மட்டக்களப்பு நகரை அழகுபடுத்தல் – வர்த்தக சங்கத்தினருடன் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாநகரசபையினருக்கும், வர்த்தக சங்கத்தினருக்கும் இடையிலான நகரை அழகுபடுத்தல் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு நேற்று மாலை மாநகரசபை மண்டபத்தில் மாநகர உதவி ஆணையாளர் என்.தனஞ்செயன் தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் என்.மணிவண்ணன் மற்றும் வர்த்தக சங்க முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பிற்கே உரிய தனித்துவமான அழகோடு வாவிகள் சூழப்பெற்ற நகர்ப்பகுதியினை மேலும் மெருகூட்டி அழகு சேர்க்கும் நோக்கோடு மட்டக்களப்பு மாநகரசபையால் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும், இத்திட்டத்தில் வர்த்தகர்களின் வகிபாகம் தொடர்பாகவும் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

மாநகர எல்லைக்குள் அமைக்கப்படும் வர்த்தக நிலையங்களின் கட்டட அமைவுகள் கட்டாயம் மாநகர சபையின் கட்டட விதிமுறைகளுக்கு அமைவாக அனுமதியினைப் பெற்று அமைக்க வேண்டும், வர்த்தக மையங்களின் முன்னால் உள்ள வீதிகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதனால் பொது மக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதனால் முறையான வாகனத் தரிப்பிட வசதியினை ஏற்படுத்துதல், திண்மக் கழிவகற்றல் மற்றும் கழிவு நீரினை வடிகானிற்குள் திறந்து விடுவதன் மூலம் வாவி மாசடைதல், வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் இரவு வேளைகளில் வீசப்படும் குப்பைக் கழிவுகள், நகருக்குள் வரும் பிரயாணிகளின் நன்மை கருதி மலசலகூட வசதிகள் அமைப்பதன் அவசியம் போன்ற விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதன் பின்னர் நகருக்குள் இருக்கும் வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் குப்பைகள் வீசப்படுவது தொடர்பில் முதற்கட்டமாக ஒவ்வொரு வீதிக்கும் ஒவ்வொரு குழுவினரை நியமித்து கழிவகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், பொது இடங்களில் குப்பைத் தொட்டிகளை வைப்பது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

Warning: mysql_query(): Unable to save result set in /home/newsuthanthiran/public_html/wp-includes/wp-db.php on line 1926