சிங்கள தலைவர்களைக் கிலிகொள்ள வைத்த சுமந்திரன்!

சுகுணன் குணசிங்கம்

இந்தப்புகைப்படம் கண்ணில் பட்டபோது இவரைப்பற்றி எழுதத்தோன்றிக்கிடந்த குறிப்பொன்று துள்ளிப்பாய்ந்து வருகிறது.

சட்டத்தரணி, பாராளுமன்ற உறுப்பினர், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அச்சாணியென்று சமகாலத்தில் பன்முகத்தன்மை கொண்ட பாத்திரங்களில் உங்களுக்கு பழக்கமான சுமந்திரன் அவர்களைப்பற்றி பகிர எண்ணிய குறிப்பை நான் இவ்வாறு ஆரம்பிக்க விரும்புகிறேன்.

1983 ஜூலை ஒரு நாள் தெஹிவளை கெம்பல் ப்ளேஸில் இருந்த சுமந்திரனின் வீட்டையும் சேர்த்து எரிப்பதற்காக ஒரு கூட்டம் வருவதை அவரது குடும்பம் அறிந்தது. அந்த காடையர் கூட்டம் ஆயுதங்கள் சகிதம் காலி வீதியூடாக வந்தது. ஆனாலும் சுமந்திரனின் வீட்டிற்கு முன்னாலிருந்த பெளத்த விகாரையின் பீடாதிபதி எரியூட்ட வந்தவர்களை தடுத்து திருப்பி அனுப்பினார்.

இதனால் அச்சமடைந்த அவரது குடும்பம் வேறொரு இடத்திற்கு இடம்பெயர்ந்திருந்தது.

பின்னர் அதே கூட்டம் இரவு வேளையில் வேறொரு வழியாக கெம்பல் ப்ளேஸிற்குள் நுழைந்து அங்கிருந்த தமிழர்களின் வீடுகளை எரித்தது.

சுமந்திரனது குடும்பம் ஜூலை கலவரங்களில் தங்களது உயிர்களை மாத்திரம் கையில் பிடித்துக்கொண்டு ஒரு கப்பலில் கடல் வழியாக யாழ்ப்பாணத்தை நோக்கி போனார்கள்.

கொழும்பு துறை முகத்திலிருந்து சிறிது தூரம் சென்றதும் கொழும்புக்கு மேலே புகை மூட்டம் மண்டிக்கிடந்ததை சுமந்திரன் பார்த்தார்.

அந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அவர் கபொத உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருந்தார்.

தனது கனவுகள், புத்தகங்கள் அனைத்தும் ஜூலைக் கலவரத்தின் சுவாலையில் எரியுண்டு போன வலியுடன் அவரது அன்றைய கப்பல் பயணம் இருந்தது.

ஆனாலும் யாழ்ப்பாணத்தில் இருந்தபடி அவ்வருடம் பிந்தி நடத்தப்பட்ட பரீட்சையில் தோற்றி வெற்றிகரமாக சித்தியடைந்து பிறகு என்னவானார் என்பதெல்லாம் சரித்திரம்.

அதிஷ்டவசமாக அன்று தெஹிவளை கெம்பல் வீதியில் எரிந்த தமிழர்களின் வீடுகளில் சுமந்திரனின் வீடு மாத்திரம் தப்பியிருந்தது.

இவை கடந்த ஜூலைக் கலவர நினைவு நாளையொட்டி சுமந்திரன் Sunday Observer பத்திரிகையில் எழுதிய கட்டுரை ஒன்றில் எடுக்கப்பட்ட குறிப்புகள்.

அண்மையில் இலங்கையில் நடந்த பின்கதவு அரசியல் சதியின் போது திடீரென ஒக்டோபர் 26 இல் ரணில் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு பிறகு சில நாட்களில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

பாராளுமன்றத்தை கலைத்தமை சட்டவிரோதமானது, யாப்பிற்கு முரணானது என்பதை கடும் காரசாரமான வார்த்தைகளால் யாழில் நடந்த கூட்டமொன்றில் சுமந்திரன் சொன்னார். அது ஜனாதிபதிக்கான கடுந்தொனியிலான செய்தியாக இருந்தது.

அதன் பின்னர் உச்ச நீதிமன்றில் தொடரப்பட்ட பாராளுமன்றத்தை கலைத்தமை யாப்பிற்கு முரணானது மற்றும் மஹிந்த எந்த அடிப்படையில் பிரதமராக தொடர்கிறார் என்பதை கேள்விக்குட்படுத்தும் மேன் முறையீட்டு நீதி மன்ற மனு என்பவற்றின் பிரதான architect ஆக அவர் இருந்தார்.

அது மட்டுமன்றி இரு வழக்குகளிலும் அவர் நேரடியாக பங்கு கொண்டு முன்வைத்த வாதங்களும் அதீத கவனத்தை ஈர்த்தவை.

இந்த இரண்டு வழக்குகளுமே அவருக்கு வெற்றியாக அமைந்தன. நீண்டகாலமாக சட்டத்துறையில் பணியாற்றி வரும் அவர் சந்தித்த பல வழக்குகளில் இந்த வழக்குகளின் வெற்றி இலங்கை வரலாற்றில் மறக்கமுடியாதவை.

அது மட்டுமல்லாமல் தற்போது எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையிலும் அவரது வகிபாகம் முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழர் தரப்பில் சுதந்திரத்திற்கு பின்னர் தோன்றிய பல அரசியல் தலைவர்கள் பேசப்பட்டிருக்கிறார்கள் SJV முதல் சுமந்திரன் வரை அந்த வரலாறு நீள்கிறது.

நீலன் திருச்செல்வம், லக்‌ஷ்மன் கதிர்காமர் ஆகியோர் சிறந்த புத்திக்கூர்மைமிக்க அரசியல் தலைவர்களாக ஆளும் அரசுகளால் மதிக்கப்பட்டவர்கள். ஆனால் அன்றைய துரதிஷ்ட சூழல் துப்பாக்கி குண்டுகளுக்கு அவர்களை இரையாக்கியது.

இன்று புதிய யாப்பு உருவாக்கத்தில் சுமந்திரனின் வகிபாகம் முக்கியமானது, அவர் தனது இனத்தின் நலன்களை முன்னிறுத்தும் முன்மொழிவுகளை புதிய யாப்பிற்காக சமர்ப்பித்துள்ளார்.

இதனை சிங்களப்பெருந்தேசியம் அச்சத்துடன் பார்க்கிறது. தமிழர்கள் ஆயுதப்போராட்டத்தால் சாதிக்க முடியாமல் போனதை சுமந்திரன் அறிவால் சாதித்து விடுவாரென பிரசாரங்களை செய்து வருகிறது.

சுமந்திரனுடைய அரசியல் பற்றி தமிழ் சமூகத்திற்குள்ளும் விமர்சனங்கள் உண்டு, அதனை தாண்டி ஏனைய சமூகங்களுக்குள் அச்சங்கலந்த ஐயமும் விமர்சனங்களும் உண்டு.

அவற்றிற்கெல்லாம் அப்பால் இலங்கை அரசியல் பரப்பில் பேசு பொருளாக, பாராளுமன்றத்தில் சிம்ம சொப்பனமாக திகழ்வதற்கு சுமந்திரனால் எவ்வாறு இயல்கிறது? என்பதை மாத்திரமே எண்ணி வியக்கின்றேன்!

அவரது அறிவுத்தேடல், விடாமுயற்சி, சொந்த இனத்தின் மீது விழுந்த அடி என்பன அவரை வீறு கொண்டெழச்செய்திருக்கின்றன!

நடந்து முடிந்த சதியினை தமிழர் நலன் சார்ந்த அரசியலோடு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் அதனை ஒரு ஜனநாயக போராட்டமாக மாற்றிய பங்கு TNA க்கும் உண்டு . அதில் பிரதான பாத்திரமேற்றவர் சுமந்திரன்.

இதற்கு சான்றாக ஐதேமு அரசு அமைவதற்கு TNA ஆதரவென கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய போது TNA இற்கும் UNP இற்குமிடையே கள்ள ஒப்பந்தம் கைச்சாத்தானது. அதனை வெளியில் கொண்டு வரவேண்டுமென சிங்கள பெருந்தேசியவாதிகள் கூக்குரலிட்டனர்.

சம்பந்தன் ஐயாவின் போலிக்கையெழுத்துடன் சிங்களத்தில் தயாரிக்கப்பட்ட ஒப்பந்தங்களை பரவ விட்டனர்.

நாங்கள் எந்தவொரு தனிப்பட்ட நலன்களுக்காகவும் UNF இனை ஆதரிக்கவில்லை, மாறாக நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டவே உதவி செய்கிறோம். அதற்கு ஒப்பந்தங்களோ, பதவிகளோ அவசியமில்லை என்று சுமந்திரன் சொன்னார்.

அதனை நிறுவுகின்றது போலதான் இணைப்பில் உள்ள புகைப்படம் இருக்கிறது.

ரணில் பிரதமராக மீண்டும் பதவியேற்பதை சாதாரணமாக தொலைக்காட்சியில் அவரும் பார்த்துக்கொண்டிருந்தார்.

ஆட்சியில் பங்கு போடவோ அமைச்சுப்பதவியை பெறவோ முண்டியடிக்கவில்லை.

பாராளுமன்றம் என்பது law makers or legislators இற்குரிய சபை என்பதற்கான அர்த்தம் இலங்கை நாடாளுமன்றத்தை பொறுத்த வகையில் சுமந்திரனை போல மிகச்சில விரல் விட்டெண்ணக்கூடிய உறுப்பினர்களால்தான் காப்பாற்றப்படுகிறது.

இலங்கை அரசியல் பரப்பில் தனது இனம் சார்ந்த அரசியலையும், தேசம் சார்ந்த பொது நலவுகளையும் சாதுர்யமான அறிவாற்றலை கொண்டு வெற்றிகரமாக எதிர் கொள்ள இயலும் என்பதை நிரூபித்துக்கொண்டிருப்பவர் சுமந்திரன்.

Sumanthiran is an inspiration for many and he is critical too.
Mujeeb Ibrahim

Share the Post

You May Also Like