உள்நாட்டு யுத்தத்தில் நிகழ்த்தப்பட்ட சர்வதேசக் குற்றங்களுக்கு எதிரான பொறுப்புடைமை நிலையான சமாதானத்துக்கு வழிகாட்டுமா?

2015இல் இலங்கை அரசாங்கமானது நல்லிணக்கம், பொறுப்புடைமை மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை முன்கொண்டு செல்லும்  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பேரவையின் 30/1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியிருந்தது. அவ்வாறு செய்ததன் மூலமாக, அரசாங்கமானது உள்நாட்டு யுத்தத்தின்போது இரண்டு தரப்புக்களாலும்  மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மற்றும் சர்வதே மனிதபிமான மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஒரு நீதிப் பொறிமுறையை ஏற்றுக்கொண்டது. இந்தப் பொறிமுறையானது சர்வதேச நிபுணர்களது பங்களிப்பையும் கொண்டிருக்கும்.
அரசாங்கத்தின் இந்த உறுதிமொழியானது இலங்கையிலுள்ள சில அமைப்புக்களின் நேரடி எதிர்ப்பை உடனடியாகவே சந்தித்தது. அரசாங்கமும் நீதிப் பொறிமுறையில் சர்வதேச பங்கேற்பை சேர்த்துக்கொள்ளும் வாக்குறுதியிலிருந்து பின்னடித்தது.ஜனாதிபதி சிறிசேன மாற்று அரசாங்கத்தின் முக்கிய அங்கத்தவர்கள் இந்த விசாரணைகளில் சர்வதேசப் பங்களிப்பு இருக்காது என்று குறித்துக் காட்டியதோடு, இலங்கையின் உள் விவகாரங்களில் சர்வதேசத் தரப்பினர் தலையிடக்கூடாது என்றும் குறிப்பிட்டனர். எனினும் இலங்கையின் சில சட்ட விமர்சகர்கள், பாதுகாப்பின்மையை ஏற்படுத்தி, பயத்தையும் தந்து பின் இன முறுகலையும் ஏற்படுத்திய, இங்கே நிலவும் தண்டனைகளில் இருந்து தப்பிக்கொள்ளும் கலாச்சாரத்திலிருந்து நேர்த்தியான விடுவிப்பு ஒன்று ஏற்படுவதற்கு இங்கே முறையான விசாரணை ஒன்று இடம்பெறவேண்டும் என்று வாதிட்டுள்ளனர்.
 யுத்தம் நடைபெற்ற ஒரு நாட்டில், உள்நாட்டு யுத்தத்தில் நிகழ்த்தப்பட்ட சர்வதேசக் குற்றங்கள் பற்றிய உள்நாட்டு மற்றும் சர்வதேச நீதி விசாரணைகள் நிலையான சமாதானத்தைக் கொண்டுவருமா என்ற ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது.
 உதவி பேராசிரியர்களான ஜெஃப் டான்சி மற்றும் எரிக் வீபெல்ஹோஸ் ஆகியோர் அண்மைய அவர்களது ஆழமான ஆய்வில், யுத்தத்துக்குப் பின்னதான குற்ற விசாரணைக்கும் இன முறுகல்கள் மீள உருவாவதற்கும் இடையில் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்ற கேள்விக்கான விடையை அறிவதற்கு முயன்றார்கள். முன்னதாக, சில ஆராய்ச்சியாளர்கள் இன மோதல்களை சந்தித்த சமூகங்களின் சுய அனுபவங்களை அவதானித்து இந்தக் கேள்விக்கான விடையறிய முற்பட்டதால், இந்த விவாதமானது முடிவேதும் காணப்படாத ஒன்றாகவே கருதப்பட்டது. இந்த ஆராய்ச்சி இடம்பெற்றபோதிலும், ஆய்வாளர்கள்  ஒவ்வொரு இன மோதல்களின் அமைப்புக்களையும் போதியளவு  நுணுக்கமாக அனுபவ ரீதியாக அணுகியிருக்கவில்லை. டான்சியும் வீபெல்ஹோசும் தற்போதுள்ள இலக்கியங்களின் வாயிலாக தமது சொந்த அனுபவ ஆய்வுகள் மூலம்   இந்த இடைவெளிகளை நிரப்புவதற்கு முனைந்தனர்.
இந்த ஆராய்ச்சியாளர்கள் நாற்பதாண்டு கால ( 1970- 2010) வரையறையில் 263 இன மோதல்களுக்குப் பின்னதான காலப்பகுதிகளின் தரவுகளைப் பரீட்சித்தனர். அவர்கள் அந்தக் காலப்பகுதியில் நடந்த அத்தனை வழக்குகளையும் பதிவுசெய்ததுடன் பின்னர் அவ் வழக்குகளுக்கும் யுத்தம் முடிந்த பின்னர் நிலவிய அமைதிக்கான காலத்துக்கும் இடையிலே புள்ளிவிபரத் தொடர்புகள் இருக்கின்றனவா எனவும் ஆராய்ந்தார்கள். ஆராய்ச்சியாளர்கள் அவ்விசாரணைகளை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தினர் : அரசாங்க முகவர்கள் மீதான உள்ளக விசாரணைகள்; உள்நாட்டு யுத்தத்தில் அரசாங்கத்தோடு மோதிய போராளிக் குழுக்கள் மீதான உள்ளக விசாரணை; மற்றும் இரு தரப்புக்களினதும் மீதான சர்வதேச விசாரணை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னதாக நடைபெறும் விசாரணைகள், சர்வதேச மற்றும் உள்நாட்டு பிரதிநிதிகளால் நடத்தப்படும் கலப்பு நீதிமன்றங்கள் இயற்கையாக முற்றிலும் சர்வதேச விசாரணைகளாகவே கருதப்படுகின்றன.
இந்த ஆராய்ச்சியானது நான்கு பிரதான தீர்மானங்களுக்கு வந்தது. முதலாவது, பொது மன்னிப்புக்கள் (குற்றங்களை இழைத்தவர்களுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ மன்னிப்புக்கள்) குறுகிய காலத்தில் (யுத்தம் ஒன்று முடிந்து முதல் ஐந்து வருடங்களில்) மீண்டும் இன மோதல் ஒன்று மீள உருவாகும் ஆபத்தைக் குறைப்பதாக இருப்பதோடு, எனினும் நீண்ட காலத்திற்கு சமாதானத்தைத் தக்கவைப்பதில் எந்தப் பங்கையும் வகிப்பதில்லை. இரண்டாவது, அரசாங்கத் தரப்பின் மீதான விசாரணைகள் குறுகிய காலத்தில் சமாதானத்தை எந்த விதத்திலும் குழப்பாது, அத்துடன் நீண்ட காலவோட்டத்தில் இனமோதல் ஒன்று மீள உருவாகும் ஆபத்தைக் கணிசமானளவு – 53 வீதத்தால் குறைக்கிறது. இந்த ஆராய்ச்சியானது அரசாங்கத் தரப்பின் உயர் மட்டத்தினரை விசாரணைக்கு உட்படுத்துவதானது நீண்ட காலவோட்டத்தில் இனமோதல் ஒன்று மீள இடம்பெறுவதை மிக அதிகமானளவு குறைக்கிறது என்பதையும் கண்டறிந்தது. மூன்றாவது, அரசாங்கத் தரப்பை உள்நாட்டு யுத்தத்தில் எதிர்கொண்டு மோதிய போராளிக் குழுக்கள் மீதான உள்நாட்டு  விசாரணைகள் நீண்ட கால நோக்கில் அமைதியை நிலைநிறுத்தும் நிகழ்தகவில் அதிகரித்த அல்லது குறைந்தளவிலான எந்தவொரு கணிசமான தாக்கத்தையும் செலுத்தவில்லை. இறுதியாக, சர்வதேச விசாரணைகள் நீண்ட கால அடிப்படையிலோ குறுகிய கால அடிப்படையிலோ இனமோதல்கள் மீள இடம்பெறுவதற்கான எந்தவொரு ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை.
குறிப்பாக, இந்த ஆராய்ச்சியானது உள்நாட்டு யுத்தமொன்றில் பாரிய அத்துமீறல்களை மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அரசாங்கத்தரப்புக்கு எதிரான உள்நாட்டு விசாரணைகளுக்கும்  நீண்ட கால அடிப்படையில் இனமோதல்கள் மீள நிகழ்வதற்கான ஆபத்து குறைவதற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதை வெளிப்படுத்துகிறது. அரசாங்கத் தரப்பானது அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவ அங்கத்தவர்களை உள்ளடக்கியதாகும். முக்கியமாக,அதிகரித்த எண்ணிக்கையிலான உயர் அந்தஸ்துடைய அரச தரப்பினருக்கு எதிரான விசாரணைகளும்  அதிகரித்த எண்ணிக்கையிலான குற்றவாளிகளுக்கான தண்டனைகளும் யுத்தம் ஒன்று முடிந்த பின்னர் நீடித்த கால அமைதிக்கும் இடையில் நெருங்கிய தொடர்புள்ளது. இந்த ஆய்வானது சர்வதேச விசாரணைகள் குறுகிய காலத்தில் அமைதியைக் குழப்பவில்லை என்பதோடு, அவை நீண்ட கால அடிப்படையில் குழப்பவோ நீடிக்கவோ உதவவில்லை என்பதையும் கண்டறிந்திருப்பது சுவாரஸ்யமானது.
 மொத்தத்தில், ” உள்நாட்டு யுத்தத்தில் நிகழ்த்தப்பட்ட சர்வதேசக் குற்றங்களுக்கு எதிரான பொறுப்புடைமை நிலையான சமாதானத்துக்கு வழிகாட்டுமா?” என்ற கேள்விக்கான விடை ஆம் என்பதே. நீதி விசாரணைகளுக்கும் அமைதிக்கும் இடையில் நீண்ட காலவோட்டத்தில் ஒரு நெருக்கமான, நேர்த்தன்மையான தொடர்பிருக்கிறது. அரசாங்கங்கள், மோசமான முறைகேடுகளை நிகழ்த்தியோர் மீதான விசாரணைகளை அரசியல்ரீதியாக மேற்கொள்வது சிரமமாக இருக்கும் நிலையிலும் கூட,  சமாதானத்தை ஏற்படுத்துவதில் தங்களது அர்ப்பணிப்பின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என்பதும் இதற்கான காரணமாக இருக்கலாம்.யுத்தத்தின்போது ஏற்றுக்கொள்ளக்கூடிய நடத்தியாக இருக்கின்ற விடயங்கள் மீது ஒரு தரக்கட்டுப்பாட்டை இந்த விசாரணைகள் கொண்டுவருவதும், எதிர்காலத்தில் முறைகேடுகளைத் தடுப்பதற்கான பொதுவான தடைகளைக் கொண்டுவருவதற்கும் வாய்ப்பை வழங்குவதுமாகக் கூட இருக்கலாம். தங்களது நடவடிக்கைகள் சிறைத் தண்டனைகள் உட்பட்ட கடுமையான தண்டனைகளைத் தரும் என்பதை உணர்ந்துகொள்ளும் குற்றவாளிகள்/குற்றங்களை இழைப்போர் மனித உரிமைகளை மீறுவதற்கு முன் இரு தடவைகள் சந்திக்கக்கூடும். விதிகளையும், விதிமுறைகளையும் அபிவிருத்தி செய்வதும், பொறுப்புடைமைக்கான நிறுவனங்களும் வன்முறைகளை ஏற்படுத்துவோரை வன்முறையற்றவர்களாக மாற்றுவதற்கான வழிவகைகளை உருவாக்கும்.
எனவே, அரசாங்கமானது பொறுப்புடைமை பற்றி சிரத்தையாக இருப்பதோடு, நீண்டகால சமாதானத்தை இலங்கையில் நிலைநிறுத்துவதில் அக்கறையுடையதாக இருக்குமாயின், யுத்த காலத்தின்போது இரு தரப்புக்களாலும் நிகழ்த்தப்பட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச பங்கேற்பையும் கொண்ட ஒரு விசேட நீதிமன்றத்தை உருவாக்குவது ஒரு முக்கியமான படியாக அமையும் என்பதையே மேற்கண்ட ஆதாரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இந்தப் படியானது இலங்கையின் வன்முறை கொண்ட கடந்த காலத்தையும் அமைதியான எதிர்காலத்தையும் சரியான முறையில் எதிர்கொள்வதற்கான முனைப்பாக அமையும்.
Share the Post

You May Also Like