ஆரோக்கியமற்ற நிலைமையில் தமிழ்த் தேசிய அரசியல்!

தமிழ்த் தேசிய அரசியல் இப்போது பரபரப்பு நிறைந்த திருப்புமுனைப் புள்ளியொன்றுக்கு வந்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீண்ட கால வெற்றிப் பயணம் தற்போது முக்கியத்துவம் மிகுந்த இடமொன்றில், பலவிதமான குழப்பங்களுடனும், தடுமாற்றங்களுடனும் தேக்க நிலையை அடைந்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில் தற்போது கொண்டிருக்கின்ற செல்வாக்கை முன்னைய காலத்துடன் ஒப்பிட்டு விட முடியாது. தமிழ் மக்கள் மத்தியில் அதன் செல்வாக்கு  முன்பிருந்ததைவிடவும் சற்றே சரிவடைந்திருக்கிறதென்பது மறைக்கப்படக் கூடியதல்ல.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் ஏற்பட்ட கணிசமான சரிவும், ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளின் சிறுஎழுச்சியும் வெளிப்படையாகத் தெரிகின்ற உண்மைகளாகும். உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான எச்சரிக்கை மணியாகவும் நாம் கொள்ள முடியும்.

வடக்கு,- கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்க் கூட்டமைப்பானது அதன் வழமையான செல்வாக்கை சற்று இழந்திருப்பதற்கான காரணங்கள் விரிவாக ஆராயப்பட வேண்டியவையாகும். தமிழ்க் கூட்டமைப்பு மீது வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் தற்போது சுமத்துகின்ற குற்றச்சாட்டுகள் தனித்தனியாக ஆராயப்பட வேண்டும்.ஏனெனில் வடக்குத் தமிழர்களின் குற்றச்சாட்டுகளும், கிழக்கு மக்களின் குற்றச்சாட்டுகளும் வேறுபட்டவையாக இருக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்தகால அரசியல் செயற்பாடுகளை தமிழ் மக்கள் இப்போது ‘நீண்ட கால விரயங்களும் தவறுகளும்’ என்றபடி வெளிப்படையாகவே விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றனர். ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையானது இன்றும் கூட ‘முஸ்லிம் மக்களின் இணக்கப்பாட்டுடன் வடக்கு,- கிழக்கு இணைந்த மாநிலத்தில் சமஷ்டித் தீர்வு காணலாம்’ என்று நம்பிக்கையுடன் பேசிக் கொண்டிருக்கிறது.

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று வருடங்கள் கடந்த பின்னரும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, காணாமல் போனோர் விவகாரம், மனித உரிமை மீறல்கள் தொடர்பான நீதி விசாரணை, அரசியல் கைதிகள் விடுதலை என்றெல்லாம் தீர்க்கப்படாத விடயங்கள் இன்னுமே தேக்க நிலையில் இருக்கையில், தமிழ்க் கூட்டமைப்பு மீதான விமர்சனங்கள் தவிர்க்க முடியாதவையாகும்.

இவ்வாறான நிலைமையில் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்களுக்கு புதிதுபுதிதாக பல்வேறு நெருக்கடிகளும் அதிகரித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், சமஷ்டி தொடர்பான நம்பிக்கையை இன்னுமே தமிழ் மக்களிடம் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதை எவ்வாறு மக்கள் ஏற்றுக் கொள்ள முடியுமென்ற வினா எழுகின்றது.

தமிழ்க் கூட்டமைப்பு எதிர்கொண்டுள்ள செல்வாக்கு வீழ்ச்சி இவ்வாறிருக்கையில், வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தனிக்கட்சியொன்றை அமைக்கப் போவதாக தமிழர் அரசியலில் தற்போது பரபரப்பொன்று நிலவிக் கொண்டிருக்கின்றது. இத்தகவல் உண்மையென்பது உறுதி செய்யப்படாத போதிலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட வடக்கு அரசியல்வாதிகள் சிலர் விக்னேஸ்வரனின் தனிக்கட்சி தொடர்பான ஊகத்தை வெளியிட்டிருக்கின்றார்கள். தனிக்கட்சி மீதான நாட்டம் விக்னேஸ்வரனுக்கு உண்மையிலேயே இருக்குமானால் அதனை எதிர்க்கப் போவதில்லையென கருத்து வெளியிட்டிருக்கிறார் கஜேந்திரகுமார்.

வடக்கு, கிழக்கு தமிழர் அரசியலைப் பொறுத்த வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையானது ஏனைய தமிழ்க் கட்சிகளிடமிருந்து நீண்ட காலமாக தனிமைப்பட்டு நிற்கிறதென்பதே உண்மை. இந்நிலையில் தமிழ்க் கூட்டமைப்பின் தலைமை மீதான அதிருப்திக் கட்சிகள் தனித்தனியாகப் பிரிந்து நின்று அரசியலில் ஈடுபடுவதால் ஆகப்போவது எதுவுமில்லை. வடக்கு, கிழக்கு மாகாண சபைகளிலும் எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் தமிழர்களின் பிரதிநிதித்துவம் வீழ்ச்சியடையும் நிலைமையே ஏற்படப் போகின்றது.

எனவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனிக்கட்சி தொடங்குவதை தமிழ்க் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிரான கட்சிகள் இப்போது விரும்பவில்லை, விக்னேஸ்வரனையும் சேர்த்தெடுத்து தனியொரு அணியாக இயங்குவதற்கே கஜேந்திரகுமார் உட்பட ஏனையோரும் விரும்புவதாகத் தெரிகிறது.

வட மாகாண சபையின் ஆயுட்காலம் இவ்வருடம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடையப் போகின்றது. வட மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் என்பவற்றையெல்லாம் நாடு எதிர்கொள்ளப் போகின்றது.தமிழர்களைப் பொறுத்தவரை இத்தேர்தல்களெல்லாம் அரசியல் முக்கியத்துவம் மிகுந்தவையாகும்.

இவ்வாறான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குவங்கியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியும், கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக தமிழ்க் கட்சிகளின் தனித்தனிப் பயணங்களும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனிக்கட்சி தொடங்கப் போவதாக வெளிவருகின்ற தகவல்களும் தமிழர்களின் அரசியல் ஒற்றுமைக்கு ஆரோக்கியமான விடயங்களாகத் தோன்றவில்லை.

தமிழர் தரப்பின் அரசியல் ஒற்றுமையானது என்றென்றும் சீர்குலைந்தபடிதான் தொடரப் போகின்றது என்பதையே நிலைமை புலப்படுத்துகின்றது.

நன்றி -தினகரன்

 

Share the Post

You May Also Like