“இருட்டை எதிர்கொள்ளப் பயப்படுகின்ற குழந்தையை நாம் எளிதில் மன்னிக்க முடியும். ஆனால் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் உண்மையான சோகம் என்னவென்றால் வளர்ந்த மனிதர்கள் வெளிச்சத்தையிட்டு அச்சம் கொள்வதுதான்”என்ற புகழ்பெற்ற கூற்று இலங்கையிலுள்ள அரசியல் வாதிகளைப் பொறுத்தவரையில் சாலப்பொருத்தமானது.
ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் எதிர்க் கட்சி என்பது ஆளும் கட்சி நெறிபிறழாது இயங்குவதற்கான துணையாக அமைகின்றது. ஒரு அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஆளும் தரப்பைப் போன்றே எதிர்க் கட்சிக்கும் பொறுப்பு என்று ஒன்று இருக்கின்றது. எதிர்க் கட்சி அதன் மீதான பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டிய கட்டாய கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. எதிர்க் கட்சி என்பதற்காக சகலதையும் எதிர்த்தாக வேண்டும் என்ற நியதி எதுவும் கிடையாது. நாட்டை சீரான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் தத்துவத்தை எதிர்க் கட்சியும் கொண்டிருக்கின்றது என்பதை எவராலும் மறுத்துரைக்க முடியாது.
கடந்த காலங்களைப் போன்றே எமது நாட்டில் எதிர்க் கட்சி அரசியல் என்பது தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் ஒன்றாகவே காணப்படுகின்றது. அரசு எதனைச் செய்தாலும் மறுத்தாக வேண்டும் என்ற கோட்பாட்டையே நெடுக அவதானிக்கக் கூடியதாக உள்ளது. பாராளுமன்ற அரசியலைப் பொறுத்தளவில் ஜனநாயக விழுமியங்களை உள்வாங்கியதாகவே அமையப் பெற்றுள்ளது. இந்த ஜனநாயக விழுமியங்கள் பேணப்படாது போனால் தேசத்தை சரியான திசையில் முன்னெடுத்துச் செல்வது மிக நெருக்கடி மிக்கதாக அமைந்து விடும்.
நல்லாட்சி அரசு பதவிக்கு வந்த நாள் முதல் எதற்கெடுத்தாலும் அரசு மீது கண்டனக்கணை தொடுப்பதிலேயே எதிர்க் கட்சிகளின் ஒரு தரப்பு இயங்கிக் கொண்டிருக்கின்றது. அது மட்டுமல்ல அரசின் நல்ல திட்டங்களை முன்னெடுப்பதற்கும் தடைகளைப் போடும் விதத்தில் செயற்பட்டும் வருகின்றது. கடந்த ஆட்சியில் தாங்கள் நடந்து கொண்டவற்றை மறந்து தங்களை தூய்மையானவர்களாகக் காட்டும் ஒரு மாயை மக்கள் முன் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனை “மாமி உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்” என்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது.
கடந்த ஆட்சியில் அதாவது மகிந்த ராஜபக்ஷ நிதியமைச்சராகவும் பதவி வகித்த காலப் பகுதியில் நாட்டில் நடந்தேறிய நிகழ்வுகளை மக்கள் மறந்து விட்டார்கள் என்ற நினைப்பில் மகிந்த ராஜபக்ஷ உட்பட அந்தக்கூட்டு கருத்துத் தெரிவித்து வருகின்றது. எரிபொருள் விலை உயர்வு பற்றி மகிந்த ராஜபக்ஷ முழுப் பூசணிக்காயை சேற்றில் மறைக்கும் விதத்தில் கருத்து வெளியிட்டிருக்கின்றார். சிலவேளை இக்கூற்றுக்களை நிறக்கண்ணாடி போட்டவர்கள் அங்கீகரிக்கலாம். அவர்கள் வெள்ளைக்கண்ணாடி போட்டுப் பார்த்தால் உண்மையை விளங்கிக் கொள்ள முடியும்.
அரசாங்கத்தை செயற்படாத விதத்தில் தடைகளைப் போட்டுக் கொண்டே இருக்கவேண்டும் என்கின்ற கோட்பாடொன்றை கடைப்பிடித்து வரும் பொது எதிரணித்தரப்பின் அநாகரிகமான செயற்பாடுகளை ஜனநாயக விழுமியங்களை நேசிக்கும் சகலரும் கண்டிக்கவே செய்வர். எதிர்க் கட்சிக்குரிய தாற்பரியங்களை புரிந்து கொள்ள முடியாதவர்களாக அல்லது புரிந்து கொண்டாலும் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாகவே இவர்களைப் பார்க்க வேண்டியுள்ளது. நேர்மையற்ற இந்தச் செயலை எவரும் ஆதரிக்கப் போவதில்லை என்பது உறுதி.
நல்லாட்சி அரசாங்கத்தில் இன்று இரண்டு விதமான எதிர்க் கட்சிகளைக் காண முடிகிறது. பாராளுமன்ற விதிமுறைகளுக்கமைய தெரிவான எதிர்க் கட்சித் தரப்புக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் தலைமை வகிக்கின்றார். அவர்தான் பாராளுமன்றம் ஏற்றுக் கொண்ட எதிர்க் கட்சித் தலைவராக காணப்படுகின்றார். இந்த எதிர்க் கட்சி பாராளுமன்றக் கோட்பாடுகளுக்கமையச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் அதன் பணியை நேர்மையாக முன்னெடுப்பதற்கு ஆலோசனை வழங்கியும், தவறுகள் ஏற்படும் போது திருத்துவதிலும் சரியான பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கின்றது. இதுதான் உண்மையானதும், யதார்த்தமானதுமான ஜனநாயகப் பண்பாகும்.
மறுபுறத்தில் ஆட்சியை கவிழ்ப்பதொன்றையே நோக்காகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு எதிரணி. இதற்குத் தலைமை வகிப்பவர் மக்களால் 2015இல் தோற்கடிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஷ ஆவார். அவரும் அவரது குடும்பத்தினரும் பொதுஜன பெரமுன என்ற கட்சியினரும் ஜனநாயக விரோதப் போக்கில் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். மக்களாணை பெற்ற அரசை சதித்திட்டத்தின் மூலம் வீழ்த்தும் முயற்சிக்கு மக்கள் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள் என்பது திண்ணமாகும்.
ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதே ஒவ்வொருவரதும் கடப்பாடாகும். சில சக்திகள் அரசு துறை அதிகாரிகளையும், அரசு ஊழியர்களையும் பகடைக்காய்களாகப் பயனபடுத்தி தமது அரசியல் இலக்குகளை அடைய முயற்சிக்கின்றனர். கட்சி அரசியல் நலனைக் கருதும் சில தொழிற்சங்கங்கள் பக்கம் துணைபோயுள்ள அரசு துறை ஊழியர்கள் மற்றொரு தடவை சர்வாதிகார ஆட்சியொன்றுக்குத் துணைபோக முனைந்தால் அதன் பின்விளைவுகள் பாரதூரமானதாகவே அமைந்து விடும் என்பதை எச்சரித்து வைக்க வேண்டியுள்ளது.
இன்னொரு தடவை நாடு சர்வாதிகாரத்தின் கைகளில் சிக்கினால் அதிலிருந்து மீள்வது நம்ப முடியாததொன்றாகவே அமைந்து விடலாம். 2015 ஒன்றுபட்டு மீட்டெடுத்த நாட்டை மீண்டும் படுகுழிக்குள் தள்ளிவிட ஜனநாயகத்தை மதிக்கும், ஜனநாயக அரசியலை நேசிக்கும் எவரும் துணைபோக மாட்டார்கள் என்பது உறுதியான நம்பிக்கையாகும். மீண்டும் ஒரு இருண்ட யுகத்தின் பக்கம் நாடு போவதை தடுப்பதில் ஜனநாயக வழியில் ஒன்றுபடுவோம். அதுவே சரியான பாதையாகும்.
இருட்டால் இருட்டை நீக்கிவிடமுடியாது. வெளிச்சத்தால் தான் அது சாத்தியமாகும். இதனை அனைத்துத்தரப்பினரும் உணர்ந்துகொண்டால் நாட்டின் எதிர்காலம் சிறக்கும்.