வடக்கின் பாரிய சுகாதார துறை அபிவிருத்திக்கான சர்வதேச ஒப்பந்தம்; முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் பெருமிதம்

வடக்கின் பாரிய சுகாதார துறை அபிவிருத்திக்கான சர்வதேச ஒப்பந்தம் நேற்று (12.06.2018) கொழும்பில் கைச்சாத்து மாகாண சுகாதார துறையின் சரித்திரத்தில் முக்கியமான நாள். வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் பெருமிதம்.

வடக்கு மாகாணத்தின் முன்னாள் சுகாதார அமைச்சரின் முயற்சியினால் மத்திய சுகாதார அமைச்சின் அனுமதியுடன் மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விசேட வைத்திய பிரிவுகளை அமைப்பதற்கான சர்வதேச ஒப்பந்தம் நேற்று மத்திய சுகாதார அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.

இது தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இதன்மூலம் எமது நீண்ட கால முயற்சி இன்று கைகூடியுள்ளது. வடக்கு மாகாணத்தின் சுகாதார அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் மாகாணத்திற்கான நீண்டகால திட்டமொன்றை தயாரித்திருந்தோம். இதற்காக 17 உபகுழுக்களை அமைத்து துறைசார்ந்த நிபுணர்களின் பங்களிப்புடன் நீண்டகால சுகாதார மேம்பாட்டுத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டது. இவ்வாறான திட்டமொன்றை தயாரித்த ஒரேயொரு மாகாண சுகாதார அமைச்சு எமது மாகாணமாகும். இதன் தொடர்ச்சியாக 2016ம் ஆண்டில் மத்திய சுகாதார அமைச்சர் மருத்துவர் ராஜித சேனாரத்தின் அவர்களின் அனுசரணையுடன் நெதர்லாந்து தூதுக்குழுவைச் சந்தித்து எமது நீண்ட கால திட்டத்தை கையளித்திருந்தேன்.

அதன்தொடர்ச்சியாக தூதுக்குழுவினர் வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் 2016ல் விஜயம் செய்து கள ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று (12.06.2018) கொழும்பில் நெதர்லாந்து தூதுக்குழுவுக்கும் மத்திய சுகாதார அமைச்சுமிடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு நெதர்லாந்து நாட்டு தூதுக்குழுவை சந்தித்ததில் இருந்து இன்று வரை என்னுடன் இந்த கைங்கரியத்திற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக.

60மில்லியன் யுறோ நிதியில் ( அண்ணளவாக 10,000 மில்லியன் இலங்கை ரூபா) வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுகாதரசேவையை மேம்படுத்தும் நோக்கோடு கொண்டுவரப்பட்ட இத்திட்டம் எதிர்காலத்தில் உலகத்தர சுகாதாரசேவை எமது மக்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

இத்திட்டத்தை வடக்கு மாகாணத்திற்கு கொண்டு வருவதற்கு அனைத்து வகையிலும் அனுசரணை வழங்கிய மத்திய சுகாதர அமைச்சர் வைத்தியர் றாஜித சேனரத்ன அவர்களிற்கு எமது மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Share the Post

You May Also Like