யுத்த சூழலில் இடம்பெயர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் சத்தியக் கடதாசி சமர்ப்பித்து மேன்முறையீடு செய்ய முடியும்

ஆளுநர், முன்னாள் விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் மற்றும் தொண்டர் ஆசிரியர்களின் சந்திப்பின் போது ஆளுநர் தெரிவிப்பு…

அண்மையில் தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்று முடிந்திருந்தன. இதனையடுத்து தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பான ஆட்சேபனைகள், முறைப்பாடுகள் என்பவற்றை 17ம் திகதிக்கு முன்னர் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளருக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் கிழக்கு மாகாண ஆளுநர் றோகித போகொல்லாகம அவர்களை நேற்றைய தினம் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார் இதன் போது தொண்டர் ஆசிரியர்களை முதலமைச்சர் பணியகத்தில் இருக்கும் படி தெரிவித்துள்ளதாகவும் அவர்களைச் சந்திக்கச் செல்லும் போது தாமும் வருவது சிறப்பாக இருக்கும் என ஆளுநர் அவர்களின் பணிப்புரைக்கமை முன்னாள் அமைச்சர் கி.துரைராசசிங்கம் முதலமைச்சர் பணியகத்திற்கு ஆளுநருடன் விஜயம் மேற்கொண்டு தொண்டர் ஆசிரியர்களைச் சந்தித்தனர்.

2006ல் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற போர் நடவடிக்கைகள் காரணமாக பல தொண்டர் ஆசிரியர்கள் இடம்பெயர்ந்திருந்தமையால் 2006ம் ஆண்டு மற்றும் 2007ம் ஆண்டு நடுப்பகுதி வரையான காலப்பகுதிக்குரிய ஆவணங்களைத் தங்களால் சமர்ப்பிக்க முடியாமல் இருந்ததாகவும் இதனடிப்படையில் தங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இதன் போது தொண்டர் ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனை செவிமடுத்த ஆளுநர் அவ்வாறான அசாதாரண நிலைமைகளைக் கருத்தில் எடுத்து அவர்களுக்கு நியாயம் வழங்கப்படும் என்று கூறியதோடு, இந்த விடயத்தைத் தெரியப்படுத்துவதான ஒரு சத்தியக் கடதாசியை சமர்ப்பிக்குமாறும், அந்த சத்தியக் கடதாசியின் கீழ்ப்பகுதியில் குறித்த பகுதி கிராம சேவகர் குறித்த காலப்பகுதியில் அப்பிரதேசத்தில் இடப்பெயர்வு நடைபெற்றதை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் 17வரையாக இருந்த மேன்முறையீடு செய்வதற்கான இறுதித் திகதி 31ம் திகதி வரை நீடிக்கப்படுவதாகவும், உண்மையான தொண்டர் ஆசிரியர்களுக்கு நியாயம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்ட அதே வேளை சத்தியக் கடதாசி பொய்யானது என நிரூபிக்கப்பட்டால் நிர்வாக நடைமுறைகளின் படி பதவி விலக்க வேண்டிய நிலை ஏற்படுவதோடு, குறித்த காலப்பகுதியில் பெற்ற சம்பளமும் மீளப் பெறப்படும் எனவே சத்தியக் கடதாசியில் உள்ள விபரங்கள் உண்மையானதாக இருக்க வேண்டும் என்றும் விலியுறுத்தினார்.

இவ்விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சம்மந்தன் உட்பட முன்னாள் அமைச்சர் மற்றும் பலரும் இது தொடர்பில் தனது கவனத்திற்கு கொண்டுவந்ததாகவும் ஆளுநர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது இடப்பெயர்வு காரணமாக பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கு இயற்கை நீதி அடிபட்படையில் நியமனம் வழங்குவதற்கு ஆளுநர் எடுத்திருக்கின்ற நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Share the Post

You May Also Like