கொழும்பு தேர்தல் மாவட்டமும் தமிழ் அரசுக் கட்சியும்

நக்கீரன்

இன்று இலங்கைத் தமிழர்களில் 673,648 (29.67%) பேர் வட கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழ்கிறார்கள். இந்த எண்ணிக்கை கிழக்கை விடக் கூடிய தொகை ஆகும். இந்த உண்மை பலருக்குத் தெரியாமல் இருக்கிறது என நினைக்கிறேன். வடக்கு, கிழக்கு, இந்த இரண்டும் தவிர்ந்த எஞ்சிய மாகாணங்களில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை பற்றிய தரவுகள் கீழ் வரும் அட்டவணைகளில் கொடுக்கப்பட்டுள்ளன.

2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட குடித் தொகை எண்ணிக்கையில் இலங்கை முழுதும் உள்ள 9 மாகாணங்களில் 2,270,924 (11.21%) இலட்சம் தமிழ் மக்கள் (அட்டவணை 1) வாழ்கிறார்கள்.

இதில் வடக்கு மாகாணத்தில் 987,692 (43.49%) இலட்சம் பேரும் கிழக்கு மாகாணத்தில் 609,584 (26.84%) இலட்சம் பேரும் வாழ்கிறார்கள். மொத்தம் வட – கிழக்கு மாகாணங்களில் 1,597,476 (70.33%) தமிழ் மக்கள் (அட்டவணை 2) வாழ்கிறார்கள்.

வடக்குக் கிழக்கு நீங்கலாக எஞ்சிய 7 மாகாணங்களில் 673,648 (29.67%) இலட்சம் தமிழ் மக்கள் (அட்டவணை 3) வாழ்கிறார்கள். அதன் விபரம் பின்வருமாறு,

வடக்கு + கிழக்கு + ஏழு மாகாணங்களில் வாழும் 2,271,124 (100%) தமிழ் மக்களின் மொத்த தொகையையும் விழுக்காட்டையும் ஒரே பார்வையில் அட்டவணை 4 காட்டுகிறது.

 

இந்தப் புள்ளி விபரங்கள் எதைக் காட்டுகிறது என்றால் வடக்கு- கிழக்கு மாகாணங்கள் நீங்கலாக எஞ்சிய 7 மாகாணங்களில் வாழும் கிட்டத்தட்ட 1/3 விழுக்காடு இலங்கைத் தமிழ் மக்களைப் பிரதிநித்துவப் படுத்த நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதிகள் இல்லாது இருக்கிறார்கள். குறிப்பாக மேற்கு மாகாண தேர்தல் மாவட்டத்தில் வாழும் 335,751 (14.78%) இலட்சம் மக்களுக்கு பிரதிநித்துவம் இல்லாது இருக்கிறது.

இலங்கை நாடாளுமன்றத்துக்கு 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து 160 உறுப்பினர்கள் மக்கள் தொகை அடிப்படையிலும் 36 தொகுதிகள் ஒவ்வொரு மாகாணத்துக்கும் தலா 4 உறுப்பினர்கள் (அதாவது ஒரு இலட்சம் மக்களுக்கு ஒரு இருக்கையும் 1,000 சதுர மைல் நிலப்பரப்புக்கு ஒரு உறுப்பினரும்) என்ற அடிப்படையிலும் 29 உறுப்பினர்கள் தேசியப் பட்டியலில் இருந்தும் மொத்தம் 225 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். கீழ்க்கண்ட அட்டவணை 22 தேர்தல் மாவட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள 196 இருக்கைகளின் பங்கீட்டைக் காட்டுகிறது.

இந்த அட்டவணை அடிப்படையில் வடக்கில் காணப்படும் யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் இருந்து 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் இருந்து 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆக மொத்தம் 13 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

2015 இல் நடந்த தேர்தலில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் இருந்து 12 தமிழர்களும் ஒரு முஸ்லிம் உறுப்பினரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கிழக்கு மாகாணத்தில் 3 தேர்தல் தொகுதிகள் காணப்படுகின்றனன. இதில் திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் இருந்து 4 உறுப்பினர்களும், அம்பாரை தேர்தல் மாவட்டத்தில் இருந்து 7 உறுப்பினர்களும் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் இருந்து 5 உறுப்பினர்களும் ஆக மொத்தம் 16 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவர்.

கடந்த 2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கில் இருந்து 5 தமிழர்களும் 7 முஸ்லிம் உறுப்பினர்களும் 4 சிங்களவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

குடித்தொகை அடிப்படையில் இலங்கைத் தமிழர் 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 25 பேர் (11.21 x 225) இலங்கைத் தமிழர்களாக இருக்க வேண்டும். ஆனால் 18 உறுப்பினர்களே (வடக்கு 13 + கிழக்கு 5) இருக்கிறார்கள். என்ன காரணம்?

வடகிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்கள் சிதறி வாழ்கிறார்கள். இதனால் 673,648 (29.67) இலட்சம் இவர்களை இலங்கைத் தமிழர் நாடாளுமன்றத்தில் பிரதிநித்துவம் செய்வதில்லை.

கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் (மேற்கு மாகாணம்) 19 தொகுதிகள் இருக்கின்றன. வாக்காளர் தொகை 1,552,734 ஆகும். தமிழர்கள் கொழும்பு மாநகர சபை, தெகிவளை – மவுண்ட்லேவெனியா) எல்லைக்குள்ளாகவே அதிகமாக வாழ்கிறார்கள். அதன் மக்கள் தொகை 2,309, 809 இலட்சம் ஆகும். கொழும்பு மாவட்ட தேர்தல் தொகுதியில் முஸ்லிம்களுக்கு (242,728 -10.51%) அடுத்தபடியாக தமிழர்கள் 231, 313 (10.01%) வாழ்கிறார்கள். சென்ற தேர்தலில் (2015) 81,391 (6.73%) ஆயிரம் வாக்குகள் பெற்ற மக்கள் விடுதலை முன்னணிக்கு ஒரு இடம் கிடைத்தது.

2004 இல் மறைந்த தியாகராசா மகேஸ்வரன் கொழும்பில் ஐதேக சார்பில் போட்டியிட்ட போது 57,978 ஆயிரம் விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்பதைக் குறிப்பிட வேண்டும். சட்ட சபை காலத்துக்குப் பின்னர் ஒரு இலங்கைத் தமிழர் தலைநகரில் நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட்டு வென்றது அதுவே முதல் தடவை. இலங்கைத் தமிழர் ஒருவர் தேர்தலில் போட்டியிடாது விடுவதால் கொழும்பு மாவட்டத்தில் வாழும் தமிழர்கள் பெரும்பாலும் ஐதேக க்கு வாக்களிக்கப் பழகிவிட்டார்கள்.

2015 இல் நடந்த தேர்தலில் கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் மனோ கணேசன் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்டு 69,064 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் மொத்தம் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 1,531,609 இலட்சம் ஆகும். வாக்களித்தவர்களது எண்ணிக்கை 1,208,899 (78.93%) தேர்ந்தெடுத்தவர்களின் எண்ணிக்கை 19 ஆகும். எனவே ஒரு இருக்கைக்கு தேவையான வாக்குகள் 63,626 ஆகும். வாக்களித்தவர்களில் 10.01% தமிழர்கள் என எடுத்துக் கொண்டால் அந்த எண்ணிக்கை 120,889 ஆகும். இது இரண்டு இலங்கைத் தமிழர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க போதுமான வாக்குகளாகும்.

வடக்கு கிழக்கை விட்டு வேறு மாகாணங்களில் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடாததற்குக் காரணம் அது வடக்குக் கிழக்கு தமிழர்களின் தாயகம் அதில் தன்னாட்சி (சமஷ்டி) அரசை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது ஆகும். மேலும் முன்னைய காலங்களில் கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் அதிகளவு தமிழர்கள் இருக்கவில்லை. ஆனால் போர்க்காலத்தில் பாதுகாப்புக் கருதி பலர் கொழும்பில் குடியேறினார்கள். இதனால் இன்று (2012) மேற்கு மாகாணத்தில் மட்டும் எமது மக்கள் தொகை 335,751 ஆக உள்ளது. மேலே கூறியவாறு கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் மட்டும் 242,728 (10.51%) இலட்சம் இலங்கைத் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

மலையகத் தமிழர்களைப் பொறுத்தளவில் இலங்கை முழுதும் 839,504 (4.12%) வாழ்கிறார்கள். கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் இந்திய தமிழர்களின் எண்ணிக்கை 27,336 ஆயிரம் மட்டுமே!

மேலே கூறிய காரணங்களின் அடிப்படையில் தமிழ் அரசுக் கட்சி கொழும்பு தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவது பற்றி இன்று கடைப்பிடிக்கும் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாறும் காலத்துக்கு ஏற்ப நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

 

Share the Post

You May Also Like