பாவப்பட்ட பணத்தில் 963 ரூபாவை காணோம்

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் சேகரிக்கப்பட்டு வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவின் வீட்டில் கட்டப்பட்ட பணத்தில் 963 ரூபாயை காணவில்லையென யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தவராசாவின் வீட்டில் கட்டப்பட்டிருந்த பணத்தை யாரும் பொறுப்பேற்காத காரணத்தால் யாழ். பொலிஸார் அதனை மீட்டுள்ளனர். ஏழாயிரம் ரூபாய் சேகரிக்கப்பட்டதென குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அதில் 6 ஆயிரத்து 37 ரூபாய் மாத்திரமே காணப்பட்டதாக குறிப்பிட்டு, அப்பணத்தை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

கடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிடம் 7000 ரூபாய் வீதம் அறவிடப்பட்டது. இந்நிகழ்வை வடக்கு மாகாண சபை ஏற்பாடு செய்திருந்த போதிலும், வேறு தரப்பினரே நடத்தினார்கள் எனக் குறிப்பிட்ட தவராசா, தம்மிடம் அறவிடப்பட்ட பணத்தை மீளக் கையளிக்குமாறு கோரியிருந்தார்.

இந்நிலையில், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் அப்பணத்தை பொதுமக்களிடம் ஒரு ரூபாய் வீதம் திரட்டி, அதனை பொதியாக்கி, பாவப்பட்ட பணம் என அப்பொதியில் எழுதி, நேற்று வடக்கு மாகாண சபைக்கு கொண்டுசென்றனர். எனினும், நேற்றைய அமர்வில் தவராசா கலந்துகொண்டிருக்கவில்லை. பின்னர் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் அதனை கையளிக்க முயன்றனர். எனினும், முதலமைச்சர் அப்பணத்தை பொறுப்பேற்க மறுப்பு தெரிவித்ததோடு, தவராசாவுடன் பேசித் தீர்த்துக்கொள்ளுமாறு குறிப்பிட்டார்.

இதனையடுத்து கொக்குவில் பகுதியில் உள்ள தவராசாவின் வீட்டிற்கு மாணவர்கள் சென்றபோது, அங்கும் தவராசா இருக்கவில்லை. இந்நிலையில், பணப்பொதியை வாயிலில் கட்டிவிட்டுச் சென்றனர். இதனை அவதானித்த தவராசாவின் பாதுகாப்பு உத்தியோகத்தர், யாழ். பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் பிரகாரம் அப்பணத்தை பொலிஸார் மீட்டுச் சென்றுள்ளனர். எனினும், மாயமான 963 ரூபாய் தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

Share the Post

You May Also Like