மஹிந்த கட்சியுடன் ஒருபோதும் கூட்டமைப்பு இணையாது – ஞா.சிறிநேசன்

எந்த அடிப்படையிலும் மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியுடன் இணைந்துகொள்ளும் வாய்ப்பு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இல்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு சில நிபந்தனையின் அடிப்படையில் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கவேண்டிய சூழ்நிலையுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்காடு, இறக்கத்துமுனையில் கம்பிரலிய திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட வீதி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வீதியினை திறந்து வைத்ததன் பின்னர், உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், ”ஒக்டோபர் 26ஆம் திகதி சூழ்ச்சிகரமான முறையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகினார். தனது பெரும்பான்மையினை நிருபிப்பதற்காக ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் 50கோடி ரூபாய் இலஞ்சம் வழங்கி அவர்களை வாங்குவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்தார்.

எனினும், சிறுபான்மை கட்சிகள் கன்னியமாக நடந்துகொண்டன. அதேபோன்று ஜே.வி.பி. யும் கன்னியமாக நடந்துகொண்டது. இந்த கட்சிகளில் உள்ளவர்களை பணத்தினை, அமைச்சு பதவியினைக்கொடுத்து விலைக்கு வாங்கமுடியாத நிலை காணப்பட்டது.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரை அமைச்சு பதவியினைப்பெற்று மறுபக்கம் சென்ற நிலையில், அந்த அரை அமைச்சினால் எதனையும் சாதிக்க முடியாது அதுவும் இல்லாமல்போய்விட்டது.

கடந்த கால ஆட்சிக்காலத்தில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டனர், படுகொலைசெய்யப்பட்டனர், கொத்துக்குண்டுகளைப்போட்டு அழிவுகளை ஏற்படுத்தினார்கள். இவர்களுக்கு எதிராக வாக்கு கேட்டே நாங்கள் தெரிவுசெய்யப்பட்டோம். அதனால் எந்த அடிப்படையிலும் மகிந்தராஜபக்ஷ கட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்துகொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை.“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share the Post

You May Also Like