நல்லிணக்க சமிக்ஞையாக அரசியல் கைதிகள் உடன் விடுதலை வேண்டும்

அடுத்த (மே) மாதம் 19ம்திகதியுடன் இலங்கையில் முப்பது வருட காலத்துக்கும் மேலாக நீடித்த யுத்தம் ஓய்ந்து போய் ஒன்பது வருடங்கள் நிறைவடையப் போகின்றது. கொடிய யுத்தம் ஏற்படுத்திச் சென்றுள்ள தழும்புகள் ஏராளம். நேரடியாகவும் மறைமுகமாகவும் விளைவித்துச் சென்றுள்ள யுத்தப் பாதிப்புகளை இலங்கையர்கள் இலகுவில் மறந்தவிட முடியாது. அதே சமயம் யுத்தத் தழும்புகளை சீர்செய்வதும் இயலுமான காரியமல்ல.

யுத்தத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தவர்கள் பாதுகாப்புப் படையினரும் தமிழீழ விடுதலைப் புலிகளுமாவர். அதாவது பாதுகாப்புப் படைகளில் பெருமளவானோர் பெரும்பான்மை சமூகத்தின் இளவயதினர். அதேபோன்று மற்றைய தரப்பினர் விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளான தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இளவயதினர்.

தமிழினத்துக்கு யுத்தம் ஏற்படுத்திய கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. பல்லாயிரக் கணக்கான உயிர்கள் இழக்கப்பட்டு விட்டன. அவை மீளப்பெறப்பட முடியாதவை உயிர்களும் உடைமைகளும் மாத்திரம் அழிந்துபோய் விடவில்லை. தமிழர் சமூகத்தின் பண்பாட்டு அடையாளமே அழிந்துபோய் விட்டதெனக் கூறுவதே இங்கு பொருத்தம்.

இதுபோன்ற பாதிப்புகள் தமிழினத்துக்கு மாத்திரம் ஏற்பட்டு விடவில்லை. யுத்தத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினரிலும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து போயிருக்கின்றனர். அவர்களது குடும்பத்தினருக்கும் அந்த உயிரிழப்புகள் ஆறாத வடுவையே ஏற்படுத்திச் சென்றிருக்கின்றன. ஒவ்வொரு சமூகத்துக்கும் யுத்தம் பெரும் பாதிப்புகளையே ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நடந்து முடிந்துள்ள யுத்தம் சாதாரணமானதொன்றல்ல. உலகின் மிகப் பலம் வாய்ந்த போராட்ட இயக்கமாக சர்வசே இராணுவ ஆய்வாளர்களால் அக்காலத்தில் அடையாளப்படுத்தப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கும், இராணுவ வல்லமை பொருந்திய அரசாங்க பாதுகாப்புப் படைகளுக்குமிடையே நடந்துள்ள தீவிரமான யுத்தம் அது!

மூன்று தசாப்த காலத்துக்கு மேலாக நீடித்த யுத்தம் முடிவுக்கு வந்து விடுமென எவருமே நினைத்திருக்கவில்லை. ஆனாலும் யுத்தம் முற்றாகவே ஓய்ந்துபோய் விட்டது.

தீவிரவாத இயக்கமொன்று முற்றாக அழித்தொழிக்கப்பட்டு விட்டது என்பதற்காக அந்த இயக்கம் சார்ந்த இனமான தமிழர்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகளும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டன என்று எண்ணுவது விவேகமானதல்ல. அதே சமயம் தமிழினத்தின் அரசியல் உரிமைக் கோரிக்கைகளை அடக்குமுறைகளால் கட்டுப்படுத்தி விடலாமென்று கருதுவதும் புத்திசாலித்தனமானதல்ல. இவையிரண்டுமே தவறான கருதுகோள்கள் ஆகும்.

வடக்கு,- கிழக்குத் தமிழினத்தின் மத்தியில் இருந்து மீண்டுமொரு ஆயுதப் ​போராட்டம் உருவெடுப்பதற்கான சாத்தியங்கள் முற்றாகவே இல்லையென்பது, உண்மையாக இருக்கலாம். ஆனால் அரசியல் உரிமைகளுக்கான தாகம் அவ்வினத்தின் மத்தியில் என்றும் தீராமல் இருந்து கொண்டேயிருக்கின்றது.

தமிழர்களின் இதயத்தில் என்றுமே கனன்று கொண்டிருக்கின்ற அரசியல் உரிமைகளுக்கான எண்ணங்களை அடக்குமுறைகளால் தணித்து விட முடியாது. அவ்வினத்தின் மத்தியில் யுத்தம் ஏற்படுத்திச் சென்றுள்ள காயங்களை குணமாக்குவதும். நீதியான அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதுமே தமிழினத்தின் அரசியல் உரிமைத் தாகத்தைத் தணிக்கும் வழிமுறைகள் ஆகும்.

தமிழினத்தின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்த்து வைக்கக் கூடிய அரசியல் தீர்வென்பது இப்போது அவநம்பிக்கைக்கு உரியதாகி விட்டது. நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு மூன்று வருடங்கள் கடந்திருக்கும் இன்றைய நிலையில் அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் இம்மியளவுதான் நகர்ந்திருக்கின்றன. அரசியல் தீர்வு முயற்சிகள் அதன் உரிய இலக்கை எட்டுவதற்கான களநிலைவரத்தை நாட்டின் அரசியலில் காண முடியாதிருக்கின்றது. இன்றுள்ள அரசியல் நெருக்கடியான சூழலில்,இனப்பிரச்சினைத் தீர்வுகான அரசியல்யாப்பை முழுமைப்படுத்துவதென்பது சாத்தியப்படுமெனத் தோன்றவில்லை.

புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகள் ஒருபுறம் இருக்கட்டும்… யுத்தம் விளைவித்துச் சென்றுள்ள தழும்புகளை நீக்குவதற்கான முயற்சிகளையாவது அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாதா என்பதே தமிழினத்தின் இன்றைய ஆதங்கமாக உள்ளது.

காணாமல் போனோர் விடயத்தில் அரசு தர்மசங்கடமான நிலையில் இருப்பது புரிகின்றது. காணாமல் போனோர் அத்தனை பேருக்கும் நடந்த கதி எதுவாயிருக்குமென அறுதியிட்டுக் கூற முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது.

ஆனால் அரசியல்கைதிகள் விவகாரம் அவ்வாறானதல்ல. தமிழ் அரசியல் கைதிகளின் அவலம் எமது கண்முன்னால் கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்தபடி செல்கின்றது. வழக்குகளுமின்றி, தீர்ப்புமின்றி ‘அரசியல் கைதிகள்’ என்ற நாமத்துடன் சிறைக்குள் வாழ்வோரில் பலர் கால்நூற்றாண்டுக்கு மேலாக விடுதலைக்காக ஏங்கியவண்ணம் உள்ளனர். இவர்களில் பலர் குற்றங்களில் சம்பந்தப்படாத சந்தேகநபர்களென்று தகவல்கள் வந்துள்ளன. மேலும் பலர் தவறென்று புரியாத காரியங்களில் ஈடுபட்டதனாலும், புலிகளின் பலவந்தத்தினாலும் சிறுசிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களென்றும் கூறப்படுகின்றது.

தீவிரவாதமும் யுத்தமும் முற்றுப் பெற்றுவிட்டன. கறைபடிந்த நீண்ட பாதையொன்றை எமது நாடு கடந்து வந்துள்ளது. ஆனாலும் யுத்தத்தை நினைவுபடுத்தியபடியே இருக்கும் அடையாளங்களை இன்னமும் அகற்றாமல் வைத்திருப்பது முறையல்ல.

யுத்தத்தை என்றும் நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும் அடையாளங்களில் ஒன்றாகவே தமிழ் அரசியல்கைதிகளின் அவலமும் உள்ளது. தமிழ் அரசியல்கைதிகளை விடுதலை செய்வதன் மூலம் அவர்களின் நீண்டகாலத் துன்பத்தை நீக்குவது ஒருபுறமிருக்க, யுத்தத் தழும்புகளில் ஒன்றையும் ஆற்றிக்கொள்ள வழியேற்படும். மனிதாபிமான ரீதியில் தீர்வுகாணப்பட வேண்டிய விடயம் இது!

இந்த நாட்டில் இரண்டு கிளர்ச்சிகளில் நேரடியாகத் தொடர்புபட்ட ஜேவிபி இயக்கத்தின் அங்க்ததவர்கள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்படமுடியுமாக இருப்பின் ஏன் விடுதலைப்புலிகளை அவ்வாறு விடமுடியாது. ஜேவிபியினர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் விடுவிக்கப்பட்டார்கள். விடுதலைப்புலிகள் தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பழிவாங்கப்படுகின்றனர் என தமிழ் மக்கள் தொடர்ந்தும் நினைப்பார்களேயானால் இந்த நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பமுடியாது போய்விடும்.

Share the Post

You May Also Like