கூட்டமைப்பு இன்னமும் எவர்க்கும் ஆதரவில்லை; ஜனாதிபதியின் செயல் அரசமைப்புக்கு முரண்! – சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற முடிவை  எடுக்கவில்லை. உரிய நேரத்தில் நாம் சிந்தித்து ஒரு நல்ல முடிவை எடுப்போம். ஆனால், ஜனாதிபதியின் செயற்பாடு அரசமைப்புக்கு முரணானது.

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன்.

நாடாளுமன்றத்தில் இன்று கட்சித் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சபாநாயகர் கரு ஜயசூரியா சந்தித்தார். அந்தக் கூட்டத்தில் 118 இற்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற கூட்டம் முடிவடைந்த பின்னர், ஊடகவியலாளர்களிடம் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தவை வருமாறு:-

இந்தக் கூட்டம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான கூட்டம் என்று நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ளவேண்டாம். இந்தக் கூட்டத்தை சபாநாயகரிடம், நாடாளுமன்றை உடன் கூட்டுமாறு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுத்துமூலம் வேண்டியதற்கமைவாக எம்மைச் சந்தித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி அரசமைப்புக்கு முரணாக – ஜனநாயகத்துக்கு விரோதமாக – புதிய பிரதமரை நியமித்தமை சட்டவிரோதமான செயற்பாடு என்று அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக வலியுறுத்தினோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற எந்த முடிவையும் எ?டுக்கவில்லை. மிகவும் நிதானமாக ஆராய்ந்து எமது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு உரிய நேரத்தில் சரியான முடிவை எடுப்போம். – என்றார்.

Share the Post

You May Also Like