அமைச்சர் விஜயகலாவின் பேச்சும் நல்லாட்சி அரசின் போக்கும்

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் ஆற்றிய உரை சம்பந்தமாக தற்போது பாராளுமன்றத்திலும் கொழும்பு அரசியல் தலைவர்களிடமும் ஒருவகையான எதிர்ப்பலைகள் தோன்றியுள்ளதையும் ஜனாதிபதி மைத்திரி அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு உத்தரவிட்டிருப்பதும் இன்று தமிழ்மக்கள் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் பேசு பொருளாக மாறியுள்ளது.

உண்மையில் விஜயகலா என்ன அப்படி பேசினார் “தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனாவை நாம் உருவாக்கினோம் அவர் கட்சி வளர்க்கின்றார் தமிழ்மக்களுக்கு எந்த பாதுகாப்பும் தரவில்லை கடந்த 2009,மே18க்கு முந்தியகாலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதை ஒவ்வொருவரும் உணர்வு பூர்வமாக உணர்கின்றோம் இன்றையநிலை தமிழீழ விடுதலைப்புலிகளை உருவாக்கவேண்டும் என்பதே எமது நோக்கம் “

இதுதான் அவர் பேசிய பேச்சு

உண்மையில் இந்த கருத்தை சாதாரண ஒருவர் பேசுவது என்பதும்,எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசுவது என்பதும்,ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேசுவது என்பதும், ஒரு அமைச்சர் பேசுவது என்பதும் வித்தியாசம். இலங்கை அரசின் இராஜாங்க அமைச்சரான ஒரு தமிழ் பெண் விடுதலைப்புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று கூறுவது அந்த அரசாங்கத்தின் கருத்தாக கூட இருக்கலாம் என்று சிலர் விமர்சனம் செய்வதும் தப்பில்லை.

ஆனால் யாழ்மாவட்ட தமிழ் மக்களால் வாக்களித்து இராஜாங்க அமைச்சராக்கிய விஜயகலா மகேஷ்வரன் தற்போது யாழ்ப்பாணத்தில் அடிக்கடி இடம்பெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இளைஞர்கள் சிலரின் அடாவடி, வாள்வெட்டு சம்பவங்கள், சிறுமிகள் மீதான பலாத்காரம், போதைவஸ்து பாவனை அதிகரிப்பு, கொலை, கொள்ளைச் சம்பவங்கள் விடுதலைப்புலிகள் காலத்தில் இருக்கவில்லை அந்தக் காலம் ஒரு ஒழுக்கமான கட்டுக்கோப்பான காலமாக இருந்தது என்ற உண்மையைத்தான் பேசினார்.

தற்போது 2009,மே,18ம் திகதிக்கு பிற்பட்ட இந்த ஒன்பது வருடங்களும் வடக்கு, கிழக்கு பகுதிகள் எங்கும் வன்முறை கலாசாரமும் வக்கிரப்போக்கான மனோநிலையும் பழிவாங்கும் குணநிலையும் தற்கொலை செய்யும் மனப்பாங்கும் அதிகரித்து இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருட்கள் பாவனையும் அதிகரித்து செல்வதை காணமுடிகிறது.

இவைகளை இந்த நல்லாட்சி அரசானது கட்டுப்படுத்த தவறியுள்ளது. தற்போதைய ஜனாதிபதியை ஆட்சிபீடம் ஏற்றியவர்களில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு அதி கூடிய பங்களிப்பு உண்டு. நாம் எதிர்பார்த்த எந்த விடயமும் இந்த நல்லாட்சி அரசில் செய்யப்படவில்லை. அரசியல் தீர்வு கூட இழுத்தடித்து வழமையான ஏமாற்றத்தையே இந்த அரசும் செய்கின்றது என்பது தெளிவாக தெரிகிறது.

இதில் இன்று மிக முக்கியமாக யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை தோன்றியுள்ளது என்பது பல சிவில் அமைப்பு பிரதிநிதிகளின் கருத்தாக இருக்கின்றது.

இந்த விடயங்களின் தாக்கமே தாம் இராஜாங்க அமைச்சர் என்பதற்கு அப்பால் யாழ்ப்பாணத்து உணர்வுள்ள தமிழச்சி என்ற நிலையில் தான் மனதில் உள்ள உண்மையான கருத்தை திருமதி விஜயகலா மகேஷ்வரன் கூறியுள்ளார்.

இந்த கருத்து அரசியலுக்காக தமது செல்வாக்கை அதிகரிப்புக்காக அவர் பேசினார் என சிலர் விமர்சனம் செய்யலாம். அதில் உண்மையும் இருக்கலாம்.

இருந்தபோதும் வடக்கு கிழக்கில் உள்ள பல தமிழ்மக்களுடைய ஆதங்கமும் தற்போதைய வடகிழக்கு நிலவரங்களை பெண்கள் மீதான வன்முறைகளை இல்லாமல் செய்ய வேண்டுமானால் விடுதலைப்புலிகள்தான் அதற்கு சரியான தண்டனை வழங்க கூடியவர்கள் என்ற கருத்து எல்லோரிடமும் உள்ளது. இதை பகிரங்கமாக கூறக்கூடிய பாதுகாப்பு இந்த நல்லாட்சி அரசில் இல்லை.

மனதார அனைவரும் அந்த கருத்தை ஏற்கின்றார்கள் என்பது உண்மை.

யாழ்ப்பாணத்தில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா விடுதலைப்புலிகளின் பெயரை ‘உச்சரிக்கும்போதும் மீண்டும் விடுதலைப்புலிகளை உருவாக்குவோம்’என்றபோதும் பலத்த கரகோஷங்கள் மக்கள் மத்தியில் இருந்து எழுந்ததை நாம் சாதாரணமாக நினைக்க முடியாது. அவர்களின் ஆதங்கம் யாழ்ப்பாணத்து மக்களில் மட்டும் இல்லை.

மட்டக்களப்பு, திருமலை, அம்பாறை, வவுனியா, மன்னார் கிளிநொச்சி, முல்லைத்தீவு என எல்லா மாவட்ட தமிழ்மக்களிலும் இந்த நிலைதான் உள்ளது.

தற்போது பாராளுமன்றத்திலும் இந்த பேச்சு தொடர்பாக விஜயகலாவுக்கு எதிராக இனவாத பாராளுமன்ற உறுப்பினர்கள் கூச்சல் இட்டு குழப்பி அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணித்து பாராளுமன்றத்தை ஒருநாள் ஒத்தி வைக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி மைத்திரி விஜயகலாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட இந்த பேச்சின் சக்தி தாக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதவி ஏற்று தற்போது மூன்று வருடங்கள் கடக்கும் நிலையில் வடகிழக்கு மக்களால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும்,காணிவிடுவிப்பு சம்பந்தமாகவும்,இராணுவ பிரசன்னங்களை குறைக்கும் படியும் பல்வேறுபட்ட கவன ஈர்ப்பு போராட்டங்கள் தொடர்சியாக நடைபெற்றபோதும் ஏன் வேலையில்லா பட்டதாரிகள் தமது தொழில் உரிமைக்கான கவன ஈர்ப்பு போராட்டங்களை பல மாதங்களாக செய்த போதும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காத ஜனாதிபதி, இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஷ்வரன் விடுதலைப்புலிகள் பற்றி இரண்டு வசனம் பேசியதற்கு உடனடியாகவே அந்த பேச்சை பேசியவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருவாய் மலர்ந்திருப்பதை பார்க்கும் போது விடுதலைப்புலிகளின் பெயருக்கு இருக்கும் சக்தி என்ன என்பதை இலகுவாக அறியமுடியும்,

உண்மையில் ஜனாதிபதி, இராஜாங்க அமைச்சர் விஐயகலாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதைவிட்டு இவ்வாறு அவர் ஏன் பேசினார் என்பதை ஆராய்ந்து அந்த விடயத்துக்கான நடவடிக்கை எடுப்பதே நல்லது.

2009,மே,18,க்கு பின் வடகிழக்கு பகுதிகளில் தமிழ்மக்கள் நிம்மதியாக சுதந்திரமாக வாழக்கூடிய நிலையை உருவாக்கிவிட்டு இராஜாங்க அமைச்சர் விஜயகலாமீது சட்ட நடவடிக்கை எடுப்பதே சரியான அணுகுமுறையாகும். இதுவே நல்லாட்சி அரசின் நற்பண்பாகும்.

(பா.அரியநேத்திரன்)

Share the Post

You May Also Like