இலங்கைத் தமிழரசுக் கட்சி இளைஞர் அணி தெரிவு!

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இளைஞர் அணி தெரிவு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில், தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்டத் தலைவர் பெ.கனகசபாபதி தலைமையில் நடைபெற்றது.

தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி தொடர்பான வரலாறு தொடர்பில் உரையாற்றிய பெ.கனகசபாபதி, தொடர்ந்து இளைஞர் அணி புனரமைப்புக்காக புதிய நிர்வாகத் தெரிவை ஆரம்பித்துவைத்தார்.

தமிழரசுக் கட்சி இளைஞர் அணி தலைவராக கந்தசாமி பிருந்தாபனை, வலி.தென்மேற்கு பிரதேசசபை தவிசாளர் அ.ஜெபநேசன் தெரிவுசெய்ய அந்தத் தெரிவு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து செயலாளராக சேனாதிராசா கலையமுதனும், பொருளாளராக சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் சுதர்சனும் தெரிவுசெய்யப்பட 15 பேர் அடங்கிய நிர்வாகக் குழுவும் தெரிவுசெய்யப்பட்டது. தலைவர் மானிப்பாய் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவும், செயலாளர் வலி.வடக்கு தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவும், பொருளாளர் சாவகச்சேரி தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவும் காணப்பட்டமையால், அந்தத் தொகுதிகளை விடுத்து ஏனைய தொகுதிகளை உள்ளடக்கி நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சோ.சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாக செயலாளர் எவ்.எக்ஸ்.குலநாயகம், வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான கே.சயந்தன், ச.சுகிர்தன், அ.பரம்சோதி ஆகியோரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

புதிய நிர்வாகத் தெரிவைத் தொடர்ந்து கூட்டத்தில் உரையாற்றிய வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன், புதிய நிர்வாகத்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன், அவர்களது செயற்பாடுகள் வினைத் திறன் மிக்கதாக அமையவேண்டும் என்றும் அவர்களது நேரிய செயற்பாட்டுக்காக ஒரு லட்சம் ரூபா அடங்கிய காசோலையை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயருக்கு வரைந்து, தமிழரசுக் கட்சியின் பொருளாளரும் யாழ்.மாவட்டத் தலைவருமான பெ.கனகசபாபதியிடம் கையளித்தார்.

Share the Post

You May Also Like