மக்களின் உணர்ச்சியை வெளிப்படுத்தியே வவுனியாவில் நான் உரையாற்றினேன்! – எம்.ஏ.சுமந்திரன்

வவுனியாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நான் ஒருமையில் பேசியமை என்னுடைய உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் பேசவில்லை. மக்களின் ஆழமான உணர்ச்சியை வெளிப்படுத்தவேண்டும் என்பதற்காகவே நான் அவ்வாறு உரையாற்றினேன்.

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

வவுனியாவில் தனது உரை தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

எங்களுடைய மக்கள் மனங்களில் இருக்கின்ற உணர்வு என்னவென்றால் மஹிந்த ராஜபக்ஷவை வெளியேற்றவேண்டும் என்றே அவர்கள் செயற்பட்டுள்ளார்கள். அது 2015 ஆம் ஆண்டுத் தேர்தலில் மட்டுமல்ல, 2010 ஆம் ஆண்டுத் தேர்தலிலும் அவர்கள் மஹிந்தவை வெளியேற்றவேண்டும் என்றே சிந்தித்தார்கள். அதற்காக சரத்பொன்சேகா என்ற ஓர் இராணுவத் தளபதிக்குக்கூட அவர்கள் வாக்களித்திருக்கின்றார்கள். நான் என்னுடைய உரையில் அதைத் தெரிவித்திருந்தேன்.

ஆகவே, எமது மக்கள் எவரை விலக்கவேண்டும் என்று முழுமூச்சோடு பல வருடங்களாகச் செயற்பட்டு தற்போது சாதித்து விலக்கியவரை இவர் மீண்டும் கூட்டிக்கொண்டு வந்து கதிரையில் அமர்த்தியிருக்கின்றார். இந்த விடயம் எமது மக்களின் மனதில் மிகவும் ஆழமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் எங்களுடைய வாக்கினாலே ஏற்படுத்திய மாற்றத்தை இவர் மாற்றியமைத்துவிட்டார். மறுதலித்துவிட்டார். என்கின்ற கோபம் எங்களுடைய மக்களின் மனங்களிலே வெகுவாக இருக்கின்றது.

ஆகவே, அவர்களின் மனங்களில் இருந்த ஆதங்கத்தை – அந்த ஆழமான உணர்வை – நான் வவுனியாவில் எனது உரையில் வெளிப்படுத்தினேனேதவிர, எனது உணர்வைக் கட்டுப்படுத்த முடியாமல் அல்ல. – என்றார்.

 

Share the Post

You May Also Like