சம்பந்தன் தலைமையில் அவசரமாக நாளை கூடுகின்றது கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு!

பிரதமர் பதவி விவகாரத்தால் நாட்டின் அரசியல் குழப்ப நிலை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு நாளை வெள்ளிக்கிழமை கொழும்பில் அவசரமாகக் கூடுகின்றது.

இந்தத் தகவலை கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் இன்று காலை உறுதிப்படுத்தினார்.

பிரதமர் பதவிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபித்துக் காட்டுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவும் மஹிந்த ராஜபக்ஷவும் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றனர்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அரசியல் குழப்பங்கள் ஏற்பட்ட பின்னர் முதலில் ரணில் விக்கிரமசிங்கவையும், பின்னர் மஹிந்த ராஜபக்ஷவையும் நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

எனினும், இரண்டு தரப்புகளும் கூட்டமைப்பின் ஆதரவைக் கோரியுள்ள போதிலும், புதிய அரசமைப்பு உருவாக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பது மற்றும் ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது ஆகிய இரண்டு கோரிக்கைளுக்கும் இணங்கி எழுத்துமூலமான உறுதியை வழங்கினாலேயே எந்தத் தரப்புக்கு ஆதரவளிக்க முடியும் என்று கூட்டமைப்பு உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது.

இந்த விடயங்களை உள்ளடக்கியதாக இதுவரை நடத்தப்பட்ட பேச்சுக்களில் எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை.

அதேவேளை, நேற்றுமுன்தினம் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் யாருக்கு ஆதரவு அளிப்பது என்று இறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில், கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலைவரங்கள் தொடர்பாகவும், கூட்டமைப்பு எடுக்க வேண்டிய நகர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Share the Post

You May Also Like