சின்னஞ்சிறு கிளியே….!

களியாட்ட நிகழ்வுகள் மற்றும் விருந்து வீடுகளில் குழந்தைகளுக்கென்றொரு உலகம் இருக்கும். அது எப்போதும் கொண்டாட்டமாக இருக்கும். துள்ளிக்குதித்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் ஓடித்திரிவார்கள். தங்களை எல்லோரும் பார்க்கவேண்டும் என்பதற்காக எப்படி எப்படியெல்லாமோ கூத்தடிப்பார்கள். ஊரில் நடைபெறும் இப்படியான நிகழ்வுகளில், எங்களது பின்வீட்டு சிறுவன் ஒருவன் அவனது தாத்தாவின் தொப்பையின் மீது ஏறி சறுக்கீஸ் விளையாடுவான். அவனுக்காகவே தனது தொப்பையை வளர்த்து வைத்திருப்பதைப்போல அவனது விளையாட்டுக்களை பார்த்து ரசித்து விளையாடுவார் தாத்தா. சிலவேளைகளில் தாத்தா எதிர்பாராத விதமாக எங்கிருந்தாவது ஓடிவந்து அவரது தொப்பையின் மீது தொப்பென்று குதிப்பான். “தொலைந்தான் கிழவன்” – என்று நாங்கள் உன்னி எழும்பும்போது தாத்தா சிரித்துக்கொண்டு எழுந்து அவனை கட்டிப்பிடித்து தனது கற்றை மீசை குத்தும்படியாக ஒரு முத்தமிடுவார். அவன் திமிறிக்கொண்டு ஓடுவான்.

யாழ்ப்பாணத்தில் “காங்கிரஸ் குழந்தை ஒன்று” போடுகின்ற கும்மாங்குத்துக்களை பார்க்கும்போது இந்த ரக ஞாபகங்கள் ஏனோ நினைவை கிளறிவிட்டுப்போயின.

தற்போதைய சிறிலங்கா அரசியல் நிலமையை எப்படித்தீர்ப்பது? யாருக்கு ஆதரவு கொடுப்பது? யாருக்கு பிடரியை பொத்திக்கொடுப்பது என்பது உட்பட எதுவுமே யாருக்கும் தெரியாது. அதற்கான காரணம், சம்பந்தப்பட்டவர்களின் ஆளுமைக்குறைபாடோ ஆற்றல் பற்றாக்குறையோ அல்ல. ஏற்படுத்தப்பட்டிருக்கும் குழுப்பமும் அது நிகழ்ந்துகொண்டிருக்கும் களமும் அப்படி. வெளிநாடுகள் அனைத்தும் முழுகிவிட்டு தலையை துவட்டிப்போட்டு கண்ணாடிக்கு முன்னால் வந்து நின்று பார்ப்பது போல தத்தமது தூதரகங்களுக்குள் உறைந்துபோய் நின்றுகொண்டிருக்கின்றன. யாருடைய கோமணத்தை யார் அவிழ்த்துக்கொண்டோடப்போகிறார்களோ என்று சிங்களத்தரப்புக்கள் அனைத்தும் மூலை முடுக்கெங்கும் எக்ஸ்ட்ரா அண்டர்வெயாரோடு பதுங்கிக்கொண்டு நிற்கின்றன.

சம்பந்தர் தலைமையிலான தமிழர் தரப்பு இயலுமானவரையில் நடப்பு நிலைவரங்களை சரியாக உள்வாங்கி, தற்போது தமிழர்களுக்கு இருக்கின்ற ஒரே ஆதரவு சக்தியான வெளிநாடுகளின் ஆலோசனையோடு முன் நகர்ந்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் சரியான நகர்வுகளை மேற்கொள்வதைவிட, பிழையான நகர்வுகளுக்குள் விழுந்துவிடாமலிருப்பதே வெற்றியும் முக்கியமானதுமாகும். அனுமன் போல வாலில் கட்டிய தீயோடு மொத்த நாட்டையும் எரிப்பதற்கு தாவிக்கொண்டிருக்கிறார் மைத்திரி. இதிலிருந்து மொத்த நாட்டையும் காப்பாற்றுவதுதான் அதிலுள்ள எல்லோருக்கும் தீர்வாகுமே தவிர, அந்த அனுமனுக்கு traffic light போட்டு விளையாடுவதால் அல்ல. அரசியல் முதிர்ச்சியுடையவர்களுக்கு மாத்திரம் விளங்கக்கூடிய சூத்திரம் இது.

இந்தக்கறுமம் எதையும் புரிந்துகொள்ள விரும்பாத கஜேந்திரகுமார் என்ற “குழந்தை” யாழ்ப்பாணத்தில் நின்றுகொண்டு தேத்தண்ணி சந்நதம் போடுகிறார். அதாவது, சம்பந்தர் மகிந்தரோடு போய் தேத்தண்ணி குடிச்சது பிழையாம். மகிந்தரை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சம்பந்தர் தேத்தண்ணி குடித்திருக்கவேணுமாம். சரி, சம்பந்தரின் வீட்டில் மகிந்த வந்து அந்த பாழாப்போன தேத்தண்ணியை குடித்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்? “நாங்கள் அப்பவே சொன்னோம் பார்த்தீர்களா, வீட்டுக்கு வந்து தேத்தண்ணி குடித்துவிட்டுப்போகுமளவுக்கு சம்பந்தன் – மகிந்த உறவு இருக்கிறது” – என்று.

ஆக, எந்த brand பால் குடுத்தாலும் அழுதுகொண்டே இருப்பார் எங்கள் கஜன் எனும் பேரன் OF பொன்னம்பலம்!

சரி –

இவை எல்லாவற்றையும்கூட எங்கள் பின்வீட்டு தாத்தாபோல சிரித்துவிட்டு கடந்துபோய்விடலாம். ஏனெனில், குழந்தை பாவம் இப்போதுதான் பூகோளத்துக்கும் பூலோகத்துக்கும் வித்தியாசம் தெரியாத அரசியலில் தவழ்கிறது என்று.

ஆனால், இதற்கு முதல், யாழ்ப்பாணத்தில் வைத்த இன்னொரு ஊடகவியலாளர் மாநாட்டில் “இந்தக்குழந்தை” திருவாய் மலர்ந்த ஒரு கருத்தை கேட்டேன். அப்படியே கட்டிஅணைத்து முத்தமிட்டு பாரதியார் பாடல் ஒன்றையே பாடிவிடலாம் போலிருந்தது.

அதாவது, தமிழரசுக்கட்சியை “தாங்கள்” ஒரு கட்சியாக மதிப்பதாகவும் ஆனால் அதன் தலைமைத்துவம்தான் தவறிழைப்பதாகவும் “குழந்தை” கஜன் கூறுகிறார். பரவாயில்லை, இது அவர் ஒவ்வொரு நாளும் பாடுற தேவாரம்தானே என்று விட்டுவிடாலாம் என்று பார்த்தால் பிறகு இன்னொன்றை சொன்னார்.

உண்மையான தேசப்பற்றுள்ள உறுப்பினர்கள் பலர் உள்ள கட்சி தமிழரசுக்கட்சியாம். ஆனால், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளான புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகியவை எல்லாம் அப்படியானவை இல்லையாம். தமிழரசுக்கட்சிபோல உருவான கட்சியில்லாமல் அவை உருவாக்கப்பட்ட கட்சிகளாம். இந்தியா போன்ற சக்திகளால் அவர்களது தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட கட்சிகளாம்.

மொத்தத்தில் அந்தக்கட்சிகளது தேப்பற்று என்ன என்பது தனக்கு தெரியும் என்பதுபோலவும் உரசிப்பார்த்து தெரிந்துகொள்ளுமளவுக்கு தனக்கு அரசியல் ஆற்றல் உள்ளதுபோலவும் ஒரு வெடியை கொழுத்திப்போடுகிறார்.

முதலில், கஜேந்திரகுமாருக்கு புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகள் ஈழப்போராட்டத்தில் வகித்த பங்கு என்ன என்று முழுமையாக தெரியுமா? அந்த அமைப்புக்களின் சார்பாக ஆயுதம் ஏந்தி உயிர் நீத்த போராளிகளைப்பற்றியதாவது ஏதாவது தெரியுமா? அவற்றில் அங்கம் வகித்தவர்கள் புரிந்த தியாகத்தின் கால்தூசுக்காவது கஜேந்திரகுமாரின் கட்சி இன்றுவரைக்கும் மக்களுக்கு ஏதாவது செய்திருக்கிறதா? அந்தக்கட்சிகளின் கறைபடிந்த வரலாறுகள் – சம்பவங்கள் – துரோகங்கள் எல்லாவற்றையும் விட்டுவிடுவோம். அதைப்பற்றி கதைக்கவேண்டுமென்றால் தமிழ் காங்கிரஸின் வரலாறையும் தூக்கி கதைப்பதற்கும் கஜேந்திரகுமார் தயாராகவேண்டியிருக்கும்.

இது பற்றி எந்த தெளிவும் இல்லாமல் – குருட்டுத்தனமாக – அரைகுறை அறிவுடன்தான் மாவீரர் தினத்தில் எல்லாப்போராளிகளையும் நினைவுகூரவேண்டும் என்று அண்மையில் அறிக்கை விடுத்தாரா?

டக்ளஸ் சொன்னதுபோல, யாழ்ப்பாணம் பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிட்டால் துரையப்பா ஸ்டேடியத்துக்கு எப்படிப்போறது என்பதுகூட தெரியாத குழந்தையாக சம்பந்தர் மீது துள்ளி விளையாடிக்கொண்டிருக்கும் கஜேந்திரகுமாருக்கு இப்படிப்பட்ட அறிக்கைகள் தேவைதானா?

கஜேந்திரகுமார் தனது நோக்கம் என்ன என்பதை வெளிப்படையாக பேசலாமே?

இன்னும் இருபது வருடங்களில் தான் மாத்திரம் ஈழத்தமிழர்களது அரசியலில் கோலோச்சவேண்டும் என்பது கஜேந்திரகுமாரின் தொலைநோக்குத்திட்டம். சம்பந்தரின் அரசியல் காலம் முடிவடைந்த நிலையில், சுமந்திரனோடுதான் தான் போட்டிபோடவேண்டிவரும் என்பது கஜேந்திரகுமாருக்கு நன்றாகவே தெரியும். ஆக, அப்போதைய நிலையில் கூட்டமைப்பு என்பது வலுவோடு இருந்தால் தான் அரசியல் செய்யமுடியாது. அதற்காக, கூட்டமைப்பிலிருந்து ஒருவாறு senior சுரேஷை கழற்றியாயிற்று, இப்போது விக்கியரையும் கழற்றியாயிற்று. இனி என்ன, அங்கு ரெலோ – புளொட் – ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய கட்சிகள் இருக்கும்வரைக்கும் கஜேந்திரகுமார் அங்கு திரும்பிபோனாலும் விறாந்தையில்தான் படுத்திருந்துவிட்டு வரவேணும். ஆக, அங்கிருக்கும் மிச்ச ஆட்களையும் அடுத்த பத்து வருடங்களுக்குள் கழற்றிவிட்டால், தனியே சுமந்திரனோடு போட்டி போட்டு, தமிழரசு கட்சியை ஆட்டையை போடலாம். அதுக்காக, தமிழரசுக்கட்சியை இப்போதே தூக்கிப்பிடித்துக்கொண்டு பக்கத்திலிருக்கும் கட்சிகளுக்கு அடிபோடுவாரம். அப்படியே தனது காலத்தில் பாட்டனின் காங்கிரஸ் கட்சிக்கும் ஒருமாதிரி வெள்ளையடித்து மாற்றிப்போடுவாராம்.

இந்த திட்டத்தை கஜேந்திரகுமார் வெளிப்படையாகவே சொல்லலாமே! ஏன் பூகோளம் பாதாளம் என்றெல்லாம் பூராயம் பேசவேணும்.

அடுத்தவனை விழுத்தி அரசியல் செய்வது என்பது அரசியலின் ஒரு பகுதிதான். அதனை செய்யாமல் அரசியல் செய்யமுடியாதுதான். ஆனால், அதனை மாத்திரமே அரசியலாக செய்துகொண்டிருக்க முடியாது.

தங்களால்தான் தியாகங்களை செய்ய முடியாது என்றாலும் மற்றவன் செய்த தியாகத்தையும் உழைப்பையுமாவது மதிக்க தெரிந்திருக்கவேண்டும். அந்தப்பண்பு வெறும் வேட்டியை கட்டிக்கொண்டால் மாத்திரம் வந்துவிடாது. செயல் மாண்பில் காண்பிக்கவேண்டும். இதனை சிறுவயதிலேயே கற்றுக்கொள்வது முக்கியம்.

அப்புறம், ஒருநாள் பின்வீட்டு விருந்துக்கு போயிருந்தபோது வழக்கம்போல அந்த சிறுவன் துடியாட்டமாக ஓடித்திருந்துகொண்டிருந்தான். நான்போன நேரம் பார்த்து,சின்னஞ்சிறு கஜனே….! அவனது தாத்தாவின் பின்னால் ஓடிப்போய் கழுத்தை கட்டிப்பிடித்தான். அந்த மனுசன் அன்றைக்கென்று என்ன கோபத்தில் இருந்ததோ தெரியவில்லை. வேட்டியில் கட்டியிருந்த பெல்ட்டை கழற்றி விட்டுதே பாருங்கள் ஒரு அடி. அடி அல்ல அது இடி! ஒரு குழந்தை என்றும் பாராமல்…….!!

ப.தெய்வீகன்

Share the Post

You May Also Like