பிரபாகரன் தற்போது இல்லை! அரசியல் கைதிகளை விடுதலை செய்க!! – பிரதமரிடம் சார்ள்ஸ் கோரிக்கை

“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தற்போது இல்லை. எனவே, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்.”

– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று கோரிக்கை விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்.

நாடாளுமன்றத்தில் இன்று (10) நடைபெற்ற பிரதமரிடமிருந்து நேரடிப் பதிலைப் பெற்றுகொள்வதற்கான கேள்வி – பதில் நேரத்தின்போதே சார்ள்ஸ் எம்.பியால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சார்ள்ஸ் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,

“தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, அவர்களை விடுதலை செய்யும் அரசியல் தீர்மானமொன்றை அரசு எடுக்கவேண்டும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பிரபாகரனுக்கும் இடையே 2001 – 2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், தமிழ் அரசியல் கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டனர். தற்போதும் அவ்வாறு செய்யப்படவேண்டும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஒரு மேடையில் அமர்ந்து பேச்சு நடத்திய அரசியல் தீர்மானமொன்றை எடுக்கவேண்டும். தற்போது பிரபாகரன் இல்லை.எனவே, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்” – என்றார்.

Share the Post

You May Also Like