ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அமெரிக்கா! – சம்பந்தனுக்கு உறுதி

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்ளிட்ஸ் இன்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தது கலந்துரையாடினார்.


நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் தூதுவரை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன்கடந்த வாரத்தில் பிரதமரை நீக்கியமை உள்ளடங்கலாக இடம்பெற்ற சம்பவங்கள் அரசியலமைப்பிற்கு விரோதமானவையாகும் எனத் தெரிவித்தார்.

மேலும் பாராளுமன்றம் கூடுவதனை காலந்தாழ்ந்த்தும் செயலானது ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராக செய்யப்பட்ட ஒரு செயலை கட்சி தாவும் நபர்களுக்கு பல்வேறு பதவிகளையும் வேறு காரியங்களையும் கொடுத்து சட்டபூர்வமான ஒன்றாக காட்டுவதற்கு வழிவகுக்கின்றது எனவும் தெரிவித்தார். மேலும் உடனடியாக செயற்பட்டு பாராளுமன்றத்தினை கூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தான் சபாநாயகரை எழுத்து மூலமாக கேட்டுக்கொண்டதனையும் இரா. சம்பந்தன் எடுத்துக் கூறினார்.

அரசாங்கமானது தமிழ் மக்களின் பிரச்சினைகளை போதியளவு கையாளவில்லை என தெரிவித்த இரா சம்பந்தன், அரசியல் கைதிகளின் விடுதலை,மீள்குடியேற்றம் புனர்வாழ்வு,படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு,காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை,போன்ற விடயங்களில் அரசாங்கம் மந்த கதியிலேயே செயற்பட்டது எனவும் தெரிவித்தார்.இந்த விடயங்களில் போதியளவு முன்னேற்றம் காணப்படாமையானது தமிழ் மக்களின் மத்தியில் ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு பிளவுபடாத பிரிக்கமுடியாத நாட்டிற்குள் உண்மையான ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வொன்றினை அடைவது அத்தியாவசியம் என்பதனை வலியுறுத்திய இரா சம்பந்தன் , அத்தகைய தீர்வினை அடைய முடியாத பட்சத்தில் இந்த நாடு எதிர்நோக்கியுள்ள எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது போகும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இலங்கை அரசாங்கமானது சர்வதேசத்திற்கும் ஐ.நா.மனித உரிமை பேரவைக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில் அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கை தொடர்பில் ஆக்கபூர்வமான பங்களிப்பினை கொடுக்க வேண்டும் என தூதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கேட்டுக்கொண்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமெரிக்க தூதுவர், ஜனநாயக வழிமுறைகள் பின்பற்றப்படுவதனை அமெரிக்கா வலியுறுத்துகின்றது எனவும் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ஜனநாயக வழிமுறைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் ஐ.நா. மனித உரிமை பேரவை தீர்மானத்தின் நோக்கத்திற்கும் அதன் நடைமுறைப்படுத்தலிற்கும் அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் உறுதியளித்தார்.

சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் அமெரிக்க தூதுவரோடு அமெரிக்க தூதரகத்தின் பிரதி பொறுப்பாளர் ரொபேர்ட் ஹில்டன் மற்றும் அரசியல் பிரிவின் பொறுப்பாளர் அந்தனி ரென்சூலி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Share the Post

You May Also Like