சிங்களத் தலைவர்கள் பற்றி எச்சரிக்கையாய் இருங்கள் என்று எல்லோரும் சொன்னார்கள்-தமிழரசுக்கட்சி!

தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் ஒரு கட்சி தீர்வை முன்வைக்கின்ற போது மற்றைய கட்சி எதிர்த்த வரலாறுதான் இருக்கிறது. அவ்வாறில்லாமல் தேசிய அரசாங்கத்தில் சேர்ந்து அதனைச் செய்யவிருந்த நேரத்தில் அதற்குக்காரண கர்த்தாவாக இருந்த ஜனாதிபதியவர்கள் குழப்பியிருக்கிறார். சிங்களத் தலைவர்கள் பற்றி எச்சரிக்கையாய் இருங்கள் என்ற எச்சரிக்கை குறித்தே நினைவு கொள்ளத் தோன்றுகிறது என்று தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

கடந்த ஒக்ரோபர் 26-ம் திகதி ஏற்பட்ட அரசியல் குழப்பம் மக்களை எவ்வாறு பாதித்திருக்கிறது என்பது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மட்டக்களப்பு மாவட்டம் தழுவியதாக மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் நடைபெற்ற ஊடக சந்திப்பு தீபாவளி தினமான செவ்வாய்ககிழமை (06) மட்டக்களப்பிலுள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச் சந்திப்பில் புளொட் அமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்ட உதவி இணைப்பாளரும் வவூணதீவு பிரதேச சபையின் உப தவிசாளருமான பொன்னம்பலம் செல்லத்துரை (கேசவன்), ரெலோ அமைப்பின் சார்பில் உப தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித்தவிசாளருமான இந்திரகுமார் நித்தியானந்தன் (பிரசன்னா), அமைப்பின் பொருளாளரும் முன்னாள் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா), தமிழரசுக்கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா ஆகியோர் பங்கு கொண்டனர்.

தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் மேலும் தெரிவிக்கையில்.,

புதிய அரசியலமைப்பின் இறுதி வடிவத்திற்கு முன்னதான நிபுணர் குழு அறிக்கையினை ஜனாதிபதியின் ஆசியுடன் பாராளுமன்றத்தில் நாளை முன்வைக்க இருந்தார்கள். மிகவும் அவதானமான நடவடிக்கைகளின் மூலமாக இந்த நிலைமைக்குக் கொண்டு வருவதற்கு எங்களுடைய கட்சி மிக முயன்றது.

ஒரு சில நாட்கள் இருக்கின்ற சூழலில் குழப்பப்பட்டிருக்கிறது. பாராளுமன்றம் அமர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஜனாதிபதி முழு அதிகாரங்களையும் தன்னகத்தே வைத்துக்கொண்டிருக்கின்றமையானது கவலை. 19வது திருத்தத்திற்கு அமைய அவர் நடந்து கொள்ளவில்லை என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு ஆங்கிலம், தமிழுக்கும் உள்ள வேறுபாடுகள் பற்றிப் பேசப்பட்டாலும், சொல்லுக்கு அப்பால் ஒரு சட்டத்திற்கான வியாக்கியானம் என்பது அந்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட நோக்கத்தை அடிப்படையாக இருக்கும் என்பதுதான் சட்ட பொருள்கோடல் தொடர்பாக அறிஞர்கள் கூறும் கருத்தாகும்.

19 வது திருத்தச் சட்டம் வருவதற்கு முன்பு ஒரு சர்வாதிகார ஜனாதிபதி எவ்வாறு நடந்து கொள்வாரோ அவ்வாறு ஜனாதிபதி நடந்து கொண்டிருக்கிறார். ஜனாதிபதி 19-ஆவது திருத்தச்சட்டத்திற்கு மேலதிகமாகச் செயற்படுகிறார் என்ற அடிப்படையில் அவருடைய செயற்பாடுகளில் பொருந்திக் கொள்ள முடியாது என்ற வகையில் எங்களுடைய கட்சி தீர்மானத்தினை வெளியிட்டிருக்கிறது.

ஜனாதிபதிக்கு மீண்டும் ஒரு கோரிக்கையை விடுக்கிறோம். அவரை அவருடைய அணியில் இருந்து வெளியே வரச் செய்தது ஜனநாயக அடிப்படையிலேயே, அவ்வாறான ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த ஒருவரையே திருமபவும் பிரதமராக நியமித்திருக்கிறார். எந்த அச்சுறுத்தல் ஏற்படக்கூடாது என்பதற்காக முன்வந்தாரோ அதே ஜனாதிபதியவர்கள் காரண கர்த்தாவாக வந்திருப்பது கவலையளிக்கிறது.

70 வருட கால தமிழர்களுடைய அரசியல் வரலாற்றிலே பல்வேறு முயற்சிகளை எடுத்திருக்கிறோம். அவ்வாறான முயற்சிகளிலே ஒரு கட்சி தமிழ் மக்கள் சார்பாக தீர்வை முன்வைக்கின்ற போது மற்றைய கட்சி எதிர்த்த வரலாறுதான் இருக்கிறது. அவ்வாறில்லாமல் தேசிய அரசாங்கத்தில் சேர்ந்து அதனைச் செய்யவிருந்த நேரத்தில் அதற்குக்காரண கர்த்தாவாக இருந்த ஜனாதிபதியவர்கள் குழப்பியிருக்கிறார் என்பது எங்களுக்கெல்லாம் சொல்லொணா வேதனையையும், இந்தச் சிங்களத் தலைவர்கள் பற்றி எச்சரிக்கையாய் இருங்கள் எச்சரிக்கையாய் இருங்கள் என்று எல்லோரும் சொன்ன நேரத்தில் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவோம் என்று சொன்ன எங்களுக்கு ஒரு வேதனையைத் தந்திருக்கிறது

Share the Post

You May Also Like