அஹிம்சை வழியில் போராடியிருந்தால் சுயாட்சி எப்போதோ கிடைத்திருக்கும்! – தவறிழைத்துவிட்டோம் என்கிறது கூட்டமைப்பு

“1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கிடைக்கப் பெற்ற நாடாளுமன்ற ஆசனங்களை வைத்து அஹிம்சை ரீதியில் நாம் போராடியிருந்தால் சுயாட்சி எப்போதோ கிடைக்கப் பெற்றிருக்கும். நாம் தவறிழைத்துவிட்டோம்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“1977ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வடகிழக்கில் ஓர் ஆசனத்தை தவிர ஏனைய ஆசனங்களை கூட்டணி கைப்பற்றியிருந்தது. அரசுக்கு எதிராக சட்டமறுப்புப் போராட்டங்களை, தமிழ் மக்களின் அடக்குமுறைக்கு எதிரா காந்திய வழியில் சத்தியாக்கிரகப் போராட்டங்களை முன்னெடுத்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் குறுகிய காலத்தில் எமக்கான சுயாட்சியைப் பெற்றிருக்க முடியும். பெரிய அளவில் வன்முறைகளுக்கு நாம் முகம் கொடுத்திருக்கவேண்டியும் ஏற்பட்டிருக்காது. எமது போராட்டத்தில் நாம் தவறிழைத்துவிட்டோம்.

தேசிய பிரச்சினைக்குத் தீர்வைக் காண அரசு உறுதி வழங்கியது. அதனை நிறைவேற்ற அரசு இன்றுவரை தவறிவிட்டது. இதற்கு எதிராக தமிழ் மக்கள் அஹிம்சை ரீதியில் போராட்டத்தில் குதிப்பார்கள். எமக்கான தீர்வுகளை நாம் பெற்றுக் கொள்வோம்” – என்றார்.

மாவை சேனாதிராஜா

இந்த விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சோ.மாவை சேனாதிராஜா,

“தமிழ் அரசியல் கைதிகள் காந்தியின் வழியில் போராடுகின்றனர். அன்று எமது விடுதலைக்காக தியாக தீபம் திலீபன் அஹிம்சா வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு தனது உயிரைத் தியாகம் செய்தான். எமது தரப்பு அன்று ஆயுதம் ஏந்தியிருக்கலாம். ஆனால், நாம் எமது தீர்வுகளை அஹிம்சை வழியில் காண்பதற்கே முயல்கின்றோம். காந்தி இலங்கை வந்தபோது, இந்திய விடுதலைக்காக தமிழ் மக்கள் நிதி திரட்டிக் கொடுத்தார்கள்” – என்றார்.

சுமந்திரன்

இந்த விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

“1977ஆம் ஆண்டு காலத்தில் அப்போதைய தமிழ்த் தலைவர்கள் அஹிம்சை ரீதியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால் இளைஞர்கள் தவறான வழியில் பயணித்திருக்க மாட்டார்கள் என்று என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறியது என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவர் மனவேதனையுடனேயே சபையில் இதனைத் தெரிவித்துள்ளார். சிறைச்சாலையில் உள்ள தமிழ் இளைஞர்கள், தமது இறுதி ஆயுதமாக மகாத்மா காந்தியின் அஹிம்சைப் போராட்டத்தையே கையில் எடுத்துப் போராடுகின்றனர்” – என்றார்.

Share the Post

You May Also Like