ஸ்ரீநேசன் எம்.பியின் அயராத முயற்சியால் மட்டு.பொதுநூலக கட்டடத்திற்கு நிதி

மட்டக்களப்பு நகரில் கடந்த ஆட்சிக் காலத்தில் பகுதியளவு கட்டப்பட்டு, கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்ற பொது நூலகக் கட்டடத்தை கட்டி முடித்து பொது மக்களின் பாவனைக்கு கையளிக்க மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்களினால் நீண்ட காலமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த வருடம் உள்ளுராட்சி அமைச்சின் மூலம் நிதி ஒதுக்கீட்டினைப் பெற முயற்சி செய்த போதும், தேசியத் திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதி பெறப்படாமல் ஆரம்பிக்கப்பட்டிருந்த இக்கட்டடத்தை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு இறுதி நேரத்தில் தடுக்கப்பட்டது.

எனினும் பாராளுமன்ற உறுப்பினரின் தொடர் முயற்சியின் பயனாக தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றதோடு, கடந்த 08ம் மாதம் திறைசேரி ஊடாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் மதிப்பீடுகள் மற்றும் முறையான விண்ணப்பங்களை சமர்ப்பித்து, மட்டக்களப்பில் தற்போது இயங்கும் நூலகத்தின் வசதி நிலைமை தொடர்பிலும், அமைத்து இடையில் நிறுத்தப்பட்டுள்ள நூலகத்தின் அவசியம் தொடர்பிலும் தெளிவுபடுத்தி பிரதமர் அவர்களின் அமைச்சினூடாக ரூபா 169.97 மில்லியனுக்கான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவை அனுமதிக்காகச் சமர்ப்பிக்கச் செய்திருந்தார். இந்த சமர்ப்பிப்பானது கடந்த 11ம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு இத்தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது.

எவ்வித ஆரவாரமுமின்றி சிறந்த திட்டமிடலின் மூலம் மேற்படி செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் இது போன்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களும் பாராளுமன்ற உறுப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்புகளில் ஒன்றான இவ்விடயம் தனது முயற்சியினால் நிறைவேறப்போகின்றது என்பது மிகவும் மகிழ்ச்சிகுரிய விடயம் எனவும், மட்டக்களப்பு மக்களின் உணர்வுகளை மதித்து நூலக கட்டிடத் தொகுதிக்கான நிதி ஒதுக்கீட்டினைப் பெற ஒத்துழைத்த திறைசேரி அதிகாரிகள் மற்றும் அனுமதியைப் பெற்றுத் தந்த பிரதமர் ஆகியோருக்கு மட்டக்களப்பு மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share the Post

You May Also Like