சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்ககோரி மட்டக்களப்பில் பேரணி

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்ககோரியும், துஸ்பிரயோகங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை வழங்குமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் ஈர்ப்பு போராட்டமும், பேரணியும் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உயர்தரம் கற்கும் மாணவர்கள், முற்போக்கு இளைஞர் அமைப்பு என்பன இணைந்து நேற்று மாலை குறித்த கவன ஈர்ப்பு போராட்டத்தையும், பேரணியையும் நடத்தியுள்ளனர்.

இதன்போது, மட்டக்களப்பு பயனியர் வீதியில் இருந்த அரசடி சந்தி வரையில் பேரணியாக வந்த மாணவர்கள் அங்கு கவன ஈர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

சுழிபுரத்தில் றெஜினா என்னும் சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளமை மற்றும் வாகரை, திருகோணமலை ஆகிய பகுதிகளில் 12 மற்றும் 13வயது சிறுமிகள் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டமை ஆகியவற்றிற்கு இங்கு கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

றெஜினாவின் கொலைக்கு நீதிவேண்டும், அரசே குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்கவும், நல்லாட்சி அரசாங்கத்தில் காவல்துறை தூங்குகின்றதா, அரசே சிறுவர்களுக்கு பாதுகாப்பு இல்லையா’ போன்ற வாசகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தியுள்ளனர்.

சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்குத்தண்டனையினை அமுல்படுத்த அரசாங்கம் முன்வரவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்ட்டுள்ளது.

அத்துடன், துஸ்பிரயோகங்களை தடுக்கும் வகையில் சட்டங்களை கடுமையான முறையில் அமுல்படுத்தவும், நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், மாணவர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Share the Post

You May Also Like