உருவம் எப்படியிருந்தாலும் உள்ளடக்கம் சரியாக இருந்தால் சரியே!

குழைக்காட்டான்

விக்னேஸ்வரன் தேசியவாதியல்ல. அவர் ஒரு குழப்பவாதி. பதவிக்கு வந்த காலம் தொட்டுத் தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் எனப் பிடிவாதம் பிடிப்பவர். ஏறிய ஏணியை எட்டி உதைத்தவர். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர். தனது மருமகன் நிர்மலனுக்கு அ.டொலர் 5,000 சம்பளத்தில் வேலை கேட்டு அது கொடுக்கப்படவில்லை என்பதற்காக யூன்டிபி அ. டொலர் 150 மில்லியன் (ரூபா 2720 கோடி) உதவி நிதியைக் கோட்டை விட்டவர்.

கடந்த நான்கு மாதங்களாக வட மாகாண சபை அமைச்சர் வாரியம் இயங்கவில்லை. முக்கிய முடிவுகள் எடுக்க முடியவில்லை. முதலமைச்சரின் தலைக்கனம் மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த இடம் கொடுக்கவில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர் கொள்கிறார். அவரது பதவிக்காலம் முடிந்தாலும் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தலைக்கு மேல் வாள் போல் தொங்கிக் கொண்டிருக்கும்!

இந்த வழக்கு சென்ற மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது விக்னேஸ்வரன், சிவநேசன், அனந்தி மூவரது பெயரும் கூப்பிடப்பட்டது. அப்போது சிவநேசன் மற்றும் அனந்தி எழும்பி நின்றார்கள். விக்னேஸ்வரன் எழும்பி நிற்கவில்லை. “சட்டத்தின் முன் அனைவரும் சமம். பெயர் கூப்பிடும்போது பிரதிவாதிகள் எழும்பி நிற்க வேண்டும் என்பது ஆசாரம் (etiquette) என்று நீதிமன்றம் சொன்ன பின்னர் மீண்டும் பெயர் கூப்பிடப்பட்டது. இம்முறை விக்னேஸ்வரன் எழும்பி நின்றார். இது அவருக்குத் தேவையா? ஒரு முன்னாள் நீதியரசருக்கு நீதிமன்ற ஆசாரம் தெரியாதா?

2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ததேகூ எதிராக அறி்க்கை மேல் அறிக்கை விட்டார். வீட்டுக்கு வெளியே வந்து வாக்களிக்குமாறு வாக்காளர்களைக் கேட்டார். ஆனால் மக்கள் அவரது வேண்டுகோளை புறந்தள்ளி விட்டார்கள்.

கட்சி விசுவாசத்தை விட்டு விடுவோம். வட மாகாண சபையின் நிர்வாகம் படுமோசம் என்று எல்லோரும் சொல்கிறார்கள். மாகாண சபைக்குச் செல்லாமல் தனது அமைச்சின் ஊழியரது திருமணத்துக்குப் போனார். கேட்டதற்கு திருமணம் வாழ்க்கையில் ஒருமுறை நடப்பது. சபை அமர்வு அப்படியல்ல என்று எகத்தாளமாகப் பதில் அளித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் வெற்று அரசியல் நடத்துபவர். மாகாண சபையால் பிரயோசனமில்லை, ஐ.நா ம.உரிமை பேரவையின் தீர்மானங்களால் பிரயோசனமில்லை அதில் தமிழ் என்ற வார்த்தை கூட இல்லை என்று சொல்லி அதை ஜெனீவா வீதிகளில் போட்டு எரித்தவர். கூட அமெரிக்க நாட்டின் தேசியக் கொடியையும் சேர்த்து எரித்தவர்கள்.

நாய்க்குக் கல் எறிந்தால் அது எங்கு பட்டாலும் காலைத்தான் தூக்குமாம். கஜேந்திரகுமாரும் எப்ப பார்த்தாலும் சம்பந்தன் தமிழ்மக்களுக்குத் துரோகம் செய்கிறார் என்று புலம்புகிறார்.

வட – கிழக்கு மாகாணங்கள்தான் தமிழர்களின் தாயகம் என்று சொல்லும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள்தான் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறது.

கஜேந்திரகுமார் மாதம் ஒருமுறை யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மாநாடு நடத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை திட்டுகிறார். அண்டை நாடான இந்தியாவை வசைபாடுகிறார். இந்தியாவை நம்பிப் பிரயோசனம் இல்லை என்கிறார். அமெரிக்காவை நம்பிப் பிரயோசனம் இல்லை என்கிறார்.

அப்படியென்றால் தமிழ்மக்களது உரிமைகளை வென்றெடுக்க என்னதான் மாற்று வழி? மீண்டும் ஆயுதங்களைக் கையில் எடுப்பதா? மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலை நோக்கிப் பயணிப்பதா?

இப்படித்தான் கஜேந்திரகுமாரின் பாட்டனார் ஜிஜி பொன்னம்பலமும் தமிழ் அரசுக் கட்சியைத் திட்டுவதை தனது முழுநேரத் தொழிலாகக் கொண்டிருந்தார்.1957 இல் பண்டாரநாயக்க – செல்வநாயகம் உடன்படிக்கை வந்த பொழுது ஜீ.ஜீ,செல்வநாயகம் தமிழர்களை விற்றுவிட்டார் ,காட்டிக் கொடுத்துவிட்டார் என்றார்.

பண்டா -செல்வா ஒப்பந்தத்தால் பண்டாரநாயக்க சிங்களவரைக்காட்டிக் கொடுத்துவிட்டார் என்று தெற்கில் கலவரத்தை யு.என்.பியும்,தீவிரவாதிகளும் கிளர்ச்சி செய்தனர்.அவ்வாறே புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை 2008 இல் வந்த பொழுது ராஜபக்சவும், தீவிரவாத சிங்கள  வழக்கறிஞர்களும் “ஒருமித்த சொற்பதம்”சமஷ்டிதான் “நாட்டைப் பிளவு படுத்தப்போகிறது” என்று உள்ளுராட்சித் தேர்தலில் பிரசாரம் செய்து பிரசாரம் செய்து பெரு வெற்றி பெற்றனர்.

அதேவேளை வடக்கில் காங்கிரஸ் வழக்கறிஞர் கஜேந்திரகுமாரும், நம் முதலமைச்சர் நீதியமைச்சர் விக்னேஸ்வரனும் அந்த இடடைக்கால அறிக்கையில் “ஒற்றையாட்சி” இருக்கிறது என்றும் எனவே இடைக்கால அறிக்கையை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டுமென அறிக்கை விட்டுக் கொண்டிருந்தனர்.

தமிழ் அரசுக் கட்சி இணைப்பாட்சி கேட்ட போது பொன்னம்பலம் ஒற்றையாட்சிதான் இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்.

தமிழ் அரசுக் கட்சி இணைப்பாட்சி கேட்டு தமிழ்மக்களை வடக்கு கிழக்கு மாகாணங்களில் முடக்கப் பார்க்கிறது. அது தமிழ்மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம் என்று மேடைகளில் முழங்கினார். வடக்கே பருத்தித்துறையில் இருந்து தெற்கே தேவேந்திரமுனை வரை தமிழ் மக்கள் வாழ்வதற்கு உரிமை வேண்டும் என்றார். அது ஒற்றையாட்சியின் கீழ்தான் சாத்தியம் என்றார்.

இன்று சுமந்திரன் இணைப்பாட்சி (சமஷ்டி) வேண்டாம் என்று காலியில் நடந்த கூட்டம் ஒன்றில் சொன்னதாக கஜேந்திரகுமார் ஓலம் இடுகிறார். இது காலத்தின் கொடுமை.

சுமந்திரன் இணைப்பாட்சி பற்றித்தான் காலிக் கூட்டத்தில் பேசினார். இணைப்பாட்சி மற்றும் ஒற்றையாட்சி இரண்டும் தனித்தனி (compartment ) முறைமையல்ல. இப்பொழுது – 60 வருடங்களுக்கு முந்திய நிலமை வேறு இன்றைய நிலமை வேறு. இது சமஷ்டி, இது ஒற்றையாட்சி என்ற பிரிவு தெளிவாகக் கிடையாது. இணைப்பாட்சியில் ஒற்றையாட்சியின் பண்புகளும் ஒற்றையாட்சியில் இணைப்பாட்சியின் பண்புகளும் இருக்கின்றன. எடுத்துக் காட்டாக ஐக்கிய இராச்சியம் ஒற்றையாட்சி அரசியல் முறைமையைக் கொண்டது. ஆனால் ஸ்கொட்லாந்து விரும்பினால் ஒரு பொது வாக்கெடுப்பு எடுத்துப் பிரிந்து போகலாம் என ஐக்கிய இராச்சியம் சொன்னது. இப்படிப் பிரிந்து போகும் உரிமை பல இணைப்பாட்சி அரசியல் யாப்பைக் கொண்டுள்ள நாடுகளில் இல்லை. எடுத்துக்காட்டு இந்தியக் குடியரசைச் சொல்லலாம்.

இந்திய அரசியலை எடுத்துக் கொண்டால் அது சமஷ்டி அரசியல் யாப்பா அல்லது ஒற்றையாட்சி அரசியல் யாப்பா என்று சொல்லவில்லை. தொடக்க காலத்தில் அது சமஷ்டியைப் போன்றது – குவாசி பெடரல் (quasi-federal) – என வருணித்தன. அதே அரசியல் அமைப்பை இன்று இந்திய உச்ச நீதிமன்றமே அது முற்று முழுதான சமஷ்டி எனச் சொல்கிறது. ஆகவே அதற்கு ஒரு லேபல் போடும்போது மாற்றம் ஏற்படலாம். ஆனால் உள்ளடக்கம் ஒன்றுதான்.

தமிழர்களுக்கு ஒரு பல்கலைக்கழகம் நிறுவ அறுபதுகளில் ஐதேக ஆட்சி முன்வந்தது. தமிழ் அரசுக் கட்சி அந்தப் பல்கலைக்கழகம் திருகோணமலையில் நிறுவப்பட வேண்டும் எனக் கூறியது.

பொன்னம்பலம் என்ன சொன்னார்? யாழ்ப்பாணத்தில் ஒரு இந்துப் பல்கலைக் கழகம் வேண்டும் என்றார்.

முடிவில் எந்தப் பல்கலைக்கழகமும் நிறுவப்பட வில்லை. திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவின் காலத்தில்தான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1974 இல் தோற்றம் பெற்றது.

காலியில் நடந்த கூட்ட முடிவில் சபையில் இருந்த ஒருவர் ஒரு நீண்ட கேள்வியை சுமந்திரனிடம் கேட்டார்.

அவர் சுமந்திரனிடம் கேட்ட கேள்வி பெடரல் கிரமய வேணுமா? அப்படிக் கேட்டதாகத்தான் அவரது முழு விளக்கம். அவர் ஒரு கொப்பியைக் கொண்டு வந்து மூன்று நிமிடமாக அந்தக் கேள்வியைக் கேட்டார். சுமந்திரன் அதைச் சுருக்கமாக பெடரல் கிரமய என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டுமா? என்று அவர் கேட்டதாகத்தான் விளங்கிக் கொண்டார். முற்று முழுதாக சமஷ்டி என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் எழுதினால்தான் அதை சுமந்திரன் ஏற்றுக் கொள்வார் என அவர் நினைத்தார்.

அப்படியானால் பெடரல் முறை என்று தெட்டத் தெளிவாக எழுதி சமஷ்டி முறை என்று இருந்தால் மட்டுமே நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? ஏன் அந்தக் கேள்வியை அவர் கேட்டார் என்பது முக்கியமானது. சுமந்திரனுடைய பேச்சின் அடிப்படையில் அவர் விளங்கிக் கொண்டது அதுதான். அவருடைய பேச்சில் இருந்து அவர் நினைத்தார் முற்று முழுதாக சமஷ்டி என்று எழுதினால்தான் இவர் ஏற்றுக் கொள்வார் என்று.

அதற்கு சுமந்திரன் அளித்த பதில் பெயர்ப்பலகை எங்களுக்குத் தேவையில்லை. அதாவது  சமஷ்டிக் கட்டமைப்பு இருக்கவேண்டும் அதற்கு 13ஏ சட்ட திருத்தத்தில் சில மாற்றங்களை செய்தால் போதும். அந்தத் திருத்தங்கள் என்ன?

(1) மாகாண சபைக்குக் கொடுக்கப்படுகிற அதிகாரங்கள் மத்திய அரசினால் திருப்பிப் பெற முடியாது.

(2) ஆளுநருக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரம் மாகாண அமைச்சர் வாரியத்திடம் கையளிக்கப்பட வேண்டும்.

இந்த இரண்டும் இருந்தால் அது சமஷ்டி அரசியல் யாப்புத்தான்.

13 ஏ இலங்கை அரசியல் யாப்பில் இடம்பெற்ற பொழுதும் தமிழர் விடுதலைக் கூட்டணி அதனை அரசியல் தீர்வு அல்ல என்று தான் கூறியது.இந்தியா கூட 13 ஆவது திருத்தத்தை கட்டியெழுப்பி அதற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வை காண வேண்டுமென்றுதான் அறிவித்தது.

1987 இல் 13 ஏ சட்ட திருத்தம் மற்றும் மாகாண சபைகள் சட்ட வரைவு கொண்டு வரப்பட்ட போது அந்தத் திருத்தம் இலங்கை யாப்பை மீறுகிறதா இல்லையா? எனக் கருத்துக் கூறுமாறு ஜேஆர் ஜெயவர்த்தனவின் அரசு யாப்பு விதி 121 இன் பிரகாரம் உச்ச நீதிமன்றத்தைக் கேட்டது.

இந்திய – இலங்கை உடன்பாட்டின் தலைவிதி இந்த ஒன்பது நீதியரசர்களின் கையில் இருந்தது.

மொத்தம் 9 பேர் கொண்ட உச்ச நீதிமன்றம் இதனை ஆராய்ந்தது. ஆமாம் ஒற்றையாட்சி முறையை 13ஏ சட்டத் திருத்தம் மீறுகிறது எனவே இது சமஷ்டி அரசியல் யாப்பு, நாடாளுமன்றத்தில் இரண்டில் மூன்று பெரும்பான்மையோடு நிறைவேற்றினால் மட்டும் போதாது பொதுமக்கள் வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என 4 நீதியரசர்கள் தீர்ப்பு எழுதினார்கள்.

இல்லை சட்டத் திருத்தமும் ஒற்றையாட்சி யாப்பை மீறவில்லை, எனவே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றினால் அது போதும் என 4 நீதியரசர்கள் (பிரதம நீதியரசர் எஸ். சர்வேந்திரா உட்பட) தீர்ப்பளித்தார்கள்.

ஒன்பதாவது நீதியரசர் பரிந்த இரணசிங்கி பிரதம நீதியரசர் சர்வானந்தா அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டாலும் மசோதாவில் உள்ள இரண்டு விதிகள் (154G(2)(b) and (3)(b)) காரணமாக மக்களது வாக்கெடுப்புக்கு விட வேண்டும் எனத் தீர்ப்பளித்தார்.

அன்றிருந்த அரசியல் நெருக்கடியில் ஜேஆர் ஜெயவர்த்தன பொது மக்கள் வாக்கெடுப்பைத் தவிர்க்க நினைத்தார். அவரது பிரதமர் இரணசிங்க பிரேமதாசா, பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி போன்றோர் இலங்கை – இந்திய உடன்பாட்டை கடுமையாக எதிர்த்தார்கள். தனது எதிர்ப்பைக் காட்ட பிரதமர் யப்பானுக்குப் பறந்து போய்விட்டார். எனவே பொதுவாக்கெடுப்பு நடத்தினால் அது தோல்வியில் முடியும் என ஜெயவர்த்தன கணித்ததால் 13A இல் காணப்பட்ட அந்த இரண்டு விதிகளையும் திருத்தி அமைத்தார்.

இதனை அடுத்து 13 ஏ சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக 5 நீதியரசர்களும் எதிர்த்து 4 நீதியரசர்களும் இருக்கக் காணப்பட்டார்கள்.

13ஏ யாப்பு திருத்தத்தை 1987 இல் ஏற்று அதில் உள்ள குறைபாடுகளைப் பாராட்டாது தமிழர் விடுதலைக் கூட்டணி நடைமுறைப்படுத்த முன்வந்திருந்தால் எமது மக்களுக்கு எவ்வளவோ நன்மைகள் கிடைத்திருக்கும். வட – கிழக்கை அபிவிருத்தி செய்திருக்கலாம். அப்படிச் செய்யத்தவறியதால் 23 ஆண்டுகள் வறிதே போயின!

ஒற்றையாட்சி முறையுள்ள ஒரு அரசின் யாப்பின் பண்புகளில் முக்கியமானது மத்திய நாடாளுமன்றத்தின் மேலாண்மையை துணைச் சட்டங்களை இயற்றும் இறைமை அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு கொடுக்கப்படாத இடத்து ஒற்றையாட்சி முறைமை பாதிக்கப்பட மாட்டாது. மாகாண சபைகள் இறையாண்மை நிறைவேற்று அதிகாரங்கள் கொண்டவை அல்ல. அவைகள் நாடாளுமன்றத்துக்கு கீழ்ப்படியானவை. நாடாளுமன்றத்தைக் காட்டிலும் மட்டுப்படுத்தப்பட்ட சட்டவாக்க அதிகாரம் கொண்டவை. இதனால் மத்திய நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் எந்த அதிகாரத்தையும் பிரித்துக் கொடுக்கவில்லை. அல்லது சட்டம் இயற்றும் எந்த அதிகாரத்தையும் கைவிடவில்லை.

இந்த இடத்தில் அதிகாரப் பரவலாக்கல் (decentraization)செய்வதற்கும் அதிகாரம் பகிரப்படுவதற்கும் (power – sharing) இடையிலான வேற்றுமையைப் பார்க்க வேண்டும். பரவலாக்கப்படும் அதிகாரத்தை மத்திய அரசு திரும்பப் பெற முடியும். ஆனால் பகிரப்பட்ட அதிகாரத்தை மத்திய அரசு மீளப் பெறமுடியாது. இப்போது வரையப்பட்ட யாப்பில் மாகாண சபைகளுக்கு பகிரப்பட்ட அதிகாரங்கள் மத்திய அரசினால் மீளப் பெறமுடியாது. இது போன்ற விதிகள் இருக்கிற காரணத்தாலேயே இப்போதுள்ள வரைவு சமஷ்டிப் பண்புகளைக் கொண்டாதாக இருக்கிறது. எனவே அந்த வரைவு சட்டமாக்கப்பட வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு பொது மக்கள் வாக்கெடுப்பிலும் 50 விழுக்காட்டுக்கு அதிகமான வாக்குகள் ஆதரவாகக் கிடைக்க வேண்டும்.

எல்லாம் சரி. இந்த வரைவு இந்த இரண்டு தடைகளையும் தாண்டுமா? என்ற கேள்வி எழுகிறது. நாடாளுமன்றத்தில யாப்பு நிறைவேற 150 வாக்குகள் தேவைப்படும். ஐதேக உறுப்பினர்கள் 107, சிறிங்கா சுதந்திரக் கட்சி 26, ததேகூ 16, மக்கள் விடுதலை முன்னணி 05 ஆக மொத்தம் 154 உறுப்பினர்களது ஆதரவு இருக்கிறது. ஆனால் அண்மைக் காலமாக சனாதிபதி சிறிசேனா யாப்பு வரைவு பற்றி இழுத்தடிப்பு செய்து வருகிறார்.

ஐநா சபையில் புதிய யாப்பு வரைவு பற்றி அவர் மூச்சே விடவில்லை. மொத்தத்தில் ஒரு சமயம் நம்ப முடியாமல் இருக்கிறது. இன்னொரு புறம் அவரை நம்பலாம் போல் படுகிறது. மகாவலி அபிவிருத்தி எல் வலையத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றத்தை நிறுத்துமாறு சனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அரசியல் கைதுகள் தொடர்பாக விரைந்து முடிவெடுப்பதாகச் சொல்கிறார். இராணுவம் கைப்பற்றி வைத்திருக்கும் தனியார் காணிகளை இந்து ஆண்டு முடிவுக்குள் அவற்றின் சொந்தக் காரர்களிடம் ஒப்படைக்குமாறு கண்டிப்பான உத்தரவை சனாதிபதி சிறிசேனா பிறப்பித்துள்ளார்.

இப்போதுள்ள யாப்பு வரைவு நிறைவேற்றப்பட்டால் அதில் இணைப்பாட்சிக்குரிய பண்புகள் இருக்கும். ஆனால் சமஷ்டி என்ற பெயர்ப்பலகை இருக்காது. எமக்கு வேண்டியது பணியாரம். உருவம் எப்படியிருந்தாலும் உள்ளடக்கம் சரியாக இருந்தால் சரியே!

Share the Post

You May Also Like