எல்லைப்புற கிராமங்கள் பறிபோகாமல் இருக்க மக்கள் மீள்குடியேறவேண்டும் – சத்தியலிங்கம் கோரிக்கை

வவுனியா வடக்கு பிரதேசம் தமிழ் மக்கள் செறிவாக வாழ்ந்த தாயக பூமி. எனினும் கடந்த அரசாங்கம் நன்கு திட்டமிட்ட வகையில் வவுனியா வடக்கில் பெரும்பான்மையின குடியேற்றங்களை செய்து தமிழ் மக்களின் இனவிகிதாசாரத்தை மாற்றி அமைக்க முயல்கிறது. இந்த நிலையில் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியை வடக்கு மாகாண சபையும், த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் முயற்சி செய்துவருகின்றார்கள். அதேவேளை எல்லைக்கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது சொந்தக்கிராமங்களில் குடியேறவேண்டும். இதன்மூலமே எமது பாரம்பரிய நிலங்களை பாதுகாக்கமுடியும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா வடக்கு மருதோடை வட்டாரத்தின் வெடிவைத்தகல் கிராம சேவகர் பிரிவிலுள்ள காங்சூரமோட்டை கிராமத்தில் நடைபெற்ற வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும்போது இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று (11.07.2018) காஞ்சூரமோட்டை கிராமத்தில் 33 மீள்குடியேற்ற குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பரந்தாமன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அவர் மேலும் அவர் தெரிவித்ததாவது நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளினால் எமது மக்கள் சொந்த இடங்களைவிட்டு வெளியேறியிருந்தனர். இவ்வாறு வெளியேறிய பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் வசித்துவருகின்றனர்.
இதனால் எமது பாராம்பரிய கிராமங்கள் பல மக்கள் இன்றி காடுகளாக காட்சி தருகின்றன. இதனை அரசாங்கம் தனக்கு சாதகமாக பயனபடுத்தி திட்டமிட்ட குடியேற்றங்களை நடாத்திவருகின்றது. சிங்களக்குடியேற்றங்களை தடுப்பது மட்டும் எமது நிலங்களை பாதுகாப்பதாக அமையாது. எமது பூர்வீக நிலங்களில் மக்கள் மீள்குடியேற முன்வரவேண்டும்.

வவுனியா வடக்கில் தமிழ் மக்கள் தொகை குறைவாக உள்ளமையை நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பெறுபேறு நமக்கு உணர்த்தியுள்ளது. எனவே மக்கள் மீள்குடியேற முன்வரவேண்டும். நீங்கள் வரும்பட்சத்தில் உங்களுக்கான அடிப்டை வசதிகளை செய்து தர நாங்கள தயாராகவுள்ளோம். மருதோடை வட்டாரத்தில் மீள்குடியேற விரும்புவர்களுக்கு வீட்டுத்திட்டங்களை தொடர்ந்தும் வழங்க தேசிய வீடமைப்பு அதிகார சபை தயாராகவுள்ளது. அத்துடன் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தனியார் நிறுவனமொன்று இந்தப்பகுதியில் விவசாயப்பண்ணை அமைக்க முன்வந்துள்ளது என்றார்.

Share the Post

You May Also Like