உங்கள் நோக்கம் என்ன முன்னணியினரே……?

மாவீரர் என்பதற்கு பதிலாக ஈகையர் என்ற சொல்லா? இனி மாவீரர் தினமும் ஈகையர் தினமென்றுதான் அழைக்கப்படுமோ?

இம்முறை கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி 🚲 ஒழுங்கைமைக்கும் மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வுகளில் “மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு” என்ற சொல்லினை தவிர்த்துவிட்டு “ஈகையர் பெற்றோர் கெளரவிப்பு” என்ற சொல்லினை அறிமுகப்படுத்தி இருப்பது ஏன்?

மாவீரர் என்ற சொல்லினை பாவிப்பதற்கு எந்த தடைகளும் இல்லாதபோது திட்டமிட்டு ஏன் இந்த அடையாள அழிப்பினை கஜேந்திரகுமார் அணியினர் மேற்கொள்கின்றனர்?

ஈழத்தில் ஏனைய கட்சிகளும் அமைப்புக்களும் ஒழுங்கமைக்கும் நிகழ்வுகளில் “மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு” என்ற சொல்லையே பயன்படுத்துகின்றனர் இது காலம் காலமாக பயன்படுத்திவந்த சொல்லாகும் மாவீரர் என்ற சொல்லுக்கு மாற்றீடாக ஈகையர் என்ற சொல்லை ஏன் கொண்டுவருகின்றனர்?

இது ஓர் நுட்பமான புலி நீக்க அரசியலாகவே தோன்றுகின்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியை நாம் விமர்சிக்கிறோம் என்றால் அதற்கான காரணங்கள் இதுதான். தேசியம் பேசிக்கொண்டே தேசியத்திற்கு எதிரான காய் நகர்த்தல்களை மேற்கொள்கின்றனர் இவர்கள்.

எந்த அமைப்பாயினும் மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வொன்றினையோ அல்லது ஏதேனும் நிகழ்வொன்றினையோ ஒழுங்கமைக்கும் போது அதற்கான அறிவிப்பு வெளியிடுதல், பதாகை தயாரிப்பு எல்லாம் அதை ஒழுங்கமைக்கும் அணியினர்தான் மேற்கொள்கின்றனர். எனவே அந் நிகழ்வில் பயன்படுத்தப்படும் பதாகைகளில் என்ன எழுதப்பட வேண்டும் அறிவுப்புக்களில் என்ன சொற்கள் பாவிக்க வேண்டும் என்பதெல்லாம் அந்த அமைப்புக்கள் எடுக்கும் முடிவுகளின் படியேதான் அச்சிடப்படுகின்றன. பயன்படுத்தப்படுகின்றன.

நான் பல்வேறு அமைப்புக்கள் ஒழுங்கமைத்த பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வுகளை அவதானித்ததில் ஒரு விடயம் விளங்கியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒழுங்கமைத்த பங்குகொண்ட எந்தவொரு பெற்றோர் கெளரவிப்பு நிகழ்விலும் “மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு” என அடையாளப்படுத்தவில்லை.

நேற்று முன் தினம் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வில் கூட ஈகையர் பெற்றோர் கெளரவிப்பு என்ற சொல்லையே பாவித்திருந்தனர். அதற்கு முன் மாங்குளம் மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் உதவி வழங்கும் நிகழ்வாக அதை காட்சிப்படுத்தி இருந்தனரேயொழிய மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வாக காட்சிப்படுத்தவில்லை. மாவீரர்களின் படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படவும் இல்லை.

மாவீரர் என்ற சொல்லை இவர்கள் புறக்கணிப்பதற்கு காரணம் என்ன? அச்சொல்லினை பயன்படுத்தவோ காட்சிப்படுத்தவோ எந்த தடைகளும் இல்லையே?

ஜனநாயக போராளிகள் கட்சி பகிரங்கமாக மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு என நிகழ்வினை செய்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு என பெயரிட்டு கெளரவிப்பு நிகழ்வுகளை நடத்துவதோடு மாவீரர் பணிக்குழு என்ற ஒரு அமைப்பையே மாவீரர் நாளினை ஒழுங்கமைக்க உருவாக்கி இருக்கிறது. நிலை இவ்வாறிருக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாத்திரம் ஏன் இதில் விதிவிலக்காக செயற்படுகிறது?

இதுவரை கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவீரர் படங்களை வைத்து அஞ்சலி செலுத்தி ஒரு பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வு நடத்தியதையோ அல்லது மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வு என காட்சிப்படுத்தி ஒரு நிகழ்வினை நடத்தியதையோ உங்கள் யாராலும் சுட்டிக்காட்ட முடியுமா? யாருக்காக மாவீரர் என்ற சொல்லினையும் மாவீரர் படங்களையும் தவிர்க்கின்றனர்?

மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் கெளரவிப்பு என்ற சொல்லையேதான் தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தினர் அவர்கள் எங்கேனும் ஈகையர் பெற்றோர் கெளரவிப்பு என்றோ ஈகையர் என்றோ பயன்படுத்தியதில்லை. புதிதாக இவர்கள் ஏன் அச்சொல்லினை கொண்டுவருகின்றனர்?

கஜேந்திரகுமாரை ஆதரிப்பவர்கள் – தமிழ் தேசியவாதிகளாக உங்களை கூறிக்கொள்பவர்கள் – இவ்வாறான விடயங்களை கவனித்து சுட்டிக்காட்டி அவர்களை திருத்த முயற்சிக்க மாட்டீர்களா? நாளை மாவீரர் தினமும் ஈகையர் தினமென்று பெயர் மாற்றப்பட்டு அனுஸ்ட்டிக்கப்பட்டால் அதனையும் கண்டும் காணாமல் கடந்துபோவீர்களா?

சுப்ரமணிய பிரபா

Share the Post

You May Also Like