அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யவேண்டும் -கோடீஸ்வரன் எம்.பி கோரிக்கை

அரசியல் கைதிகளாக குடும்ப உறவுகளை பிரிந்து சிறைகளில் வருடக் கணக்கில் துன்பப்படும் தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் தம்பிலுவில் றேங்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 31 ஆவது ஆண்டு நிறைவுநாள் கிரக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் யுத்த குற்றம் இழைத்தவர்கள் சுதந்திரமாக உலாவரும் நிலையில் மக்களின் விடுதலைக்காக போராடிய வீரர்கள் சிறைகளில் வாடுகின்றார்கள். அவர்கள் விடுதலை செய்யப்பட்டு குடும்பங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான சந்தர்ப்பத்தினை வழங்கி அவர்கள் அனைவருக்கும் நாம் மதிப்பளிக்கும் அதேவேளை அவர்களின் விடுதலைக்காக பாடுபட வேண்டிய கடமைப்பாடு நமக்கு இருக்கின்றது.

அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் தொடக்கம் பொத்துவில் வரையான கடலோர பிரதேசங்களில் அச்சுறுத்தலாக இருந்த இல்மனைட் அகழ்வினை ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தடுத்து நிறுத்தி இருக்கின்றேன்.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கான விடுதலையைப் பெற்றுக் கொடுப்பதற்காக அரசுடன் போராடும் அதேவேளை அரசுடன் இணைந்து அபிவிருத்தி வேலைத் திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.

இதனை தமிழ் மக்கள் நன்கு புரிந்து கொண்டு தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தங்களின் ஒத்துழைப்புக்களை வழங்கி கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்றார்.

Share the Post

You May Also Like