பிரதேசசபையின் வினைத்திறனால் ஒளிமயமாகும் வலி.வடக்கு பிரதேசம்!

அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு தற்போது மீள்குடியேற்றப் பிரதேசமாக உள்ள வலி.வடக்கு பிரதேசம், பிரதேச சபை மக்கள் பிரதிநிதிகளினதும் பிரதேசசபை உத்தியோகத்தர்கள், அலுவலர்களினதும் வினைத்திறன் மிக்க செயற்பாட்டால் ஒளிமயமாகின்றது.

வலி.வடக்கு பிரதேச சபையில் 2011 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதிகள் தவிசாளர் சோ..சுகிர்தன் தலைமையில் பொறுப்பேற்று சிறப்பான அபிவிருத்திப் பணிகளை மக்களுக்கு வழங்கியிருந்தனர். அந்த நேரத்தில் பிரதேசத்தின் பல பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இராணுவத்தினரின் வசம் இருந்தன. அந்த நேரத்தில் மக்கள் செறிந்துவாழ்கின்ற பிரதேசங்கள் அனைத்தும் துரித அபிவிருத்திப் பணிகளை வலி.வடக்கு மக்கள் பிரதிநிதிகள் கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையாக மேற்கொண்டிருந்தனர்.

மீண்டும் 2018 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதிகள் சபைக்குத் தெரிவாகி நிர்வாகத்தைப் பொறுப்பெடுத்ததும் அனைத்துக் கட்சிகளாலும் தவிசாளராக சோ.சுகிர்தனே மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார். சபை உருவாக்கப்பட்டதற்குப் பிற்பாடு வலி.வடக்கு பிரதேசத்தில் பல பிரதேசங்கள் நல்லாட்சி அரசால் விடுவிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரதேசங்களும் விடுவிக்கப்பட்டவுடன் அந்தப் பிரதேசத்தில் பல ஆண்டு காலமாக இன்னல்களை அனுபவித்த மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்காக தவிசாளர் சுகிர்தன் தலைமையிலான மக்கள் பிரதிநிதிகள் அபிவிருத்தியின் பெரும் பங்கை மீள்குடியேற்றப் பிரதேசத்துக்கு ஒதுக்கி, உடனடியாக வீதிகள் அனைத்தும் பிரதேச சபையால் துப்புரவு செய்யப்பட்டு, மின்சாரசபையின் உதவியுடன் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மின்சாரம் பெற்றுக்கொடுக்கப்பட்டு, தற்போது வீதிவிளக்குகள் பொருத்தும் பணி இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில், மக்கள் பிரதிநிதிகள் ஆட்சிப்பீடமேறிய 10 மாதங்களில் வலி.வடக்கின் வீதி அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான வீதிகள் (RDA), வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான வீதிகள் (RDD) அனைத்துக்கும் LED மின்குமிழ்கள் வலி.வடக்கு பிரதேசத்தில் 543 பொருத்தப்பட்டுள்ளன. பிரதேச சபை வீதிகளுக்கு சாதாரண மின்குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அதேநேரம், அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை – தொண்டைமானாறு வீதியில் தமது எல்லைப் பிரதேசங்களான மயிலிட்டி, பலாலி வரைக்கும் LED மின்குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் அந்தப் பிரதேசங்களிலுள்ள பெரும்பாலான குறுக்கு வீதிகளும் செப்பனிடப்பட்டும், புதிதாக அமைக்கப்பட்டும் உள்ளன.

நேற்றும் நேற்றுமுன்தினமும் இன்றும் தெல்லிப்பழை சந்தியில் இருந்து மேற்குப் பக்கமாக செல்லும் வீதியில் மின்குமிழ்கள் பொருத்தப்படுகின்றன. இந்த மின்குமிழ்கள் பொருத்தும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுடன் தவிசாளர் சோ.சுகிர்தன், வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான லயன் சி.ஹரிகரன், செ.விஜயராஜ், க.மயூரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதேச சபையின் இவ்வாறான சிறப்பான சேவைக்கு தவிசாளரையும், மக்கள் பிரதிநிதிகளான உறுப்பினர்களையும் தமது கடமை நேரம் தவிர்ந்த இரவு நேரத்தில் அர்ப்பணிப்பாக மக்கள் சேவையாற்றும் பிரதேசசபையின் உத்தியோகத்தர்களையும் பாராட்டுகின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share the Post

You May Also Like