பட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே!

மது மட்டும் போதை தருவதில்லை. பதவியும் அப்படித்தான். இரண்டு ஆண்டுகள் மட்டும் முதலமைச்சராக இருப்பேன் அதன்பிறகு பதவியில் இருந்து விலகி விடுவேன் என்று அரசியலுக்கு வந்த விக்னேஸ்வரன் இரண்டு ஆண்டல்ல, ஐந்து ஆண்டுகள் முடிந்தும் (இன்னும் 3 மாதங்கள் இருக்கின்றன) இன்னொரு ஐந்து ஆண்டுகளுக்கு முதலமைச்சராக வர விரும்புகிறார். 2013 இல் தேர்தலில் வென்று வந்ததும் “நான் தமிழரசுக் கட்சியின் செல்வாக்கால் தேர்தலில் வெல்லவில்லை, எனது சொந்தச் செல்வாக்கினால் வென்றேன்” என்று மார் தட்டினார். இது ஏறிவந்த ஏணியை எட்டி உதைத்த கதையாகிவிட்டது. ஐந்து ஆண்டுகள் கட்சிக்கு இரண்டகம் செய்துவிட்டு “கட்சியில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துக் கொண்டுள்ளார்கள்” என்று இப்போது புலம்புகிறார்.

நான் எந்தக் கட்சியிலும் இல்லாத ஒருவன் என மார்தட்டும் விக்னேஸ்வரனுக்கு தேர்தல் வருகிறது என்றதும் தமிழ் அரசுக் கட்சியின் நினைவு வருகிறது! “எனக்கு நியமனம் தராவிட்டால் நான் வேறு கட்சியில் இணைந்து போட்டியிடுவேன். அது முடியாவிட்டால் சொந்தக் கட்சி தொடங்கி மக்கள் ஆதரவுடன் தேர்தல் களத்தில் குதிப்பேன்” என்கிறார்.

இப்படியான ஒரு சந்தர்ப்பவாதிக்கு தமிழ் அரசுக் கட்சி முதலமைச்சர் வேட்பாளர் நியமனம் கொடுக்க முடியுமா? கட்சிக்கு மானம் மரியாதை இல்லையா?

இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு கட்டுச் சோற்றுக்குள் பெருச்சாளியை வைத்துவிட்டு குடையுது குடையுது என்று தமிழ் அரசுக் கட்சியினர் அழ வேண்டுமா?

நக்கீரன்
தலைவர்
தமிழ்தேசியக் கூட்டமைப்பு
கனடா

Share the Post

Warning: mysql_query(): Unable to save result set in /home/newsuthanthiran/public_html/wp-includes/wp-db.php on line 1926