நாவற்குழியில் உள்ள 107 குடும்பங்களை வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை?

 


நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் குடியிருக்கும் 107 குடும்பங்களை வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடம் எடுத்துரைத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டகள்ஸ் தேவானந்தா 27- 2 இன் கீழ் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சஜித் பிரேமதாஸ பதிலளித்த பின்னரே சுமந்திரன் இந்த விடயத்தை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் 107 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் மிகவும் கஷ்டத்தின் மத்தியில் வசித்து வருகின்றனர் என்பதை நான் அறிவேன். இந்த குடும்பங்களை அக்காணியில் இருந்து வெளியேற்றிவிட்டு அக்காணியை கையகப்படுத்த அரசாங்கம் வழக்கு தொடுத்துள்ளது.

எனவே இந்த விவகாரத்தை உடனடியாக அமைச்சர் கவனத்தில் கொண்டு அம்மக்களுக்கு அவர்கள் குடியிருக்கும் காணியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அரசாங்கத்தின் காணிக்கொள்கையில் மக்களை காணிகளிலிருந்து வெளியேற்றும் கொள்கை உள்ளடக்கப்படவில்லை. இப்பிரச்சினை தொடர்பில் உடனடியாக கவனத்தில் கொண்டு இந்த விவகாரம் குறித்து உங்களுக்கு ஆக்கபூர்வமான பதிலொன்றை விரைவில் வழங்குவேன் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ சுமந்திரனிடம் வாக்குறுதியளித்தார்.

Share the Post

You May Also Like