உசுப்பேற்றும் ஊடகங்களால் உருக்குலையும் இலங்கைத் தமிழர்!

போர்க்காலத்தில் உசுப்பேற்றுவதையே தங்கள் பணியாகக் கொண்டிருந்த ஊடகங்கள் இன்றுவரை தொடர்ந்தும் மக்களை உசுப்பேற்றிக் கொண்டே இருக்கின்றன. கடந்த காலத் தவறுகளில் இருந்து எந்த ஒரு படிப்பினையையும் பெற்றுக் கொள்ள முயலாமல் இருக்கிறோம்.

முன்பு ஒரு காலத்தில், வன்முறை போருக்கு முன்னர் பத்திரிகைகளில் வரும் செய்திகள் பெரும்பாலும் உண்மையாகவே இருக்கும். அத்துடன் வெளிவரும் ஆக்கங்களில் பயன்மிக்க கருத்துக்கள் நிறைந்திருக்கும். கருத்துக்கள் வாசகரை சிந்திக்கத் தூண்டின. ஏனெனில், அன்றைய எழுத்தாளர் யாவரும் மிகவும் சமூகப் பொறுப்பு உள்ளவராகவும், தகுதி வாய்ந்தவராகவும், திறமை மிக்கவராகவும் இருந்தனர்.

ஆனால், காலம் செல்லச் செல்ல எல்லாமே தலைகீழாக மாறிவிட்டமை எம் இனத்தின் சாபக்கேடே தவிர வேறொன்றும் இல்லை. அதுவும் 2009 இன் பின்னர் ஏதோ எழுதத் தெரிந்தோர் எல்லோரும் எழுத்தாளர் தான். இணையத்தளம் வந்து தொழில் நுட்ப வளர்ச்சியும் அடைந்த பின்னர் எழுதத் தெரியாவிட்டாலும் இணையத்தளத்தில் பதிவேற்றத் தெரிந்தவர் எல்லோரும் ஊடகவியலாளர் ஆக மாறிவிட்டனர்.

புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்கள் சில விக்னேஸ்வரனையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முகமூடி அகில இலங்கைத் தமிழ் காங்கிரசையும் இயக்கி வருகின்றன என்பது எல்லோரும் அறிந்ததே. அவ்வாறே வெளிநாடுகளிலும் தாயகத்திலும் உள்ள 90 வீதத்துக்கும் மேற்பட்ட தமிழ் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இவர்களாலேயே இயக்கப்படுகிறார்கள்.

இன்று விக்னேஸ்வரனுக்கு மீண்டும் மகுடம் சூட்டுவதற்கு இந்த ஊடகங்கள் துடியாய்த் துடிக்கின்றன. இவர் எழுதி வாசிப்பவற்றையும் இவர் சார்பான கருத்துக்களையும் மட்டுமே எப்போதும் தவறாது பதிவு செய்கின்றன. இவ்விதமான ஊடக பரப்புரையின் விளைவுகளை அறியாதோர் மட்டுமல்ல, கற்று அறிந்தோரும் சிந்தனை திறன் உடையோரும் இவ்விதமான ஊடக பரப்புரையில் ஈடுபட்டு இருப்பது மிகுந்த வேதனைக்கு உரிய விடயமாகும். இவ்வளவுக்கு இந்த ஊடகங்கள் விலை போயிருக்கின்றன. இது எமது இன நலத்துக்கு உகந்தது அல்ல.

சுமந்திரன் அவர்களது பேச்சுத் தொடர்பாக அதுபற்றிய கேள்விகளை வேறு யாரிடமாவது மீண்டும் மீண்டும் கேட்டு தங்களுக்கு விருப்பமான பதிலை மட்டும் பதிவு செய்யும் ஊடகங்களின் உள்நோக்கம் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.ஒருவருடைய பேச்சுத் தொடர்பான விளக்கம் உண்மையாகவே வேண்டுமானால், அந்த பேச்சாளரிடமே முதலில் கேள்விகளைக் கேட்க வேண்டும். அந்தப் பேச்சாளர் கூறிய பதிலை அப்படியே முழுவதும் எந்த மாற்றமும் இன்றிப் பதிவு செய்ய வேண்டும். ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய அறநெறி இதுவே.

முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் விஞ்சியிருக்கும் இயல்புகள் எவை?தன்னலம், தற்செருக்கு, தன் முனைப்பு மற்றும் தான்தோன்றித்தனம் என்பவையே! எதையும் எழுதாமல் பேசவோ, நேருக்கு நேர் விவாதிக்கவோ முடியாத விக்னேஸ்வரன், சுமந்திரனை தனது மாணவன் என்று எள்ளலாக மீண்டும் மீண்டும் சொல்வது அவரது பதவிக்குப் பெருமை தருவதாக இல்லை. அது அவரது சிறுமையைத்தான் எடுத்துக் காட்டுகிறது.

ஒரு மாணவன் இவர்தான் தன் குரு என்று சொல்வது தான் அந்தக் குருவுக்குப் பெருமை. குருவே இவர் என் மாணவன் என்று எள்ளலாகச் சொல்வது சிறுமை.

இன்னும் விளக்கம் வேண்டுமானால், பிரேமானந்தசுவாமியே தன் குரு என்று விக்கினேஸ்வரன் சொன்னால் அது பிரேமானந்தசுவாமிக்கு பெருமை. விக்னேஸ்வரனை தன் மாணவன் என்று பிரேமானந்தசுவாமியே மீண்டும் மீண்டும் சொன்னால் அது பிரேமானந்தசுவாமிக்குச் சிறுமை.

உண்மையை மறுத்து பேசுவோர் யார்? தோற்றுப் போன தலைமை எது? தானே அமைத்த விசாரணைக்குழு அளித்த தீர்ப்பை அப்படியே நடைமுறைப்படுத்தத் தவறியது யார்? தவறியது ஏன்? வடமாகாண சபையின் 45 உறுப்பினர்களில் 30 உறுப்பினர்கள் த. தே. கூட்டமைப்பினர். இவர்களில் சரிபாதிக்கு மேலான உறுப்பினர்களது ஆதரவை இழந்து போய் இருப்பது யார்?

ஒரு (முன்னாள்) உச்ச நீதிமன்ற நீதியரசர் மேன்முறையீடு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தத் தவறியதன் விளைவாகவே இன்று நீதிமன்றம் சென்று அவமானப்பட வேண்டிவந்துள்ளது. முன்னாள் நீதியரசர் ஒருவர் குற்றவாளிக் கூண்டில் நின்று கொண்டு இன்னாள் நீதியரசர்கள் கையால் நீதிமன்ற அவமதிப்புப் தொடர்பான குற்றப்பத்திரிகையை வாங்க நேரிட்டுள்ளது.

ஐயா சம்பந்தன் அவர்கள் நேற்று தலைமைக்கு வந்தவர் அல்லர். 1961 இல் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டம் தொடங்கி இன்று வரை அரசியலில் இருப்பவர். அதாவது 57 ஆண்டு கால அரசியல் வரலாற்றைக் கொண்டவர். முதன்முறையாக 1977 இல் நாடாளுமன்றத்துக்கு திருகோணமலைத் தொகுதியில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர். பின்னர் 2001, 2004, 2010, 2015 நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றவர். கடந்த 16 ஆண்டுகளாக த.தே. கூட்டமைப்பின் தலைவர் அவரே. சம்பந்தன் ஐயா செய்த ஒரே ஒரு தவறு என்னவென்றால், விக்கினேஸ்வரனை ஒரு கனவான் என நம்பி வட மாகாணசபை முதல் அமைச்சர் ஆக்கியது மட்டும் அல்லாமல் மாகாணசபைப் பொறுப்புகள் முழுவதையும் அவரிடம் ஒப்படைத்ததே!

ஊடகங்களே! உணர்ச்சி அரசியலால் ஆகப்போவது எதுவுமே இல்லை! உணர்ச்சி அரசியலுக்கு இடம் கொடுக்காமல், அறிவு பூர்வமாக சிந்தித்து எமது உரிமைகளை வென்றெடுத்து எம்மினத்தின் வாழ்வையும் இருப்பையும் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து உறுதி செய்வோமாக!

“சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீ

நன்றின்பால் உய்ப்பது அறிவு” (அதிகாரம் 43 அறிவுடமை – குறள் 422)

மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல், தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.

யாழன்பன்

Share the Post

You May Also Like