கனடியத் தமிழர் நீள்நடை மூலம் வடக்கு மாகாண இறுதிக்கால நோய்ப் பராமரிப்புத் திட்டத்திற்கு $58,000 நன்கொடை சேர்க்கப்பட்டது

செப்ரெம்பர் 9, 2018 – கனடியத் தமிழர் பேரவையால் ஸ்காபரோ தொம்சன் நினைவுப் பூங்காவில் கனடியத் தமிழர் நீள்நடை 2018 ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தப் பத்தாவது ஆண்டு நீள்நடையில் சேர்த்த நன்கொடையை வடக்கு மாகாண இறுதிக்கால நோய்ப் பராமரிப்புக்காக இரு உலகுகள் புற்றுநோய் கூட்டுமுயற்சி (கனடா), வடக்கு கிழக்கு புற்றுநோய்க்கான உதவி(UK), சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் கனடாவின் (IMHO Canada) ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியின் பலனாகும். இந்நிதியானது யாழ்ப்பாண மாவட்டத்தில் இறுதிக்கால நோய்ப் பராமரிப்புக்காக ஒரு  நடமாடும் பிரிவை உருவாக்கி அவர்களது வீடுகளிலேயே பராமரிப்பதற்காக பயன்படும்.

இறுதிக்கால நோய்ப் பராமரிப்பானது தீராத மற்றும் தீவிரமடையும் நோய் உள்ளவர்களுக்கான பரமரிப்பாகும். இலங்கையின் வடக்கு மாகாணத்தில் குடும்ப, சமூக கட்டமைப்புகள் போரினால் குலைந்துவிட்டன. அத்துடன் இளைய தலைமுறையினரின் புலப்பெயர்வு அச்சமுதாயத்தின் ஏழைகளை, நோய் வாய்ப்பட்டவர்களை, வயோதிபர்களை நிராதரவாக்கிவிட்டது. வடக்கு மாகாண இறுதிக்கால நோய் பராமரிப்பு முன்னெடுப்பானது, அவர்களது சூழ்நிலையைத் தேற்றுவதற்கு, வலியைக் குறைப்பதற்கு, பல நோயாளிகளினதும் குடும்பத்தினரதும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையும் நோக்காகக் கொண்டது.

அன்றைய நாள் வானிலை குளிராக இருந்தபொழுதும், நூற்றுக்கணக்கான கனடியர்கள், பல்வேறு இனத்தவரும், வயதினரும் இந்நிகழ்ச்சிக்கு ஆதரவளிக்க வருகை தந்திருந்தார்கள். சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் கனடாவின் தலைவரும் மருத்துவருமான மகாதேவன் வரகுணனும், அபிஷேகா லொயிட்சன்னும் இந்நிகழ்ச்சியை தொகுத்தளித்தார்கள். யாழ்ப்பாண நகரபிதா மேன்மைமிகு இம்மானுவல் ஆர்னோல்ட், பீல் பிரிவு பொது நல அமைப்பின் துணை அலுவலகர் மருத்துவர் லாரன்ஸ் லோ, ஒட்டாவாவைச் சேர்ந்த குழந்தை நல இறுதிக்கால நோய் மருத்துவர் மேகன் டொர்தி, இரு உலகுகள் புற்றுநோய் கூட்டுமுயற்சி அமைப்பின் பிரதிநிதி ஆகியோர் சிற்றுரைகளை வழங்கினர்.

சமூக அமைப்புகளான தமிழ் மருத்துவ அமைப்பு, மற்றும் ஒன்ராறியோ முது தமிழர் சங்கங்கள் சிறப்பாகக் கௌரவிக்கப்பட்டனர். முது தமிழர்கள் அதிகூடிய குழுப் பங்களிப்பாக $12,800ஐ வழங்கியிருந்தனர். விரைவு அச்சுக் கலையகத்தின் திரு. துசி அவர்கள் அதிகூடிய தனிநபர் பங்களிப்பாக $5000த்தை வழங்கியிருத்தார்.

உத்தியோகபூர்வ அனுசரணையாளர்களான வெஸ்ற்ஜெட் (WestJet), லக்வா கிச்சின்(Lucvaa Kitchen), டொட்ரொ ஸ்ரூடியோ(Doto Studio), மற்றும் எட்வேட்ஸ் ஜோன்ஸின் (Edward Jones) ராஜ் தவரட்ணசிங்கம் ஆகியோரது தாராள ஆதரவால் சேர்க்கப்பட்ட நூறு விழுக்காடு நிதிகளும் வடக்கு மாகாண இறுதிக்கால நோய்ப் பராமரிப்புக்காக பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. நன்றி!

இந்த ஆண்டு, ”வியத்தகு ஓட்டம்” என்ற விளையாட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ஐந்துபேரைக் கொண்ட ஒன்பது குழுக்கள் இதில் பங்குபற்றியிருந்தனர். அவர்கள் பல்வேறு உள, உடல் சவால்களை நிறைவேற்றி இறுதிக்கோட்டைத் தாண்டினார்கள். இந்நிகழ்ச்சியில் பங்குகொண்ட அனைவருக்கும் மகிழ்ச்சிகரமாக அமைந்திருத்தது.

$50,000 நிதி இலக்கை அடைந்ததை அறிவித்தபின்னர், நீள்நடையில் பங்குகொண்ட அனைவரும் கனடியத் தமிழ் சமுதாயத்தின் திறமை நிறைந்த இளம் சந்ததியினரின் இசை நிகழ்ச்சி மற்றும் நடன நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.

இறுதிக்கால நோய்ப் பராமரிப்பானது எங்கள் அனைவருக்குமானது. இந்நிலை எமக்கும் ஏற்படலாம் என்ற எண்ணத்தை ஐந்து கிலோமீட்டர் நீள்நடையில் பங்குகொண்ட பலரும் பிரதிபலித்தனர்.

2009ஆம் ஆண்டு முதல், கனடியத் தமிழர் நீள்நடை மூலம் $500,000க்கு மேற்பட்ட நிதியை சேகரித்து, நிதியுதவிக்கு தகுந்த அமைப்புகளுக்கு, செயற்றிட்டங்களுக்கு வழங்கப்பட்டது; அவையாவன நோய்வாய்ப்படு சிறுவர் அறக்கட்டளை (2009), கனடிய புற்றுநோய் அமைப்பு (2010), அனைத்துலக பொதுமன்னிப்பு அமைப்பு (2011), தீயபழக்கங்களுக்கு அடிமையாதலுக்கும், உளநலத்துக்குமான நிலையம் (2012), கொலாண்ட் புலோர்வியூ அறக்கட்டளை (2013), கனடிய புற்றுநோய்க்கும் வாதநோய்க்குமான அறக்கட்டளை (2014), சம்பூர் மீள்குடியமர்வு (2015), கனடா-மட்டக்களப்பு நட்புப் பண்ணை (2016), தென்னமரவடி மீள்குடியமர்வு (2017).

இவ்வடக்கு மாகண இறுதிக்கால நோய் பராமரிப்புத் திட்டத்திற்கு நன்கொடை அளிக்க விரும்புவோர், கனடியத் தமிழர் நீள்நடைக்கான இணையத்தளத்திற்குச் (www.tamilcanadianwalk.ca) சென்று உங்கள் நன்கொடையை வழங்கமுடியும். இணைய நன்கொடைகள் ஒக்டோபர் 1, 2018 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

Share the Post

You May Also Like