சமஷ்டியே பொருத்தம்! வடக்கு, கிழக்கு மீளிணைய வேண்டும்!! – இந்தியத் தூதுவரிடம் கூட்டமைப்பு எடுத்துரைப்பு

“பல்லினங்கள் வாழும் நாட்டுக்குப் பொருத்தமான ஆட்சி முறைமை சமஷ்டி முறைமையே ஆகும். மாகாண ஆட்சி முறைமையில் குறிப்பாக வடக்கு, கிழக்கு என்பன மீளிணைய வேண்டும்.”

– இவ்வாறு இந்தியத் தூதுவர் தரண்ஜித் சிங் சந்துவிடம் நேரில் எடுத்துரைத்தனர் கிழக்கிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள்.

கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைவரம் மற்றும் இந்திய உதவியுடனான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக இந்தியத் தூதுவர் அங்கு சென்றார்.

நேற்று மட்டக்களப்புக்குச் சென்ற இந்தியத் தூதுவர், பாசிக்குடாவிலுள்ள விடுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பிரதிநிதிகளைச் கூட்டாகச் சந்தித்து உரையாடினார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சா.வியாழேந்திரன், எஸ்.கோடீஸ்வரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், கோ. கருணாகரம் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதன்போது, “புதிய அரசியலமைப்பானது விரைவில் அமைக்கப்பட வேண்டும். பல்லினங்கள் வாழும் நாட்டுக்குப் பொருத்தமான ஆட்சி முறைமை சமஷ்டி முறைமையே” என்று கூட்டமைப்பு பிரதிநிதிகளினால் சுட்டிக்காட்டப்பட்டது.

மாகாண ஆட்சி முறைமையில் குறிப்பாக வடக்கு, கிழக்கு என்பன மீளிணைக்கப்பட்ட வேண்டிய அவசியம் பற்றியும் கூட்டமைப்பு பிரதிநிதிகளினால் வலியுறுத்தப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் இனங்களுக்கிடையிலான நிலைப்பாடுகள் தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டது.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைக் கட்டியெழுப்பும் முகமாக தொழிற்பேட்டைகள் அமைத்தல், குடிதண்ணீர் பிரச்சினையை நிவர்த்தி செய்தல், கழிப்பறை வசதியற்ற குடும்பங்களுக்கான கழிப்பறை வசதிகள் அமைத்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், இந்தியாவுடனான தமிழ் மக்களின் நெருக்கம் அதிகரித்துள்ளமையால் மட்டக்களப்பில் இந்தியத் தூதரக அலுவலகக் கிளையொன்றை அமைத்தல் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் நீர்ப்பாசன செயன்முறைகளை மேம்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like