எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தனே தொடர்வார்: சபாநாயகர் அறிவிப்பு

எதிர்க்கட்சி தலைவராக இரா.சம்பந்தனே தொடர்ந்தும் செயற்படுவார் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

சபாநாயகர் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வுகளின்போதான சபாநாயகர் அறிவிப்பு நேரத்திலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசியல் யாப்பு மற்றும் நாடாளுமன்ற சம்பிரதாயங்களின் அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை மாற்ற முடியாது என சபாநாயகர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் சுமார் 70 உறுப்பினர்களை கொண்டுள்ள தமக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என ஒன்றிணைந்த எதிரணி எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பில் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதுடன், குறிப்பாக ஒன்றிணைந்த எதிரணி அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கருத்தை சபாநாயகர் பிரத்தியேகமாகக் கூறியிருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்து ஒன்றிணைந்த எதிரணியான, மஹிந்த ஆதரவு எம்பிக்களினால் கடந்த வாரம்சபாநாயகரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இன்று (10) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் இது தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவித்த சபாநாயகர், சம்பிரதாயபூர்வாகவோ, அரசியலமைப்பு ரீதியாகவோ தனக்கு எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்கவோ, மாற்றவோ அதிகாரம் கிடையாது என தெரிவித்தார்.

ஆயினும் எதிர்க்கட்சியிலும் இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களுக்கு, போதிய நேரத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தற்போதைய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலையும் விசேட கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்று இவ்விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து சபாநாயகர் தீர்மானமிக்க அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

Share the Post

You May Also Like