தமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்! சாந்தி எம்.பி

தமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து தன்மானத்துடன் வாழும் இனம் என வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா மே தினத்தில் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் தேசிய மே தின நிகழ்வு, முழங்காவில் விநாயகர் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு மே தின சிறப்புரை ஆற்றும் போதே வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா மேற்படி கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், தமிழ் மக்களாகிய நாம் இந்த நாட்டிலே காலங்காலமாக வாழ்ந்து வருகின்ற ஒரு வீரம் மிக்க இனம். இந்த நாட்டில் எமது இனம் தொடர்ந்தும் அடக்கி ஒடுக்கப்பட்டு அடிமைப்படுத்தப்படுமாகவிருந்தால் நாம் பிரிந்து வாழ்வதே எமது இனத்திற்கும் ஏனைய இனமக்களுக்கும் நல்லதாக அமையும்.

உலகம் முழுவதும் மே முதலாம் திகதியே தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்றது. ஆனால் இந்த நாட்டிலே மே 7ம் திகதியே தொழிலாளர் தினம் என இந்த அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால் தமிழ் தேசிய இனமாகிய நாம் மே முதலாம் திகதியாகிய இன்றைய தினமே மே தினத்தைக் கடைப்பிடித்துள்ளோம். இதன் மூலம் நீங்கள் வேறு நடையா நாங்கள் வேறு நாடையா என்ற உண்மை இன்று மெய்ப்பட்டுள்ளது. எமது இனத்தினுடைய பண்பாடு, கலாசாரம் என்பன வேறு நாம் இந்த நாட்டிலே எமக்குரிய தனித்துவத்துடன் தலை நிமிர்ந்து வாழ்கின்ற ஒரு இனம். காலங்காலமாக வீரம் மிக்கவர்களாக வாழ்ந்து வரும் தமிழர்களாகிய எம்மிடம் ஒற்றுமை என்னும் பலம் காணப்படுமாகவிருந்தால் நாம் எதையும் சாதித்து விடலாம். பல சாதனைகளைப் படைத்தவர்கள்தான் நாங்கள். எமது இனத்தினது விடிவுக்காகப் போராடி வருகின்றவர்களாக நாம் காணப்படுகின்றோம். எமது தமிழின விடுதலைக்காகத் தம்மையே ஆகுதியாக்கிக் கொண்ட எமது மாவீரர்களின் தியாகங்களும் எமது போராளிகளின் உழைப்புக்களும் ஒருபோதும் வீண்போகாது. நிச்சயமாக எமக்கான விடுதலை என்பது வெகுதூரத்தில் இல்லை. எமது துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் தீர்வு கிடைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடு நாம் அனைவரும் பயணிக்கின்றோம் என்றார்.

கிளிநொச்சி மாவட்டத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய மே தின நிகழ்வுகள் நேற்றுப் பிற்பகல் 3.00 மணிக்கு நாச்சிக்குடாச் சந்தியில் இருந்து ஊர்தி பவனிகளுடன் பெருமளவான மக்கள் புடைசூழ ஆரம்பமாகி எழுச்சிப் பேரணி பிரதான் வீதி வழியாக முழங்காவில் விநாயகர் விளையாட்டு மைதானத்தைச் சென்றடைந்து அங்கு சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மாபெரும் மே-தினக் கூட்டம் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சி.சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், ஈ.சரவணபவன், சாந்தி சிறீஸ்கந்தராசா, வடமாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை மற்றும் பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் அ.ஐயம்பிள்ளை, கரைச்சிப் பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சு.சுரேன், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் தொழிற் சங்கப் பிரதிநிதிகள், தொழிலாளர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Share the Post

You May Also Like