சுய இலாபத்துக்காக கட்சி மாறினால் மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள்: சிறிநேசன்

சுய இலாபத்துக்காக யாராவது கட்சி மாறுவார்களானால் அவர்களுக்குரிய தண்டனை வாக்குச்சீட்டுகள் மூலம் மக்களால் வழங்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

கம்பெரலிய திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்துக்குட்பட்ட மகிழவெட்டுவானில் புனரமைக்கப்பட்ட கொங்கிறீட் வீதியினை மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மஹிந்த ராஜபக்ஷவினால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயகத்தின் வழியில் நின்று தோற்கடித்துள்ளது.

அந்த விடயத்தில் எமக்கு யார் வெல்வது என்பது முக்கியமல்ல, யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே எமது இலக்காக இருந்தது. அந்த வகையில் எமது இலக்கு மஹிந்த ராஜபக்ஷவும் அவர்களது அணியாகவுமே இருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிருந்து பிரிந்து தேசியக் கட்சிகளில் சேர்ந்தவர்களின் நிலை என்னவென்று கடந்தகால அரசியல் வரலாறுகள் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளன.

ஒக்டோபர் 26இல் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்ட போது மஹிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பினரையும் விலை பேசினார்.

இந்நிலையில், தங்களது சுய இலாபத்துக்காகவும் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும் யாராவது கட்சி மாறுவார்களானால் அவர்களுக்குரிய தண்டனை வாக்குச்சீட்டுகள் மூலம் வழங்கப்படும்” என ஞா.சிறிநேசன் மேலும் தெரிவித்தார்.

Share the Post

You May Also Like