பெரும்பான்மை இன மக்களுடன் சேர்ந்து வாழ்வதா? பிரிந்து செல்வதா? பேரினவாத அரசுதான் தீர்மானிக்க வேண்டும்

காலம் காலமாக உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வரும் தமிழர்களாகிய நாங்கள் இந்த நாட்டிலே பெரும்பான்மை இன மக்களுடன் சேர்ந்து வாழ்வதா? பிரிந்து செல்வதா? என்பதனை பேரினவாத அரசுதான் தீர்மானிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் தேசிய மே தின நிகழ்வு முழங்காவில் விநாயகர் விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறிழயுள்ளார். தொர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

காலம் காலமாக வாழ்ந்த எமது பூர்வீக பூமியில் நாம் குடியேறி வாழ முடியாத நிலை காணப்படுகின்றது. இந்த நாட்டிலே தமிழ் மக்களுக்குரிய தொழிலுரிமைகள் உள்ளிட்ட சகல உரிமைகளும் மறுக்கப்பட்டே வருகின்றது. தமிழ் பகுதிகளிலுள்ள அரச அலுவலகங்களில் பணியாற்றுவதற்குக் கூட தமிழர்களைப் புறந்தள்ளி விட்டு சிங்களப் பகுதிகளிலிருந்து சிங்களவர்கள் வரவழைக்கப்பட்டு நியமனங்கள் வழங்கப்படுகின்றன.

சாதாரண சிற்றூழியர்களைக் கூட சிங்களவர்களாகவே தமிழ் பகுதியில் நியமிப்பதற்கு அரசு முயற்சிப்பதானது எமது மக்களின் தொழிலுரிமையை தட்டிக்கழிக்கின்றது. தமிழ் மக்கள் காலங்காலமாக வாழ்ந்த பூர்வீக நிலங்களிலிருந்து தமிழ்மக்களை வாழவிடாது தடுப்பதானது பாரிய உரிமை மீறலாகும். இந்த நாட்டிலே தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாதிகளால் அடிமைகளாகவே நோக்கி அடக்கி ஒடுக்கப்படுகின்றார்கள்.

சிங்களவர்களுடன் தமிழ் மக்களும் தமக்குரிய சகல உரிமைகளைப் பெற்று சேர்ந்து வாழ்வதா அல்லது பிரிந்து செல்வதா என்பதை இங்குள்ள சிங்கள மக்களும் சிங்கள பௌத்த பேரினவாதச் சிந்தனைகளில் இயங்குகின்ற அரசுகளும்தான் தீர்மானிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இரணைதீவு மக்களின் வாழ்வுரிமை, தொழிலுரிமையை வலியுறுத்தியும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை வலியுறுத்தியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் தேசிய மே தின நிகழ்வுகள் பெருமளவான மக்கள் வெள்ளத்தில் மிகவும் உணர்வெழுச்சியாக முழங்காவிலில் ஆரம்பமாகியுள்ளது.

இதேவேளை, நாச்சிக்குடாச் சந்தியில் இருந்து ஊர்தி பவனிகளுடன் பெருமளவான மக்கள் புடைசூழ ஆரம்பமாகி எழுச்சிப் பேரணி பிரதான வீதி வழியாக முழங்காவில் விநாயகர் விளையாட்டு மைதானத்தைச் சென்றடைந்துள்ளது. மேலும், கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சி.சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், ஈ.சரவணபவன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வடமாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை மற்றும் பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் அ.ஐயம்பிள்ளை, கரைச்சிப் பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சு.சுரேன், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் தொழிற் சங்கப் பிரதிநிதிகள், தொழிலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

 

Share the Post

Warning: mysql_query(): Unable to save result set in /home/newsuthanthiran/public_html/wp-includes/wp-db.php on line 1926