கையகப்படுத்தப்பட்டிருந்த சனசமூக நிலையம் வலி கிழக்கு சபையால் திறக்கப்பட்டது

கோப்பாயில் நீண்ட காலமாக தனியார் ஒருவரின் கையகப்படுத்தலில் இருந்த வடகோவை நாவலர் சபாபதி சனசமூக நிலையம் மீளவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முயற்சியினால் மீள இயங்கவைக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பிரதேசத்தில் 1953 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வடகோவை நாவலர் சபாபதி சனசமூக நிலையமே, கடந்த ஒரு வருடமாக தனியார் ஒருவரின் பிடியில் இருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் இயங்கவைக்கப்பட்டுள்ளது. இச் சனசமூக நிலையத்தின் வளாகத்தினை அயலில் உள்ள ஆலயக் குருக்கள் ஒருவர் தனது ஆலயத்திற்குச் சொந்தமான காணி என ஆவணங்களைத் தயாரித்து கொங்கறீட் தூண் வேலியிட்டிருந்தார். இந் நிலையில், இவ் விடயம் தொடர்பாக கடந்த வருடமே வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் கவனத்திற்கு சனசமூக நிலையத்தினரால் கொண்டு வரப்பட்டிருந்தது.

தொடர்ச்சியாக பிரதேச சபை உறுப்பினர்களால் சபையின் கூட்டத்தொடரில் பிரஸ்தாபிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தவிசாளர் காணியினைக் கையகப்படுத்தியிருந்த நபரிடமும் சபையின் ஆவணங்களிலும் ஆவணங்களைக் கோரி ஆராய்ந்திருந்தார். இதன்போது, குறித்த சனசமூக நிலையத்தின் ஆதனம் பிரதேச சபைக்குரியது என சோலை வரி இடப்புக்களில் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டப்பட்டது. இதன்போது காணியினை உரிமை கோருபவர் வெளிப்படுத்தல் உறுதி ஒன்றினை கொண்டுள்ளமையும் தெரியவந்தது. இவற்றைத் தொடர்ந்து சபையில் பிரஸ்தாபிக்கப்பட்டு இச் சனசமூக நிலையத்தினை மீளவும் திறந்து சனசமூக நிலையத்தினரின் நிர்வாகம் மற்றும் பொது மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப இயங்கவைக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.

இத் தீர்மானத்தின் பிரகாரம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையிலான பிரதேச சபை உறுப்பினர்கள், சனசமூக நிலைய இளைஞர்கள், மக்கள் எனப்பலதரப்பட்டவர்களும் இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த காணியினுள் நுழைந்து சம்பிரதாயபூர்வமாக சனசமூக நிலையத்தினை ஆரம்பித்து வைத்தனர்.

Share the Post

Warning: mysql_query(): Unable to save result set in /home/newsuthanthiran/public_html/wp-includes/wp-db.php on line 1926