மாற்று அணி உடையுமா? ஒட்டுமா?

நக்கீரன்

கஜேந்திரகுமார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது கொள்கை முரண்பாடு காரணமாக அல்ல. அல்லது வேட்பாளர்கள் தெரிவுக்கு  நடந்த போட்டியால் அல்ல. அவர் வெளியேறியதற்குப் புலம் பெயர் நாடுகளில் புலிகளின் பெயரை வைத்துக் கொண்டு – புலிகளின் பெயரில் வாங்கிய சொத்துக்களை அனுபவித்துக் கொண்டு – வாழும்  போலித் தேசியவாதிகளே காரணம். அவர்களின் தூண்டுதலின் பெயரிலேயே கஜேந்திரகுமார் தமிழ்மக்கள் தலைவன் தான்தான் என்ற கனவோடு வெளியேறினார். ஆனால், தமிழ்மக்கள் இன்றுவரை அவரையும் அவரது கனவையும் கலைத்து வருகிறார்கள். 2010, 2015 தேர்தகளில் தோல்வியை அல்ல கட்டுக்காசையே பறிகொடுத்து வருகிறார். தமது ஆதிக்க அதிகாரங்களுக்குச் சவாலாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைத் தகர்ப்பதற்காக அதிலிருந்து  கஜேந்திரகுமார், சுரேஷ், அனந்தி, விக்னேஸ்வரன் ஆகியோரை உடைத்தெடுப்பதில் அந்தப் போலித் தேசியவாதிகள் வெற்றிபெற்றுள்ளனர்.

அந்தப் போலித் தேசியவாதிகளின் மற்றோரு தெரிவான விக்னேஸ்வரனைப் பொறுத்தளவில் அவருக்கு இருந்த செல்வாக்கு பதவி வழி வந்த செல்வாக்குத்தான்.  மக்கள் தொண்டால், மக்களோடான உறவால் வந்தது அல்ல.

விக்னேஸ்வரனுக்கு இராசதந்திரம் என்பது சுத்த சூனியம். தனக்குப் பிடித்த அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஆணைக்குழு நியமிப்பதற்குப் பதில் விக்னேஸ்வரன் ஏனைய அமைச்சர்களான குருகுலராசா, டெனீஸ்வரன், மருத்துவர் சத்தியலிங்கம் என மூன்று அமைச்சர்களையும் சேர்த்து விசாரணை செய்ய ஆணைக் குழு அமைத்தார். ஆனால் அதில் தன்னை மட்டும் தவிர்த்துக் கொண்டார்.

அந்த ஆணைக்குழு ஐங்கரநேசனை மட்டும் ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலக வேண்டும் என பரிந்துரை செய்தது. எஞ்சிய மூவரையும் குற்றமற்றவர்கள் அவர்கள் தங்கள் பணியில் தொடரலாம் என்று சொல்லியது.

ஆனால் விக்னேஸ்வரன் அந்த மூவரையும் பதவி விலகச் சொன்னார். பதவி விலக மறுத்த டெனீஸ்வரனை   தனக்கு நேரடியாக அதிகாரம் இல்லாத போதும் தானே பதவி நீக்கம் செய்தார்.இவையெல்லாம் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள்.  சின்னத்தனமான செயற்பாடுகள். தலைக்கனம் பிடித்த ஒருவரது  இழிவான முடிவுகள்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழிக்கு ஒப்ப  இப்போது நீதிமன்றப் படிகளில் விக்னேஸ்வரன்  ஏறி  இறங்குகிறார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவர் கம்பி எண்ணவும் கூடும்.

விக்னேஸ்வரனுக்கு தலைமைப் பதவிக்கு ஏற்ற பண்புகள் கிஞ்சித்தும் இல்லை. அதை அவரிடம் எதிர்பார்த்தது சம்பந்தன் ஐயா செய்த தவறு. ஒற்றுமை என்ற பெயரில் சம்பந்தன் ஐயாதான் விக்னேஸ்வரனது பதவி பறிபோகாது பார்த்துக் கொண்டார்.

2015 ஆம் ஆண்டு தொடங்கிய அவரது கைத்தடி அமைப்பான தமிழ் மக்கள் பேரவை புலத்தில் உள்ள போலித் தேசியவாதிகளால்  தொடக்கப்பட்டது. அதன் நோக்கங்களைப் படித்தாலே அது புரிந்து விடும். அதன் கூட்டங்களில் வெளிநாட்டில் இருந்துகொண்டு தொலைத் தொடர்பில் பங்குபற்றும் அந்தப் போலித் தேசிய வாதிகள்தான் கட்டளைகளைக் கொடுக்கிறார்கள்.

இந்தப் பேரவை மேட்டுக்குடினராக இருந்து கொண்டு வார இறுதியில் பொழுது போக்குக்குப் பகுதி நேர அரசியல் செய்யும் பேர்வழிகள் மூலம் தொடங்கப்பட்டது.  விக்னேஸ்வரனுக்கு தேவைப்பட்ட ஊன்று கோல் அதுதான். மூன்று ஆண்டுகள் சென்றும் அந்த அமைப்புக்கு ஒரு யாப்பு இல்லை என்றால் எஞ்சியதை  மற்றவர்கள் ஊகித்துக் கொள்ளலாம். வயதானவர்களை ஒதுக்கி புதிய தலைமுறைக்கு வழிவிடத் துடிக்கும் புலம்பெயர் தேசியவாதிகளின் இன்றய புதிய தெரிவுதான்  விக்னேஸ்வரன். விக்னேஸ்வரனுக்கு அகவை  எண்பதாகும். இந்த வயதில் ஒரு அரசியல் கட்சியைக் கட்டி எழுப்பலாம் என்பது பகற் கனவு. கூட்டங்களுக்கே போகாத ஒருவர், வெள்ளிக்கிழமை என்றால் கொழும்புக்கு விமானத்தில் பறந்துவிடும் ஒருவர் காடு,மேடு, ஊர்கள் எனச் சுத்தி அரசியல் செய்ய முடியும் என்பது பகற் கனவு.

இவை  தெரிந்தும் விளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சம் கட்டும்  திருப்பணியில் நிலாந்தன், யதீந்திரா, மு.திருநாவுக்கரசு போன்றவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்!

 

Share the Post

You May Also Like