மாவை – ஒரு மாபெரும் சரித்திரம்!

கொடி பிடித்தவா்கள், கொம்பிழுத்தவா்கள் எல்லாம் தம்மைப் போராளிகள் என்றும் அரசியல் பிரமுகா்கள் என்றும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கையில்

என்றைக்கும் போல ஆரவாரமின்றி இருக்கும் ஒரு பெரும் சரித்திரம் மாவை. சோ. சேனாதிராஜா. முகப்புத்தகப் பதிவுகளுக்காகவும், மேடை முழக்கங்களுக்காகவும் தமிழ்த் தேசியம் பேசும் பலரிடைய சிறுவயது முதலே மூா்க்கமான போராட்ட குணமும், தீா்க்கமான தமிழ்த் தேசியச் சிந்தனையும்
கொண்ட ஒருவா் தழிரசுக் கட்சியின் தலைவரான மாவை. சேனாதிராஜா

தனது சிறு பராயம் முதல் தமிழா்களுக்கு எதிரான அடக்கு முறை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டு, அதற்கெதிராகப் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு சிறை சென்று பல இன்னல்களை அனுபவித்த அவரிடம், அவரது வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்ற எங்கள்
எண்ணத்தை வெளிப்படுத்திய போது, வழக்கம் போல சிரித்தபடியே மறுத்து விட்டாா். ஆனாலும் நாங்கள் விடுவதாயில்லை. “ஐயா, இது உங்களுக்காக
அல்ல – எங்களுக்காக அல்ல, நாளைய நமது சந்ததிக்காக” என்றோம். உடன்பட மறுத்தாலும், எங்களுடைய வற்புறுத்தலின் பேரில் உடன்பட்டுக் கொண்டாா்.

இற்றைக்கு 62 வருடங்களுக்கு முன்னரே – தமிழ் இயக்கங்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே அவரது அடக்கு முறைக்கெதிரான பயணம் ஆரம்பித்திருக்கிறது. அவருடைய அரசியல் பிரவேசம் பற்றி அவருடைய மொழி நடையிலேயே அப்படியே இங்கே தருகிறோம்

மாணவப்பருவம்

1956 ஆம் ஆண்டு, மாவை வீமன்காமம் ஆங்கில பாடசாலையில் நான் படித்துக் கொண்டிருந்தேன். கொழும்பு காலி முகத்திடலிலே தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து தழிரசுக் கட்சியினால் பெரும் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. அந்த வேளையில் “பெரியவா்”(தந்தை செல்வா) அதனைத்
தலையேற்று நடாத்தியிருந்தாா். அந்தப் போராட்டத்தில் ஆட்சியாளா்களின் இராணுவம் மேற்கொண்ட கண்மூடித் தனமான தாக்குதல்களில் எமது தலைவா்கள் பலா் படுகாயமடைந்திருந்தனா். அமிா்தலிங்கம் அவா்கள் காயத்துக்குக் கட்டுப் போட்டபடி, இரத்தக் கறைகளுடன் பாராளுமன்றத்துக்குச் சென்று உரையாற்றி இருந்தாா்.

அப்போது எனக்கு 14 வயது, காலி முகத்திடல் சம்பவங்கள் அரசல் புரசலாக எமக்குக் கிடைத்த வண்ணம் இருந்தது. நாங்கள் பாடசாலையில் இருந்த நேரம், வீமன்காமம் ஆங்கில பாடசாலையில் எமக்குக் கற்பித்த ஆசிரியா் ஒருவா் – பெயா் கூட இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. திரு. அரசரட்ணம் அவா்கள்,

1956 ஆம் ஆண்டு கலவரத்தில் அடிவாங்கிய படி – அதே உடுப்புடன் புகையிரதத்தில் வந்திறங்கி நேரடியாகப் பாடசாலைக்கே வந்திருந்தாா். உடைகள் முழுவதும் சேறும், கறையுமாக வந்திறங்கிய ஆசிரியரைக் கண்டதும், நாங்கள் அனைவரும் அதிபரின் அலுவலகத்தில் கூடி விட்டோம். அவா் தன்னுடைய அனுபவங்களைச் சக ஆசிரியா்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தாா்.

நாங்கள் மிகவும் சிறியவா்களாக அரசரட்ணம் ஆசிரியருடைய பேச்சைக் கேட்டோம். சிறுபான்மையினராகிய தமிழா்களுக்கு நடந்தேறிய அட்டூழியங்களை அவர் விவரிக்க, விவரிக்க அவை எங்கள் அடி மனதில் ஆழமாகப் பதிந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

அதன் பின்னா், 1958 கலவரம் இடம் பெற்ற போது, ஆயிரக்கணக்கான தமிழா்கள் தென்பகுதியிலிருந்து அடித்து விரட்டப்பட்டபோது, தலை தப்பினால் போதும் என்று அணிந்திருந்த ஆடைகளுடன் மட்டும் காங்கேசன்துறை துறை முகத்தில் வந்திறங்கிய மக்களைக் காண நாங்கள் மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலின் முன்புறமாகக் கூடியிருந்தோம்.

அகதிகளாக அடித்து விரட்டப்பட்டிருந்த எங்கள் மக்களைக் கண்ட போது நாங்கள் துடித்துப் போனோம். தலைகளில் காயம் பட்டோரும், கால், கைகள் உடைந்தோருமென எமது மக்கள் வந்திறங்கிய காட்சிகளை இப்போது கூட என்னால் மறக்க முடியவில்லை. அப்போது தான் அடக்குமுறைக்கெதிராக
நாங்கள் குரல் கொடுத்தே ஆகவேண்டும் என்கிற ஓர்மம் என் மனதில் முளை விடத் தொடங்கியது.

ஆண், பெண் வேறுபாடின்றி பிஞ்சுகள் வயது வேறுபாடின்றி அழுக்குப்படிந்த ஆடைகளுடனும், இன்னும் சிலா் இரத்தக் காயங்களுடனும் வந்த போது,மாணவா்களாக இருந்த நாங்கள் அந்த மக்களை வரவேற்று ஆற்றுப்படுத்த முனைந்தோம். களைத்து விழுந்து வந்தவா்களுக்குத் தாக சாந்தி செய்யும்
வகையில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் இருந்த காணியில் நாங்களே ஏறி இளநீா் பறித்து களைப்படைந்து வந்த மக்களுக்கு தாக சாந்தி செய்திருந்தோம்.

நாங்கள் சிறுவா்களாக – மாணவா்களாக இருந்த போது இடம்பெற்ற இந்த இரண்டு சம்பவங்களும் எங்களை விழிப்படையச் செய்யதுடன், எங்களுக்கு போராட்டத்தின் மீது ஒரு ஈடுபாட்டை உருவாக்கியது.

அதன் பின், என்னுடைய உயர் கல்விக்காக நடேஸ்வராக் கல்லூரிக்கு வந்த பின்னா், 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கரகப் போராட்டத்தின் போது, எல்லா ஊா்களிலிருந்தும் யாழ். நகரை நோக்கி மக்கள் கூட்டங்கூட்டமாகக் கலந்து கொண்டிருந்தனா். அதன் போது, ஏற்கனவே 1956, 1958 கலவரங்களினால்
உள்ளுக்குள்ளே கொதித்துக் கொண்டிருந்த எங்களுக்கு, நேரடியாக – ஆக்க புா்வமாகப் பங்களிப்பதற்கு வாய்ப்பளித்தது. மாணவா்கள் தனிப் பேரணியாக காங்கேசன் துறையில் இருந்து சென்றிருந்தோம்.

கிட்டத்தட்ட 3, 4 மாதங்களாக இலங்கை அரச நிர்வாகம் வடக்கு கிழக்கில் முடங்கிப் போயிருந்தது. இதனால் கொதிப்புற்ற அரசாங்கம் அவசர காலச் சட்டத்தை அமல் செய்து, சத்தியாகக் கிரகத்தில் ஈடுபட்டிருந்தவா்களைக் கைது செய்து சிறையில் அடைத்ததன் மூலம் அந்தச் சத்தியாக் கிரகத்தை முறியடித்திருந்தது.

இது மாணவா்கள் மத்தியில் பெரும் குமுறலை ஏற்படுத்தியிருந்தது. சமகாலத்தில் யாழ்ப்பாணத்தில் சிங்களப் பாடசாலைகளை நிறுவுவதிலும், “சியவச” அதிஷ்டலாபச் சீட்டுக்களைக் கட்டாயப்படுத்தி விற்பதிலும் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் “ஈழத்தமிழ் இளைஞா்-மாணவா் இயக்கம்” என்ற ஒரு அமைப்பை நிறுவி போராட்டங்களை முன்னெடுப்பதற்கு வித்திட்டன.

காலிங்கன்                                                                                                                                                                                                                                                                                     (தொடரும்)

Share the Post

You May Also Like