புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு கூட்டமைப்பின் ஒத்துழைப்புத் தொடரும் !!

அரசமைப்பு உருவாக்கம் என்ற விடயத்துக்கு இதுவரை காலமும் வழங்கிய ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்குவோம். ஆனால் இதனை அரசு முன்னெடுக்கத் தயங்கினால், அரசு இதனைச் செய்து முடிப்ப தற்கான அழுத்தத்தை நாம் பிரயோகிப்போம். புதிய அரசமைப்பை உருவாக்கும் கடமையிலிருந்து அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன விலக முடியாது.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அரச தலைவர் மைத்திரியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதம் நேற்று இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாடாளுமன்றில் கூட்டு அரசை அமைத்து, அதிலே முக்கியமான ஒரு விடயமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் தொடர்பில் அரச தலைவர் தனது உரையில் குறிப்பிடாதமை ஏமாற்றத்தை அளிக்கிறது. அரச தலைவர் தனது உரை­யில் இதனைக் குறிப்பிடாததால் தோற்றுப்போன விடயமாகவோ அல்லது இனி நடைபெறாதோ என்று எவரும் அதனைக் கைவிட முடி­யாது. ஏனெனில் அது ஒரு தனி மனித வேணவா இல்லை. அவருடைய தேர்தல் அறிக்கையை ஏற்று மக்கள் அவருக்கு வழங்­கிய ஆணையாகும்.

அது மாத்திரமன்றி முன்னாள் அரச தலைவர் மகிந்தவும் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் புதிய அரசமைப்பு தயாரிக்கப்படும் என்று உறுதிவழங்கியிருந்தார். இதன் அடிப்படையில் நாட்டில் உள்ள 90 வீதமானவர்கள் புதிய அரசமைப்புத் தயாரிப்பதற்கு ஆணை வழங்கியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் உள்ள சகலரும் இணைந்து ஏகமனதாக நாடாளுமன்றத்தை அரசமைப்பு நிர்ணய சபையாக மாற்றியுள்ளோம். அது மாத்திரமன்றி அரசமைப்பு மறுசீரமைப்பு செயற்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் அரச தலைவர் மைத்திரி தனது கொள்கை விளக்க உரையில் இந்த விடயங்களை சுட்டிக்காட்டாததால் இவற்றை அரசு கைவிட்டுவிட்டதாக நாங்கள் கருதப்போவதில்லை.

அனைத்து மக்களும் சேர்ந்த செய்கின்ற பிரதானமான பணியை தொடர்ந்தும் முன்னெடுப்போம். அரச தலைவர் இந்த ஆணையைப் பெற்றவராக இருப்பதுடன், அவருக்கு எஞ்சியிருக்கும் சொற்ப காலத்தில் இதற்குத் தலைமைதாங்க வேண்டும். அந்தக் கடமையிலிருந்து அவர் தவற முடியாது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவோம். அரசு இதனைச் செய்து முடிக்­கத் தயங்கினால் அதற்கான முழு அழுத்தங்களையும் பிரயோகிப்போம்.

அரசியல் தீர்வு என்பது தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி சகலருக்கும் அவசியமானது. புதிய சமூக ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே சகலரும் ஒற்றுமையாக வாழ முடியும். இதனைப் புறந்தள்ளினால் வேறு பிரதிபலன்கள் நாட்டில் ஏற்படலாம். சகல இனங்களின் சுபீட்சத்துக்கும் புதிய அரசமைப்பே அவசியமானது. கொள்கை விளக்க உரையில் அரச தலைவர் இதனைக் குறிப்பிடாமல் விட்டமை பெரிய குறைபாடாக இருந்தாலும் அந்த செயற்பாடு நடக்கவேண்டும். நடக்க வைப்போம் என்றார்.

 

Share the Post

You May Also Like