சர்வாதிகாரப் போக்கின்  உச்சநிலையில் மைத்திரி -ஸ்ரீநேசன் எம்.பி

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் ஒன்றாக இணைந்து நின்று கோரினாலும் பெரும்பான்மைப் பலம் உள்ளவரை (ரணில் விக்கிரமசிங்க) பிரதமராக நியமிக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடம்பிடிக்கின்றார். இது அவரின் சர்வாதிகாரப் போக்கின் உச்சநிலையைத் தொட்டுக் காட்டுகின்றது.”

– இவ்வாறு நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போது கடும் விசனத்துடன் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. ஞா.ஸ்ரீநேசன்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தன. ஆனால், இந்தக் கட்சிகளுடன் கலந்துரையாடாமல் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு எதிராகச் செயற்பட்டவர்களுக்கு பதவிகளைக் கொடுத்து அலங்கரித்து சர்வாதிகாரப் போக்குடன் செயற்படுகின்றார் ஜனாதிபதி மைத்திரி. இதன் காரணமாக தமிழ் மக்கள் மத்தியிலிருந்த ஜனாதிபதியின் நன்மதிப்பு இன்று கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதியால் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்றுமுன்தினம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. எனினும், ஜனாதிபதி தனது சர்வாதிகாரப் போக்கைக் கைவிடுகின்றார் இல்லை.

225 எம்.பிக்களும் ஒன்றாக இணைந்து நின்று கோரினாலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் உள்ளவரை (ரணில் விக்கிரமசிங்க) பிரதமராக நியமிக்க முடியாது என்று ஜனாதிபதி அடம்பிடிக்கின்றார். இது அவரின் சர்வாதிகாரப் போக்கின் உச்சநிலையைத் தொட்டுக் காட்டுகின்றது.

அத்துடன், வவுணதீவில் கடந்த வாரம் இடம்பெற்றுள்ள சம்பவமானது நாட்டில் மீண்டும் இனவாதத்தைத் தூண்டிவிடும் செயற்பாடாக நாங்கள் அச்சம் கொண்டுள்ளோம். மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அமைதியான சூழலில் வாழ்ந்தனர். ஆனால், திடீரென இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

திரைமறைவில் தமிழ் மக்களுக்கு எதிரான பிரச்சினைகளைத் தோற்றுவிக்கச் செய்யப்பட்ட சதி நடவடிக்கையாகவே வவுணதீவுச் சம்பவத்தை நாங்கள் சந்தேகிக்கின்றோம்.

அதேவேளை, முன்னாள் போராளிகள் இன்று கைதுசெய்யப்படுகின்றனர். இந்த நிலைமை மாற வேண்டும். முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்” – என்றார்

Share the Post

You May Also Like