அதிகாரப்பகிர்வு தனக்கு பாதகம் என்றால் அதற்கு எதிராக மாறிவிடுவார் ரணில்-நிலைமையை விளக்குகிறார் சித்தார்த்தன்

புதிய அரசியலமைப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களில், ஓரளவுக்கேனும் அதிகாரப்பகிர்வை கொண்டுவர வேண்டும் என்று விரும்பக்கூடியவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாக இருந்தாலும், அவர் கூட தனக்கும் தன்னுடைய அரசியல் பயணத்துக்கும் இந்த கருமம் பாதகமில்லை என்று கண்டால் மாத்திரமே அதனை கொண்டு வருவாரே தவிர, தனக்கு அதனால் பாதகம் ஏற்படும் என்று அறிந்தால் அவர் கூட அதற்கு எதிரானவராக மாறிவிடுவார் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினார் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

தென்னிலங்கையின் அரசியல் தலைவர்கள் அனைவரும் அதிகாரப்பகிர்வுக்கு எதிரானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த அடிப்படையில் 2015 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற அரசியலமைப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற எந்தவொரு தென்னிலங்கை அரசியல் தலைவருக்கும் அதிகாரப்பகிர்வை வழங்குவதில் சிறுதுளியளவு உடன்பாடு கூட இல்லை.

இந்தப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களில் ஓரளவுக்கேனும் அதிகாரப்பகிர்வைக் கொண்டுவர வேண்டும் என்று விரும்பக்கூடியவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாக இருந்தாலும், அவர் கூட தனக்கும் தன்னுடைய அரசியல் பயணத்துக்கும் இந்தக் கருமம் பாதகமில்லை என்று கண்டால் மாத்திரமே அதனை கொண்டுவருவார். தனக்கு அதனால் பாதகம் ஏற்படும் என்று அறிந்தால் அவர் கூட அதற்கு எதிரானவராக மாறிவிடுவார்.

இன்றைய நிலையில் மிக விரைவில் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் தென்னிலங்கைக் கட்சிகள் இருக்கின்றன.அந்த அடிப்படையில் பார்த்தால் அவர்களுடைய கவனம் அதன் மேல் தான் இருக்கப்போகிறதே தவிர, அதிகாரப்பகிர்வு விடயத்திலோ, அரசியலமைப்பு விடயத்திலோ இருக்கப்போவதில்லை. அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் மேற்படி கருமத்தில் ஒத்துழைக்கப்போவதில்லை.

இன்று இரு கட்சிகளுக்குமிடையில் பாரிய முரண்பாடுகள் நிலவி வருகின்ற நிலையில், அவர்களுடைய கவனங்கள் எல்லாம் அதன் மேல் இருக்குமே தவிர, தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்குவதிலோ, தமிழர்களுடைய பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதிலோ இருக்கப்போவதில்லை.

தங்களுக்குள் நிலவும் முரண்பாடுகளை களைவதிலும் அடுத்த தேர்தலுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது போன்ற விடயங்களில் தான் அவர்களுடைய கவனம் இன்று இருக்கிறதே தவிர,இவற்றை எல்லாம் விட்டுவிட்டு தமிழர்களுக்கு தீர்வைத் தர அவர்கள் முன்வருவார்கள் என்று நான் நினைக்கவில்லை என்றார்..

Share the Post

You May Also Like