வலிகளைச் சுமந்த இரத்த மண் முள்ளிவாய்கக்கால்

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போர் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்தமை யாவரும் அறிந்ததே. இது ஈழத்தமிழர் படுகொலையாகும். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் தமிழ் மக்கள் நினைவுகூர்ந்து வரும் ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. தமிழ்மக்;களுக்கு இது மறக்க முடியாத ஒரு கறுப்பு நாளாகும். இரத்தங்கள் கறை கறையாக படிந்த இறுதி நாள் மே 18. இதனை நினைவு கூர்ந்து உயிர்நீர்த்த எம் மக்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள். அஞ்சலி செலுத்துவது எமது கடமையாகின்றது.

இறுதி யுத்தத்தில் எம் உறவுகள் அநியாயமாகக் கொல்லப்பட்டார்கள். தமிழர்களுடைய வரலாற்றில் ஈழத்தமிழர்கள் அதிகம் கொல்லப்பட்ட ஒரு தினம். ஈழப்போராட்ட வரலாற்றில் ஆரம்பத்திலிருந்து எம் மக்கள் கொல்லப்பட்டு வந்தாலும் இவ் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் அதிகளவிலானோர்களே ஆகும். சிங்கள இராணுவப் படையினரின் கோரதாண்டவங்கள் அனேகமானவை இவ் முள்ளிவாய்க்காலில் இடம் பெற்றவைகளேயாகும். நிராயுதபாணிகளான தமிழ் பொதுமக்களை வேட்டையாடினார்கள் இன வெறியர்கள்.

மனதளவில் நொந்து உடல் பலத்தில் வலிமையிழந்திருந்த பொதுமக்களை இராணுவத்தினரின் துப்பாக்கிகளும் உடலும் விட்டுவிடவில்லை. பல பெண்கள் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டார்கள். அவமானத்தினால் அவ்விடத்தில் உயிர்விட்ட பெண்களும் உண்டு. ஒரு இடத்திலும் நகர முடியாது இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்து துன்புறுத்தினார்கள். கணவன், பிள்ளைகள் முன்னால் பெண்களை சித்திரவதை செய்ததுடன் அவர்கள் உறுப்புக்களை வெட்டி எறிந்தார்கள். மேலும் பலர் காணாமல் ஆக்கப்பட்டார்கள். அதற்கான தீர்வுகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை.

இறுதிப் போர் உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் பல லட்சம் ஈழத்தமிழர்களை காயப்படுத்தியுள்ளது. போர் வலயத்தில் நாம் பார்த்த, சந்தித்த கொடுஞ்செயல்களை விடவும் இன்னும் வெளிவராமல் மறைக்கப்பட்ட கொடுஞ்செயல்கள் அதிகம். இன்று வரை இனப்படுகொலையின் கோரங்கள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இலக்கியமாகவும் சாட்சியமாகவும் வாக்குமூலங்களாகவும் அவை இருண்ட பக்கங்களில் இருந்து வெளிவருகின்றன.

மானுட வரலாற்றில் மனித இனம் வெட்கித் தலைகுனியும் மிகப் பெரும் செயற்பாடாக ஈழத்தமிழர் படுகொலை கருதப்படுகின்றது. சுதந்திரத்திற்கு பின்னரான காலத்தில் தமிழ்மக்களை இன ஒடுக்குதல் செய்கின்ற செயற்பாடு தொடர்ச்சியாக இடம் பெற்றுள்ளது. இலங்கை சிங்களவர்களின் நாடு என்ற இனவாத சிந்தனையின் அடிப்படையில் இத் தீவின் பூர்வீக மக்களான ஈழத்தமிழ் மக்களை வெளியேற்றியும் கொன்றும் இறுதி யுத்தம் நிகழ்த்தப்பட்டது. வான்வழியாக விமானங்கள் மூலமும் எறிகணைகள் மூலமும் பெருமளவான மக்கள் அழிக்கப்பட்டனர். விடுதலைப் புலிகள் என்ற பெயரிலும் அப்பாவி மக்கள் வகையாக அழிக்கப்பட்டார்கள். இதேவேளை வதை முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகளின் ஊடாகவும் தமிழ் மக்கள் அழித்தொழிப்பு செய்யப்பட்டனர்.

எங்கு பார்த்தாலும் அவலம் சாவு, ஒப்பாரி, பசி, தாகம், ஏக்கம் யாருக்கும் யாருடைய ஆறுதலும் அனுதாபமும் கிடைக்கவில்லை. திட்டமிட்ட ஒரு இன அழிப்பினை அப்போதைய இலங்கை அரசு செய்தது. போரை நிறுத்தும்படி தமிழ் அரசியல் பிரதிநிதிகள் கேட்டும் போர் நிறுத்தப்படவில்லை. போர் நிறுத்தப்பட்டிருந்தால் எமது தமிழ் மக்கள் பலர் உயிருடன் இருப்பதுடன் பலர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கமாட்டார்கள். அப்பாவிகளாக எமது உறவுகள் கொல்லப்பட்டார்கள். விசாரணைகள் என்று கூட்டிச்சென்றவர்கள் நிலை பரிதாபகரமானது. விட்டு விடுவோம் என கூறிச்சென்றவர்கள் அவர்களை விட்டு விடவில்லை. அவர்களை துன்புறுத்திக் கொலை செய்தனர்.

முள்ளிவாய்க்கால் என இலகுவாக கூறிவிடலாம். ஆனால் அதனை நினைக்கும் போது எமக்கு ஏற்படும் வலிகளை கூறிவிடமுடியாது. மனதில் முட்கள் குற்றிக்கொண்டே இருக்கும். எமது உறவுகள் அயலவர்கள் போன்றோர் பக்கத்தில் இருந்தும் காப்பாற்ற முடியவில்லை என்ற வேதனை காலங்கள் கடந்தும் குற்றிக்கொண்டே இருக்கும். எமக்கு பக்கத்தில் விழுந்த செல்கள், பீரங்கிகள் எமக்கு விழுந்திருக்கக் கூடாதா என்ற எண்ணங்களும் இம்மக்களுக்கு ஏற்பட்டதுண்டு. இங்கு நடைபெறும் சம்பவங்களை பார்க்கவும் முடியால் பொறுத்துக்கொள்ளவும் முடியாது இவ்வாறு மக்கள் கூறிக் கொண்டார்கள்.

அன்றை தினங்களில் மக்கள் இறைவனையே வெறுத்தனர். கைக்குழந்தை என்ன செய்ததது? பால் குடிக்க குழந்தைகள் தாய்களின் மார்பகங்களைத் தேடினார்கள். மார்பகங்களைக் காணவில்லை. அவ்விடத்திலிருந்து பால் வடிவதற்கு மாறாக குருதியே வடிந்துகொண்டிருந்தது. பாதங்களை பூமியில் வைக்க முடியவில்லை, நீரோடைகளைக் கடக்கவும் முடியவில்லை. இதற்கு பூமித் தாயும் இரங்கவில்லை, காங்காதேவியும் இரங்கவில்லை. உறக்கமின்றி தவித்த மக்கள் பலர் நிரந்தர உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு இன்னும் சாந்திகிடைக்கவில்லை. இரத்தம் சிந்தி தியாகம் செய்தவர்கள் பலர். குழந்தையின் சிரிப்பிலும், மழலையிலும் கவலை மறந்திருந்த தாய்களுக்கு குழந்தைகளையும் இல்லாமல் கொலை செய்தனர் படையினர்.

போர்த்திக்கொள்ள உடையின்றி, உண்ண உணவின்றி பரிதாபகரமாக இறந்துகொண்டிருந்தனர் மக்கள். இதனைக் கேட்க ஒருவரில்லை. உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் உயிர்களும் பறிக்கப்பட்டன. காய்ந்து கிடந்த மண் செங்குருதி படிந்து கருமை நிறைந்த மண்ணாக மாறியது. பட்ட வலிகளை எழுதிவிடவும் முடியாது கூறிவிடவும் முடியாது சிந்தும் கண்ணீர் மாத்திரமே அதனைக் கூறும். இம்மக்கள் சிந்திய கண்ணீர் கடலில் இருக்கும் தண்ணீரை விட அடத்தியிலும் அளவிலும் கூடியதாகும். ஒரு உறவின் இழப்பு அதன் உறவிற்குத்தான் தெரியும். அதுபோல்தான் ஒரு இனத்தின் அழிவு அதே இனத்திற்குத்தான் தெரியும். தமிழ் மக்களாகிய நாம் எம் உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துதல் வேண்டும். முள்ளிவாய்க்கால் என்பது தமிழர்களின் வலிசுமந்த இடமாகியது.

மகிழையாள்.

Share the Post

You May Also Like