட்டதான (கி. பி. 500 இற்கு முன்னர்) மன்னராட்சிக் காலப் பகுதியில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் இராஜதந்திர ரீதியான நட்புறவுகள் நெருக்கமாக இருந்ததற்கான ஒரு அடையாளமாகவும் சித்திரைப் புதுவருடம் திகழ்வதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கையின் சிங்கள மன்னர்கள் தென்னிந்திய ஆட்சியாளர்களுடனான தங்களது உறவைப் பலப்படுத்தும் நோக்கில் தங்களது இளவரசர்களுக்கும் தென்னிந்திய இளவரசிகளுக்கும் திருமண சம்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். தென்னிந்தியாவில் மூவேந்தர்களுக்கிடையே யுத்தம் மூண்ட வேளைகளில் இங்கிருந்த சிங்கள மன்னர்கள் தமது படைகளை அனுப்பி உதவி புரிந்துள்ளனர். அங்கு உணவுப் பஞ்சம் நிலவிய வேளையில் சிங்கள மன்னர்கள் அரிசி அனுப்பி ஆதரவளித்த தகவல்கள் தென்னிந்திய இலக்கியங்களில் பதியப்பட்டுள்ளன.

இவ்வாறு தொன்றுதொட்டு நிலவிய சிங்கள – தமிழ் நல்லுறவின் அடையாளங்களில் ஒன்றாகவே சித்திரைப் புத்தாண்டும் அமைந்திருக்கின்றது.

இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் காலம்காலமாக சித்திரைப் புத்தாண்டை பொதுப்பண்டிகையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனரே தவிர, இனரீதியிலும் அரசியல் ரீதியிலும் அன்றைய ஐக்கியம் இன்னும் மீளக் கட்டியெழுப்பப்படவேயில்லை.

இதற்கான காரணம் எமது அரசியல்!

தமிழ் – சிங்கள நல்லுறவை மீண்டும் கட்டியெழுப்ப இரு இனங்களையும் சேர்ந்த அரசியல்வாதிகள் திடசங்கற்பம் பூண வேண்டும். அதுவே சித்திரைப் புத்தாண்டுக்கான சுபிட்சம் தரும் செய்தியாக அமையும்.

 

நன்றி : எஸ் குணராசா

Share the Post

You May Also Like